ஓடப் போட்டி
திருமதி. விசாலம்
ஆகஸ்டு மாதம் வந்தாலே கேரளத்தில் ஓடங்கள், கப்பல்கள் எல்லாம், பழுதுகள் சரியாக்கப்பட்டு புதுசாக்கப்பட்டு, வர்ணங்கள் பூசப்பட்டு தயாராகி விடும்.
எதற்கு இந்த அலங்காரங்கள் என்றால் “வள்ளம் களி” அதாவது போட் ரேஸுக்குத்தான், ஓணம் வரும்போது இந்த போட் ரேஸும் கூட வந்து அமர்க்களப் படும். இதைச் ‘சுண்டன் வள்ளம்” என்றும் சொல்வார்கள். ஏன் என்றால் இந்தப் படகைப் பார்க்க பாம்பு போல் நீளமாக இருக்கும்.
இதன் நீளம் சுமார் 60 மீ, இருக்கும். இதில் சுமார் 100 பேர் துடுப்புடன் படகை ஓட்ட அமரலாம். நடுவில் ஒரு சின்ன மேடை உண்டு, அதில் பாடுபவர்கள்,வாத்தியம் கொட்டுபவர்கள் அமருவார்கள். இந்தப் பாடலுக்கு ‘வஞ்சிப்பாட்டு‘ எனப்பெயர். ஆஹா இன்றும் அந்த “செம்மீன்” என்ற படம் என் கண்முன் நிற்கிறது. அந்த நீல நதியும் அதில் வளைந்து வளைந்து ஓடும் படகுகளும் இன்றும் பசுமையாக என் மனதில் நிற்கிறது.
“செம்மீன்” படத்தில் மிக அழகாக இந்தக் காட்சியைப் படம் பிடித்திருக்கிறார்கள்.“தையரே தையா தையாரே தையா தை தை… தைதைதை …” என்ற ரிதமுடன் பாடல் ஆரம்பிக்கும் அந்தக் காட்சி மிக அழகு. ஓணத்தின் போது இந்த ‘போட்ரேஸ்’ என்று சொல்லப்படும் படகோட்டும் பந்தயம் மிகவும் சூடு பிடிக்கும். இயற்கைச் சூழலில் இந்தக் காட்சியைக் காண பல வெளியூர்களிலிருந்தும் மக்கள் வருவார்கள்.
எல்லாப் படகுப் போட்டிகளையும் விட மிக முக்கியமான ரேஸ் “நேரு ட்ராபி ரேஸ்”. இது ஆலப்புழாவில் ‘புன்னமடை’ ஏரியில் நடக்கும். ஆலப்புழா ‘இந்தியாவின் வெனிஸ்’ என்று பெயர் பெற்றது.
“நேரு ட்ராபி ரேஸ் ‘என்ற பரிசு இங்கு வரக் காரணம் என்ன?
பண்டித நேருஜி ஒரு முறை இந்தப் போட்டியைப் பார்க்க வந்து, அதில் மனம் மகிழ்ந்து போனார்(1952-ல்). திரும்ப தில்லி போன பின், பாம்புப் படகைப் போல் ஒரு வெள்ளி ட்ராபி செய்து ஜெயித்தவருக்கு அனுப்பி வைத்தார். அதிலிருந்து அவர் பெயரில் இந்த ஓடப் போட்டி நடக்கிறது.
இந்தப் போட்டி சுமார் மூன்று மணி நேரம் வரைச் செல்லும். டிக்கெட் முதலிலேயே வாங்க வேண்டும், பல ஆயிரம் டூரிஸ்டுகளும், சுற்று வட்டார மக்களும் கூடி இருப்பார்கள். டிக்கெட்டுக்கு தகுந்தாற் போல் தான் அமரும் இடமும் கிடைக்கும். மேலும், பலர் தூரத்திலிருந்தபடியே ‘பைனாகுலர்’ என்ற கருவியால் பார்த்து அனுபவிப்பர்.
இந்த ஓணம் பண்டிகையின் போது கேரளா பெரிய விழாக் கோலம் பூண்டு எங்கும் உல்லாசம்தான், ஆட்டம் பாட்டம்தான். ஏன் இந்த உல்லாசம்? இந்தப் பண்டிகையின் பின் ஒரு கதை இருக்க வேண்டுமே!. ஆம்.. மஹாபலி சக்கரவர்த்தி பாதாளத்திலிருந்து வருடத்திற்கு ஒருமுறை தன் மக்களைப் பார்க்க, தான் ஆண்ட நாட்டிற்கு வருகை தருகிறார். இதன் புராணம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.
மஹாவிஷ்ணு வாமனராக வந்து மூன்று அடி நிலம் யாசித்தார். அதைத் திரு. மஹாபலி கொடுக்கச் சம்மதித்தவுடன் விண்ணையும் மண்ணையும் இரண்டு அடிகளாக அளந்து, பின் ‘மூன்றாவது அடி எங்கே வைப்பது?’ என்று கேட்க மஹாபலி தன் தலையைக் காட்ட அவரும் தன் பாதத்தை அவர் தலை மீது வைக்க, அவன் கீழே பாதாளத்திற்கு அழுத்தப்பட்டு விடுகிறான்.
எல்லா மக்களும் அவருக்காக வருந்தி அழ, மாஹாபலியும் தன் பிரஜைகளைப் பார்க்க வருடத்தில் ஒரு நாள் அனுமதி வேண்டி நிற்க, ஸ்ரீ மஹாவிஷ்ணுவும் ஆசிகள் வழங்குகிறார். இந்தத் திருவோண நட்சத்திரத்தில் அவர் தன் மக்களைப் பார்க்க வருவதாக ஒரு ஐதீகம். அதுதான் கேரள மக்களுக்கு இத்தனை மகிழ்ச்சி உல்லாசம்.ஓணத்தின் போது நடைபெறும் விருந்து,‘ஓண சத்தி’ என்றழைக்கப்படுகிறது. இந்த விருந்தில் நேந்திரம்பழமும், பலாப்பழமும் முக்கியப் பங்கு வகிக்கும், மாலையில் பலவிதப் போட்டிகளும் உண்டு. அதில் முக்கிய பங்கு வகிப்பது ஓடப்போட்டிதான்.
இந்த ஓடப் போட்டியான “உத்திரட்டாதி வள்ளம்களி” ஆரன்முலா என்ற இடத்தில் கடைசியில் நடந்து நிறைவு பெறும். இந்தக் கண் கொள்ளாக் காட்சியைக் காண ஆலப்புழா செல்வோம் வாருங்கள்.
ஓணம் வாழ்த்துக்கள்
அன்புடன் விசாலம்
படகுப்போட்டிப் போலவே விரைந்து செல்லும் விழா கட்டுரை. உலகிலேயே கவர்ச்சி மிகுந்த விழாக்களில் ஒன்று. ஆரன்முலாவை பற்றி ஒரு அரியசெய்தி. அவ்விடத்து கைத்தொழிலான ‘கண்ணாடியில்லா முகம்பார்க்கும் தட்டு.’