நாகேஸ்வரி அண்ணாமலை

wrapper_-_Pope_-_002-1

கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிஸைப் பற்றி இரண்டு முறை வல்லமைக்கு 2013, 2014 ஆண்டுகளில் ‘இதுவல்லவோ ஒரு மதத்தலைவருக்கு அழகு’, ‘இவரல்லவோ ஒரு மதத்தலைவர்’ என்ற தலைப்புகளில் எழுதியிருக்கிறேன்.  இன்னும் சில தினங்களில் அவரைப் பற்றி நான் எழுதியிருக்கும் ‘போப் பிரான்சிஸ் – நம்பிக்கையின் புதிய பரிமாணம்’ என்னும் நூல் வெளிவரவிருக்கிறது.  (செப்டம்பரில் நடக்கும் மதுரை புத்தகக் கண்காட்சியில் இது கிடைக்கலாம்.)  அதில் பல மதத்தலைவர்கள், இந்து மதத்தலைவர்களும்,  என்னென்ன அட்டகாசங்கள் புரிந்திருக்கிறார்கள், புரிந்துவருகிறார்கள் என்று கோடிகாட்டியிருக்கிறேன்.  அவர்களோடு ஒப்பிடும்போது போப் பிரான்சிஸ் எப்படிப்பட்ட மதத்தலைவர், எவ்வாறு மதத்திற்கு அப்பால் நின்று உலகிற்கே வழிகாட்டுகிறார் என்றும் கூறியிருக்கிறேன்.  நான் இந்து மதம் உட்பட எந்த மதத்தையும்பின்  பின்பற்றுபவள் இல்லையென்றாலும் கத்தோலிக்க மதத்தலைவர் தன் சிறப்புகளால் எப்படி என்னைக் கவர்ந்தார் என்றும் எழுதியிருக்கிறேன்.

சென்ற 25-ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்தீப் ராம் ரஹீம் சிங் என்ற மதகுரு மீது கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடந்த வழக்கில் (நம் நாட்டின் நீதித்துறையின் ஆமை வேகத்துக்கு ஒரு உதாரணம்) குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு 28-ஆம் தேதி இருபது ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்.  இவன் மீது இன்னும் சில கொலை வழக்குகள் இருக்கின்றன.  அவற்றிற்கும் சேர்த்து இன்னும் எத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்கப் போகிறாரோ?  பெரிய பாரம்பரியம் மிக்க நாடு, பாரினில் சிறந்த நாடு என்று நாம் பீற்றிக்கொள்ளும் இந்தியாவில் இப்படி ஒரு மதகுரு நடந்திருக்கிறார். ஒரு நீதிமன்றத்தால் அவன் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என்பதுதான் இந்தியா பற்றிக் கொஞ்சம் நம்பிக்கையை உண்டாக்குகிறது.

இருந்தாலும் இந்த நம்பிக்கையை மீறி இந்த ஆன்மீக வேஷதாரிக்குப் பல லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியும் இவர் தண்டிக்கப்பட்டதும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய அளவில் வன்முறை நடந்து, அதில் 38 பேர் இறந்தனர், இன்னும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தியும் மனதில் பெரிய வேதனையை ஏற்படுத்தின.  மதத்தலைவர்கள் செய்யும் வெட்கக்கேடான செயல்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.  இருப்பினும் இந்த வழக்கு பற்றிய சில விபரங்கள் இந்தியா இவ்வளவு தூரம் தாழ்ந்துவிட்டதா, உலக அரங்கில் இந்தியாவின் படிமம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பன போன்ற கசப்பான சில உண்மைகளை நம் முன் வைக்கின்றன.

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு ஆதரவு தேவைப்படுகிறது, இம்மையிலும் மறுமையிலும் தன்னைப் பாதுகாக்க ஒரு சக்தி தேவைப்படுகிறது.  இது எல்லாச் சமூகங்களுக்கும் பொருந்தும்.  அதனால்தான் மனிதன் மதங்களைப் படைத்திருக்கிறான்.  இறைவனின் செயல்களுக்குக் காரணம் புரியவில்லை என்றாலும் விடாது இறைப்பற்றுக் கொண்டிருக்கிறான்.  மிருகத்தைவிடக் கேவலமான ஒரு மதகுருவை இத்தனை ஜனங்கள் வழிபடுவதும் அவன்மீது இத்தனை குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என்றதும் இத்தனை லட்சம் சிந்திக்கும் திறனற்றவர்கள் அதை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுவதும் இந்தியாவில் மட்டுந்தானோ?  அதை நினைத்தால்தான் வேதனை இன்னும் அதிமாகிறது.

இதைவிட இன்னொரு உண்மை இன்னும் அதிகமாகச் சுடுகிறது.  இந்த மதகுருவோடு பல அரசியல்வாதிகள் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.  அரியானா முதலமைச்சருக்கு இவரோடு நெருக்கம் உண்டு.  குர்மீத் சிங் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியதும் வன்முறைகள் வெடிக்கலாம் என்று எதிர்பார்த்து முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.  அரியானா மாநில அரசு குர்மீத் சிங்கின் ஆசிரமத்திற்கு நிறைய பணம் கொடுத்து உதவியிருக்கிறது.  இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு வன்முறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இவர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை தூண்டப்பட்டபோது பார்த்துக்கொண்டிருந்த அம்மாநில முதல்வர் மோதி பதவி விலகினாரா என்ன?

குர்மீத் சிங் மீது 2002-இல் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.  அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து, அதாவது பன்னிரெண்டு ஆண்டுகள் ஆன பிறகு,  நம் பாரதப் பிரதமர் ‘தூய இந்தியாவை உருவாக்குவோம்’ என்னும் நிகழ்ச்சியில் குர்மீத் சிங்கோடு கலந்துகொண்டதுமல்லாமல் பெரிதாகப் புகழ்ந்து வேறு பேசியிருக்கிறார்.  குர்மீத் சிங் மீது வழக்கு நடக்கிறது என்பது இவருக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை.  இப்போதும் ‘குர்மீத் சிங்கைத் தான் மதித்ததற்கு மாறாக இப்படி நடந்துகொண்டிருக்கிறானே’ என்று ஒரு வார்த்தை கூறவில்லை.  ‘என் மனது வேதனைப்படுகிறது’ என்றுமட்டும் சொல்லியிருக்கிறார்.  எதற்காக வேதனைப்படுகிறார்?  இப்படிப்பட்ட ஒரு மதகுரு இருக்கும் நாட்டின் தலைவராக இருப்பதாலா?  இந்த மதகுருவிற்கு மனதைப் பறிகொடுத்த இத்தனை பக்தர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வாலா?

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதிக்கு எத்தனையோ மிரட்டல்கள் வந்திருக்கும்; ஆசை காட்டப்பட்டிருக்கும். தமிழக முதல்வர் சொத்துக் குவிப்பு வழக்கைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அரசியல் அதிகாரத்திற்கு, பண ஆசைக்குப் பணியாத நீதிபதிகள் இன்னும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்ற உண்மைதான் ஒரேயொரு ஆறுதல்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.