கட்டுரைகள்

தவறின்றித் தமிழ் எழுதுவோமே? – பகுதி – 3 – ஆ

பேரா. பெஞ்சமின் லெபோ

முயற்சித்தல் : எப்படிப் பிழை ஆகிறது!

சென்ற  பகுதியின் இறுதியில்,
‘முயற்சித்தல், முயற்சித்தான்…என்பன எப்படிப் பிழைகள் ஆகின்றன எனக் காண்போம்.’ எனக் குறிப்பிட்டு இருந்தேன்.

அதற்கான விளக்கம்  இதோ. இதனைப் புரிந்துகொள்ளத் தமிழ் இலக்கணம் கூறும் வினை, பெயர் பற்றிய அடிப்படை உண்மைகளை  அறிந்து கொள்வது    இன்றியமையாதது. நம்மவர்க்குத்  தமிழை விட  ஆங்கிலப் ‘புலமை’ அதிகம். தெரிந்ததை வைத்துத் தானே  தெரியாததை விளக்க வேண்டும். எனவே ஆங்கிலத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்வோம்.

ஆங்கிலத்தில் ஒரே  வரி வடிவம் உள்ள சொல் ஒன்று வினையாகவும் வரலாம் ; பெயராகவும் வரக் கூடும். எடுத்துக் காட்டாக ‘record’ என்ற  சொல்லைப்  பாருங்கள் .  இது வினைச் சொல்லா, பெயர்ச் சொல்லா  என எப்படி அறிவது? ஆங்கில   இலக்கணத்தில் இதற்கு விடை கிடையாது, எத்தனை முறை  Wren & Martin -ஐப் புரட்டினாலும். (ஆங்கில இலக்கணத்தை அழகாகச்  சொல்லும் அருமையான இலக்கண நூல் இது. இக்காலத் தலைமுறைக்கு  இந்த விவரம் தெரியாமல் இருக்க வாய்ப்பு உண்டு!).

வினையா?   பெயரா?    அறிவது  எப்படி ?  வழி ஒன்றைத் தருகிறது ‘The Oxford English Dictionary’ (OED). ஆங்கில அகராதிகளில் மிகச் சிறப்பானது இது.
ஒரே சொல்லுக்கு இருவேறு ஒலிப்புகள் ; ஒவ்வொரு ஒலிபபுக்கும் ஒவ்வொரு பொருள். ஆம்,’ record’ என்ற  சொல்லை  ˈrɛkɔːத’ இப்படிப் பலுக்கினால் (ரெகர்ட்) இது பெயர்ச் சொல். அதே சொல்லை,’ rɪˈkɔːd’ இப்படிப் பலுக்கினால் (ரிக்கார்ட் ) அது வினையாம்.

காண்க : http://oxforddictionaries.com/definition/record
( இப்படிப் பட்ட நுட்பங்களை எல்லாம் அறிந்தவர் நம்மில் எத்தனை பேர்?

டைவேர்ஸ்  , டைவேர்ஸ்  அல்லது  டைவோர்ஸ எனப் பகட்டாகச்  சொல்லித்  திரிகிறோமே …அதன் பொருள் என்ன தெரியுமா? ‘ பலதரப்பட்ட ‘ எனபது தானே தவிர நீங்கள் நினைப்பது போல்’ மணமுறிவை’க் குறிக்காது.  மணமுறிவைக் குறிக்கும் சொல்லின் சரியான பலுக்கல் ‘திவோர்ஸ்’. இவற்றை எல்லாம் அறியாமலே வாய்க்கு வந்தபடி ஆங்கிலக் கொலை புரிந்து கொண்டு -98 % தவறாகவே  பலுக்கிக்கொண்டு – அதையே பெருமையாக எண்ணித் தமிழைப்  புறக்கணிக்கும் நம்மவர்களை என்னென்பேன். (இது பற்றித் தனிக் கட்டுரையே  எழுதலாம்).

இதைப் போலவே உள்ள இன்னொரு சொல் வேண்டுமா? ‘Escort’  – ஆங்கில அகரமுதலியை எடுத்துப் பாருங்கள். உடனே ஆகா ஆகா ஆங்கிலமே ஆங்கிலம்  எனப் பூரிக்க வேண்டா!  ஒலிப்பை வேறுபடுத்திப் பொருளை வேறுபடுத்தும் இந்த உத்தியைப் பல சொற்களுக்குப் பொருத்த முடியாது. காட்டாக, ‘book’ என்ற சொல், அதற்கு எதுகையாக அமையும் ‘look’, ‘cook’, ‘hook’…போன்ற  சொற்களுக்கு  ஒரே  ஒலிப்பு தான்  உண்டு!    பிறகு  வினை , பெயர் வேறுபாடு அறிவதற்கு என்ன வழி   என்று கேட்டால் ஆங்கிலம் வானத்தைத் தான் அண்ணாந்து பார்க்கும்! விடை வராது ; பதிலும் தராது!

சரி,  இனி,  தமிழுக்கு வருவோம். நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் தான்  பக்குவப் படத் தொடங்கிய  ஆங்கிலத்தில் உள்ளது போலவே, நாலாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே பக்குவப் பட்ட நம் தமிழ் மொழியிலும் இந்தப் பழக்கம்   உண்டு. அதாவது, ஒரே சொல் வினையாகவும் பெயராகவும் புழங்கி வருவது. காட்டாக ‘மலர்’ என்ற சொல். இச்சொல்லுக்கு ஒலிப்பு ஒன்றுதான். பிறகு வினையா பெயரா  என அறிவது எப்படி? இங்குதான்  தமிழ் இலக்கணத்தின்  தனிச் சிறப்பு,  தலை  தூக்கி நிற்கிறது. வினையா பெயரா என அறிய, தொல்காப்பியர் எளிய வழி ஒன்றைத்  தருகிறார். இது இதனால் இது இப்படி என  நேர்மறையாகவும் இது இதனால்  இது இப்படி இல்லையென எதிர்மறையாகவும்  முடிவு தருவது  அறிவியல் வழியாகும். இந்த வழியை அறிவியல் படித்தவர்கள்,  குறிப்பாக வேதியியல் மாணவர்கள்,  நன்கு அறிவார்கள் : ஆய்வுச் சாலையில் ஏதாவது ஓர் உப்பைத் தந்து விடுவார்கள்.  மாணவர்கள் அதனை ஆய்ந்து இன்ன இன்ன காரணங்களால் இது இந்த வகை உப்பு ; இன்ன இன்ன காரணங்களால் இது இன்ன வகை உப்பு இல்லை என முடிவு கூறுவார்கள். இதற்குப் பெயர் ‘salt analysis’. இந்த  அறிவியல்  முறையைக்  கையாளுகிறார்  தொல்காப்பியர்.

இந்த வழி ஒன்றினாலேயே வினைச்சொல்லை விளக்குகிறார் ; பெயர்ச்  சொல்லின் இயலபைச் சொல்லாமலே சொல்லிச் செல்கிறார் . அத்தோடு  நின்றிருந்தால்  அவர் வெறும் இலக்கண ஆசிரியராகவே இருந்திருப்பார். அவரோ அதற்கும் மேலே போய்த் தமிழனின் தனிப் பெரும தத்துவத்தையே
அதில் பொதிந்து வைத்துவிட்டாரே!   இலக்கணத்தையும் வரையறுத்து அதற்குள்ளே பழங்காலமாய்ப் புழங்கி வரும்  தத்துவக் கருத்தையும் பொதிந்து வைக்கும் பாங்கு  தமிழ் மொழிக்கும் தமிழ்ப் புலவர்க்கும் மட்டுமே கைவந்த கலையாகும். வேறு எந்த மொழியில் இந்தக் கலை உண்டு எனக் கூறுங்கள் பார்ப்போம்!

தமிழ் இலக்கணத்தைப் பொருத்த வரை ‘வினை’ தான் அடிப்படை ; அதற்குப் பிறகுதான்,  ‘பெயர்’.  ஆக, இவை இரண்டுதாம் சொற்கள் ; ஆனாலும் அவற்றோடு இடைச்சொல், உரிச்சொல் சேர்த்துச் சொல் நான்கு என்பது  தொல்காப்பியர் காலக் கருத்து. இந்த வினையை  வரையறை செய்யும் தொல்காப்பியர் கூறுகிறார் :

வினைச் சொல்

1  வேற்றுமை உருபை ஏற்காது.

2  குறிப்பாக அல்லது தெளிவாகக் காலத்தைக் காட்டும்.
வேதியல் மாணவர்களைப் போல, – எதிர்மறையாக வினைச் சொல்லுக்கு உரிய வரையறையை   (negative definition) முதல் பகுதி தருகிறது. – நேர்மறையாக  வினைச் சொல்லுக்கு உரிய வரையறையை  (positive definition) இரண்டாம் பகுதி தருகிறது.
இந்த இரண்டு வரையறைகளை வைத்தே எந்த ஒரு சொல்லும் வினையா இல்லையா என்பதைக்  கூற முடியுமே!

சரி, வினைச் சொல் வேற்றுமை உருபை ஏற்காது ; அப்படி ஏற்றால்? அப்படி ஏற்றால் அது வினைச் சொல் ஆகாது,  அதுதான் பெயர்ச்சொல். அதாவது பெயர்ச் சொல் மட்டுமே, (ஐ, ஆல், ஓடு, உடன் , கு…போன்ற) வேற்றுமை உருபுகளை ஏற்கும் இது பெயர்ச் சொல்லுக்கு உரிய முதல்  (நேர்மறை) வரையறை (positive definition).

இரண்டாவது வரையறை என்ன? அது குறிப்பாக அல்லது தெளிவாகக் காலத்தைக் காட்டும். அப்படிக் காட்டாவிட்டால்? அதுதான் பெயர்ச் சொல்.
அதாவது பெயர்ச் சொல் குறிப்பாகவோ தெளிவாகவோ காலத்தைக் காட்டாது. இது,  பெயர்ச் சொல்லுக்குத்  தொல்காப்பியர் கூறும் எதிர்மறை வரையறை .

பெயர்ச் சொல் :

1 வேற்றுமை உருபை ஏற்கும்.
2 குறிப்பாகவோ   தெளிவாகவோ  காலத்தைக் காட்டாது.

இவ்வளவு  தெளிவாக,  விளக்கமாக வரையறை செய்த பின், எந்தத் தமிழ்ச் சொல் வினை, எது பெயர் எனக் கண்டறிவது எளிது தானே! மீண்டும் மலருக்கு வருவோம்.

மலர் – இது வினையா? பெயரா?
இது உருபுகளை ஏற்கிறதா? ஏற்கவில்லை என்று வைத்துக்கொள்வோம் .
அப்படியானால் இது பெயர்ச் சொல் இல்லை.
அடுத்து இது காலத்தைக் காட்டுகிறதா? குறிப்பாகக்  காலத்தைக்  காட்டுகிறது.
எப்படி? இறந்த காலத்தில் : ‘மலர்ந்தது’ ; நிகழ் காலத்தில்  : மலர்கிறது ; எதிர் காலத்தில் :   ‘மலரும்’…
ஆக மூன்று  காலத்தையும் குறிப்பாகக் காட்டுவதால் இச் சொல் வினைச் சொல்லே!
(அதாவது இது பெயர்ச் சொல்லாகப் பயன்படுத்தப்படவில்லை).

மறுபடி மலருக்கு வருவோம் : இப்போது இது உருபுகளை ஏற்கிறது என வைத்துக் கொள்வோம்.
அப்படியானால் மலர் + ஐ = மலரை ; மலர் + ஆல் = மலரால் ; மலர் + ஓடு = மலரோடு….
இச்சொல் இப்படி  வேற்றுமை உருபுகளை ஏற்பதால் இச் சொல் பெயர்ச் சொல்லே!
மலரை, மலரால், மலரோடு…. போன்றவை எந்தக் காலத்தைக் காட்டுகின்றன?
எந்த ஒரு காலத்தையும் இவை குறிப்பாகவோ தெளிவாகவோ காட்டவில்லையே!.
ஆகவே இச் சொல் வினைச்சொல் இல்லை . (அதாவது இது வினைச் சொல்லாகப் பயன்படுத்தப்படவில்லை!)
இப்போது புரிகிறதா, நானூறு ஆண்டு கால  ஆங்கிலத்தால் விளக்க முடியாத ஒன்றை நாலாயிரமாண்டுத்  தமிழ் விளக்குவது எப்படி என்று!.

இந்த இடத்தில்தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய கருத்து முளை விடுகிறது.
வினை தான் அடிப்படை. எனவே வினையில் இருந்து பெயர்ச் சொற்கள் பிறக்கலாம், பிறக்கும் ;
காட்டாக : காண். இது வினைச் சொல். இந்த வினையைச் செய்கின்ற உறுப்பு கண். இது பெயர்ச் சொல்.
இப்படிச் செயலின் அடிப்படையில் பிறக்கின்ற பெயர்ச் சொல்லைத்  ‘தொழிற் பெயர்’ எனத் தமிழ் இலக்கணம் அழைக்கும்.
மேலும் , காண் எனற சொல்லின் முதல் நிலை எழுத்து ‘கா’, ‘க’கரமாகத் திரிவதால்,
இதனை  ‘முதல் நிலை திரிந்த தொழிற்பெயர்’ எனக் கூறுவர்.

ஆனால், பெயர்ச் சொல்லில் இருந்து வினைச் சொல் ஏதும்  எக்காலத்தும் பிறப்பது  இல்லை!
இதுதான் தமிழ் இலக்கணத்தின் அடிப்படைக்  கருத்து ; இதுதான்  காலம் காலமாய் இருந்துவரும், தொடர்ந்து வரும் மொழி மரபு ;
இந்த மொழி மரபைத் தான் குறிப்பிடுகிறார் அருமை நண்பர்  செல்வா  :
‘முயற்சிக்கிறேன்…என்று கூறுவது மொழி மரபு அறியாமல் கூறுவது….. ஒரு மொழிக்கு அதன் வினையே உயிர். அதனைக் குலைப்பது பெருங்கேடு விளைவிக்கும் அறியாமை.’

‘ தமிழின் உயிர் போன்றது அதன் வினை. அதைக் குலைப்பது என்னும் செயலை எல்லோரும் சேர்ந்தெழுந்து எதிர்த்து நிறுத்த வேண்டியது.’

அடிப்படையை அசைத்து உடைத்துவிட்டால் கட்டடம் நிலைப்பது  ஏது?
மொழி மரபைக் காக்காமல் அடிப்படையைத் தகர்த்துவிட்டால் மொழி என்னாகும்?
வேறு மொழியாகத் திரிந்து போகாதா?  இப்படித் திரிந்தவைதாமே தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற  மொழிகள். இதனைத்தான் திரு அய்யாசாமி அரங்கநாதன்.
‘அடிப்டைகளை மாற்றினால் அதனை வளர்ச்சி எனக் கூற முடியாது. அடிப்படை இலக்ணத்தையே உடைத்தெறிந்த நிலை ஏற்பட்டுவிடுகிறது.’ என்கிறார்.

‘முயற்சித்தேன்’ என்பதனை ஆதரித்து எழுதும் கவிஞர் புகாரி,
‘பழக்கத்தில் வந்துவிட்ட ஒன்றை ஏற்கிறது எழுத்து.
இலக்கணம் என்பது எழுதிக்கொள்ள வேண்டிய ஒன்றுதான்.

இலக்கியம்தான் எப்போதுமே முதலில்.

இலக்கணம் அதைப் பின் தொடரும் சில நூற்றாண்டுகள் கழித்து.

இதற்கான இலக்கணம் மிக மெதுவாய் வரும் பாருங்கள்.’

எனக் கூறுகிறார்,மேலே விளக்கிய இலக்கண அடிப்படையை மொழி மரபை அறியாமல. (இவை யாவற்றையும் காண:  https://groups.google.com/group/anbudan/browse_thread/thread/fc8c416a2b42f73a/59db18e562f01579?hl=es;db18e562f01579&pli=1 ).

இலக்கியத்தில் இருந்து வருவதுதான் இலக்கணம் ; உண்மையே! ஆனால் இலக்கணத்தின் அடிப்படையையே  அது தகர்ப்பதாக இருந்தால் அதனை இலக்கணம் ஏற்காது.

