பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

20370784_1387539944633534_1998301548_n
20289992_1387552644632264_1584092665_nதினமுரசு புகைப்பட பத்திரிக்கையாளர் திரு. ஜேக்ஸன் ஹெர்பி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (29.07.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

10 thoughts on “படக்கவிதைப் போட்டி (121)

 1. எத்தனை முறை எண்ணிப்பார்த்து என்ன ?
  வயிற்றுப் பசிக்கும் வாங்கிய கூலிக்கும்
  இருக்கிற இடைவெளியை இட்டு நிரப்பும்
  கணக்கு இன்னும் கைவரவில்லை.
  உழைத்துக் காய்த்துப்போன
  உள்ளங்கைப் புண்ணில்
  சில்லறை உறுத்துகிறது.
  பிஞ்சுக்குழந்தைக்கு பிஸ்கெட்டுக் காகும்
  நெஞ்சுக்குள் நெகிழ்வு.

  அ.இராஜகோபாலன்

 2. பத்தும் மறந்து போகும் பசி வந்தால்..

  பசியும் மறந்து போகும் பாசம் வந்தால்..

 3. அன்று எனது சிந்தனைகளை
  சிதற விடாமல்இருந்திருந்தால்
  இன்று சில்லரைகளை எண்ணும்
  நிலை வந்திருக்காது……

 4. தலைப்பு :
  சம்பள நாள்

  பையில் ரூபாய் கையில் சில்லறை
  இது என் உழைப்புக்கு கிடைத்த ஊதியம்
  கிடைக்கும் நல்ல உணவு நாளை மதியம்
  கையில் கறை இருந்தாலும் மனதில் குறை இல்லை
  சட்டை பை நிறைந்திருக்கும் மாதம் ஒரு நாள் மட்டும்
  கைக்குள்ளே காசை ஒளித்து வைக்க ஆசைதான்
  கடன்காரன் வந்து கையைப் பிரித்து எடுத்து செல்வானே
  எது எப்படி இருந்தாலும்,
  வாசலில் காத்திருப்பாள் மனைவி காசுக்காக அல்ல இந்த காதலனுக்காக!!!!!

 5. உழைப்பின் கறைபடிந்த
  உன் கரங்களில்
  சில்லறைதான் மிஞ்சும்
  சில்லறை வேலைசெய்யும்
  ஊழல் உத்தமர்க்கே
  ஊதிப்பெருகும் பணம்…

 6. அழுக்கு உடையில்
  அஞ்சும் பத்துமாய்
  சில்லறை சுமக்கும்
  சீமானே….
  மிளிரும் வெண்ணுடையில்
  மகிழும் ஊழல்வாதிகளின் முன்
  நீ சீமானே…

 7. பணம் படுத்தும் பாடு !

  சி. ஜெயபாரதன், கனடா.

  கைப்பணம் போதாது
  கள் குடிக்க !
  பைப்பணம் போதாது
  பட்டப் படிப்புக்கு !
  வங்கிச் சேமிப்பு போதாது
  வாஷிங்டன் சுற்றுலா
  போய்வர !
  திருடத் தூண்டும் பணம் !
  தீப்பெட்டி போட்டு
  பசியாற்றும் மனையாள் காசைப்
  பறிக்கச் சொல்லும் !
  தினமும் வீடு வீடாய் நடந்து
  பேப்பர் போடும்
  சிறுவன் கூலிப் பணத்தைப்
  பறிக்கச் சொல்லும் !
  லஞ்சம் வாங்கத் தூண்டும் !
  லட்சாதி பதியாய்
  வாழ்வதற்கு
  பஞ்சமா பாதகம் செய்ய
  அஞ்சாது !
  உண்ட வீட்டைத் துண்டாக்கி
  உரிமை ஆக்கும் !
  வேலைக்காரி கொலையும்
  செய்வாள்,
  வீட்டுக்காரியை !
  நாட்டில் நடக்கும் அத்தனை
  நயவஞ்சகமும்
  நோட்டுப் பணத்தால்
  நேர்வது !
  அசுரப் பற்களில் கடிக்கும்
  திமிங்கலப் பணமே !
  தேவை நீ ஆயினும்,
  துரோகி !
  உன்னோடு வாழ்தல் அரிது !