முயற்சி எனபது பெயர்ச் சொல் ; அதில் இருந்து வினைச் சொல் பிறவாது,பிறவாது, பிறக்கவே பிறக்காது.
ஆகவே, ‘முயற்சித்தேன்’  என எழுதுவதும் பேசுவதும் தவறு !
தவற்றைத்  திருத்திக் கொள்வதில் உண்டோ  தவறு?

மேலே விளக்கிய  தொல்காப்பிய நூற்பா :

‘வினை எனப்படுவது வேற்றுமை கொள்ளாது
நினையும் காலை காலமொடு தோன்றும்’
(தொல்காப்பியம் : சொல்லதிகாரம் : வினையியல் நூற்பா :1 ).

இதன் பொருளை மேலே விளக்கி  விட்டேன்.
வினைக்கும் பெயர்க்கும் வரையறை செய்யும் இந்த நூற்பாவை மறுபடி உற்று நோக்குங்கள். இலக்கணத்தையும் தாண்டிய கருத்து புலப்படவில்லையா?

‘முன்னை  செய்த பழவினை இருக்கிறதே,  அது எந்த வித வேறுபாடும் பாகுபாடும்  பார்க்காது!

வலியவன் மெலியவன், ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், நல்லவன் கெட்டவன், இறை மறுப்புக் கொள்கையன்,  இறை இருப்புக் கொள்கையன் … என்று எல்லாம் வேறுபாடு பார்க்காமல்,   அதற்குரிய காலத்தில்  வந்து ஊழ் வினை உருத்து வந்து ஊட்டும்!’ என்ற கருத்து – பழந்தமிழகத்தில்  வேரோடிப் போயிருந்த எண்ணம் – இந்த நூற்பாவில பாலில் மறைந்திருக்கும் வெண்ணெய்  போல் மறைந்திருப்பதை அறிந்து இன்புறுவோம்.

இலக்கணத்தைச் சொல்ல வரும் இடத்தில் கூட மறை முகமாகத் தத்துவக் கருத்தைப் புதைத்து  வைத்த தொலகாப்பியரைப்  போற்றாமல் இருக்க முடியவில்லை. அது மட்டும் அல்ல, என் வாழ்க்கைத்    தடத்தையே மாற்றிப்  போட்ட  நூற்பா இது! அறிவியல், ஆங்கிலம் எனப் பட்டங்கள் பெற்று அதிலேயே மூழ்கிக் கிடந்த அடியேனை, இன்று  ஏதாவது அமெரிக்கப் பல்கலைகழகம் ஒன்றின் ஆராய்ச்சிப் புல்லை மேய்ந்து கொண்டிருக்க வேண்டிய அல்லது பிரஞ்சு ஆய்வகம் ஒன்றில் துகளியல் இயல்பியல்  (particle physics)  துறையில் உழன்று கிடக்க வேண்டிய  என்னைத் தமிழின் பால்  ஈர்த்து அணைத்த பெருமை இந்த நூற்பாவுக்கே  உண்டு.

காலம் கனிந்து வரின், இது வரை எவர்க்கும் வெளிப்படுத்தாத (என் ) வாழ்வின் இந்த இரகசியத்தை உங்களோடு  பகிர்ந்து கொள்வேன்.

இனி அடுத்த பகுதியில்,  ‘முயற்சித்தேன்’  எனப் பலரும் எழுதுகிறார்கள் ; எனவே அதைத்  தமிழ் ஏற்றுக்கொள்ள வேண்டும்”  எனச் சிலர்  கூறுவதற்குப் பதில் காண்போம். அதே சமயம், ‘முயற்சித்தான்’  என்பது எப்படிப் புகுந்திருக்கும் என  அலசிப் பார்ப்போம்.

மேலும் வளரும்.

Print Friendly, PDF & Email
Share

Comments (1)

  1. Avatar

    முயற்சித்தேன் என்பதே ’முயல்’,’ முயல்வது’ போன்ற வார்த்தைகளிலிருந்து வந்ததுதானே?
    பிறகு,முயற்சித்தேன் என்றால் என்ன தவறு?

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க