  ++++++++++++++

 8. ஓசை…

  சட்டைப் பையில்
  ரூபாய் நோட்டு,
  சத்தமில்லாமல் இருக்கிறது..

  கையிலுள்ள
  சில்லரைக் காசுகள்,
  சலசலவெனச்
  சத்தமிடுகின்றன..

  ஓ,
  வாழ்க்கைத் தத்துவம்
  இதுதானோ-
  மதிப்புமிக்க இடத்தில் அமைதி,
  குறைந்த இடத்தில் கூத்தாட்டம்தான்…!

  -செண்பக ஜெகதீசன்…

 9. இளமையில் கல்..!
  =================

  ஏழைக் குடிலையும் ஏழ்மையின் கொடிதையும்..
  ……என்றேனும் பார்த்ததுண்டா அல்லது கேட்டதுண்டா.!
  உழைக்கும் வர்க்கத்துக்கு ஊதியமே சில்லரையில்தான்
  ……உழைப்பாலுயர்ந்து பெரும் பணத்தை ஈட்டியவரரிதே.!
  தாழ்வைப் பெரிதாய் எண்ணாமல் தன்னலமின்றி..
  ……உழைத்து வருமற்ப சம்பளத்திலுயர வழியில்லை.!
  வாழ்வு வளமாக வளரும்போதே கற்கவேண்டும்..
  ……வளர்ந்த பின்யோசித்து வருந்துவ தாலென்னபயன்.?

  படிக்காமலிள வயதில் பொறுப்பின்றி சுற்றியதால்..
  ……பலரைப்போல் நானும் படாதபாடு படுகிறேன்.!
  விடிந்ததுமுதல் மீண்டுமடுத்த நாள் விடியும்வரை..
  ……வியர்வை சிந்தியுழைத்தாலும் சில்லரைதான் மிஞ்சும்.!
  ஓடிஓடி உழைத்தாலும் ஓட்டைவிழுந்த சட்டைதான்..
  ……ஒழுங்காக கற்காவிட்டால் ஏழ்மைதான் வாழ்க்கை.!
  இடித்துரைத்தான் வள்ளுவனும் இதையே தான்..
  ……இனியாவதெம் சந்ததியைப் படிக்க வைப்பேன்.!

 10. உங்கள் பார்வையில் தெரிவது அழுக்குக்கறை !
  உண்மையில் இது ஏழைகளின் இன்றைய நிலை!
  ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
  என்றார் ஒரு அறிஞர்!
  உண்மை முற்றிலும் உண்மை!
  இது வரை எந்த ஏழையும் சிரித்ததுமில்லை !
  இறைவனை எவரும் பார்த்ததுமில்லை !
  சில்லறைகளே ஏழைகளுக்கு சொத்தாகிப் போனதால்
  கல்லறைகளே இவர்களுக்கு நிச்சயம் ஆனது!
  பணம் இவர்களுக்கு எதிரியாய் போனது !
  உழைக்க மட்டுமே இவர்களுக்குத் தெரியும்!
  பிழைக்கத் தெரியாது!
  இவர்களின் உழைப்புப் பல்லாக்கில்
  ஊர்வலம் போகும் பணக்காரக் கூட்டம்!
  வாழ்க்கை என்பது என்றும் ஒரு வட்டம்!
  போதும்! போதும் உங்களின் ஆட்டம்!
  பகிர்ந்துண்டு வாழ்தல் நல்ல பழக்கம் !
  இதை உணர்ந்தவர் வாழ்வில் இல்லை குழப்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *