சு.கோதண்டராமன்

மாலுக்காவது அவதாரங்கள், இளமைப் பருவ விளையாட்டுகள், பகைவர்களை அழித்த சிறப்புகள் உள்ளன. இவை எதுவும் இல்லாத பிரமனையும் ஒரு முறை பயன்பட்ட சொல் மறு முறை வராத வகையில்  வர்ணித்துச் சம்பந்தர் தன் தமிழ் வளத்தை நிரூபிக்கிறார்.

பிரமனின் தனித்தன்மைகள் வேதம் ஓதுதலும் உலகத்தைப் படைத்தலும், தாமரையில் வீற்றிருப்பதும் தாம். இம்மூன்றையும் சம்பந்தர் பல வகையாக வர்ணிக்கிறார்.

தாமரை மலர் கவிஞர்களுக்குப் பிரியமான மலர் அல்லவா? அதை வர்ணிக்கப் புகுந்தாலே சம்பந்தருக்குக் கற்பனை பெருக்கெடுத்து ஓடுகிறது.

அணிகிளர் தாமரை, அல்லிகொள் தாமரை, ஏடவிழ் நறுமலர், ஏலும் தண் தாமரை, கடி படு கமலம், களங்குளிர்ந்து இலங்கு போது, கள்ளவிழ் மலர், கொங்கு ஆர்ந்த பைங்கமலம், கொய்யணி நறுமலர், சீர் கொள் மாமலர், சுண்ணமலி வண்ணமலர், செய்ய தாமரை, செறி முளரி, சேற்றினார் பொய்கைத் தாமரை, சோதி மலர், தண்டமர் தாமரை, தழல் (தீயின் நிறம் கொண்ட) தாமரை, தாதலர் தாமரை, திருவினார் போது, தேன் அகம் மருவிய செறிதரு முளரி, நகுவாய் மலர், நளிர் மாமலர், நற்றாமரை மலர், நறையார் மலர், நீருடைப் போது, புண்டரிகம், பைந்தாமரை, மாமலர், முள்ளார் கமலம், மென் மலர், வண்டமர் பங்கயம், வரியாய மலர், வளம் பட்டலர் மலர், வளர் போது, வளங்கொள் மலர், வாசமலர், வெள்ளத் தாமரை, வெறிகமழ் தாமரை, வென்றி மாமலர், வேதக் கிளர் தாமரை என்று அது பலபடியாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்புடைய மலரில் வீற்றிருக்கும் பிரமனை, இருந்தவன், தாமரையான், துன்று பூமகன் (இதழ் நெருங்கிய தாமரையில் இருப்பவன்), நாட வல்ல மலரான், பூவில் தோன்றும் புத்தேள் (தேவன்), பூவின் உள்வாயல்லி மேலுறைவான், வெண்டாமரை மேல் அயன், செங்கமலப் போதான், மண்ணு கோலம் உடைய மலரான் எனச் சம்பந்தர் போற்றுகிறார்.

பிரமனைச் சுட்ட மிகுதியாகப் பயன்படும் சொல் அயன் என்பதே. அதற்கு அடுத்தபடியாக நான்முகன், அதே பொருளில் வடசொல்லான சதுர்முகன், திசைமுகன் என்பவையும் ஆம். இச்சொற்கள் பல இடங்களிலும் அடைமொழியுடன் சேர்ந்தே வருகின்றன. விளங்கிய நான்முகன், நிறை நான்முகன், நீதி உற்றிடும் நான்முகன், சீரணங்குற (தெய்வத்தன்மை பொருந்த) நின்றவன் என்பன அவற்றில் சில .

அயனுடைய வேதத் தொடர்பைக் குறிக்கும் அடைமொழிகள் இவை புரை கடிந்தோங்கிய நான்முகத்தான், மெய்த்தவத்தோன், வேத முதலோன், நெறியண்ணல், பொய்யா மறையான், பொய்யா வேத நாவினான், நுணங்கு நூல் அயன் (நுட்பமான நூல்களை அறிந்துணர்ந்தவன்), வேதம் ஓதும் அயன், அந்தணன், அழல் ஓம்புபவன், அறவுரு, ஏடியல், சாம(வேதம் பாடுபவன்), ஆறும் செற்றிருந்தான் (காமம், கோபம் முதலான ஆறு தீக்குணங்களை வென்றவன்), சென்றொருக்கிய மாமறைப்பொருள் தேர்ந்தவன் (தொகுக்கப்பட்ட வேதங்களின் பொருளை நன்கு கற்றவன்), தீயோம்பு மறைவாணர்க்கு ஆதி, நன்று ஆம் நால்மறையான். அவர் பூணூல் அணிந்திருப்பதை மேலோடி நீடு விளையாடல் மேவு விரிநூலன் வேதமுதல்வன் என்ற இன்னிசைத் தொடர் காட்டுகிறது.

அவரது உடல் பொன் நிறம் என்பதை பொன்னொப்பான், பொன்னிற நான்முகன் என்பதனால் அறிகிறோம். பிரமனே உலகிற்கு முதல்வர், அவரே உலகம் முழுவதையும் படைத்தவர் என்பதனால் அவர் ஆதி, உலகமெல்லாம் பயந்தவன், ஊனக மருவிய புலனுகர்வு உணர்வுடை ஒருவன், (மன்னுயிர்கட்குத் தனு, கரண, புவன, போகங்களைப் படைப்பவன்), பண்டு ஏழுலகு கண்டான், பயனாகிய பிரமன், (மக்கள் அடையத்தக்க பயன்களில் ஒன்றான பிரமலோகத்தை உடையவன்), மீத்திகழ் அண்டம் தந்த அயன் என்று போற்றப்படுகிறார். தாமரையாள் மகன், கருவருந்தியின் நான்முகன் (சிருட்டி எல்லாம் தன்னிடத்தினின்று உண்டாக்கத் தக்கவன், உந்தியில் தோன்றியவன்), இடையல்லிக் கிடந்தவன் (கொப்பூழ் இடையில் தோன்றியவன்) என்று அவரது பிறப்பு வரலாறு கூறப்படுகிறது. அவரது பெருமைகளைக் காட்டும் பிற அடைமொழிகளாவன அண்ணல், ஒண்டிறல், கேடில் புகழோன், கோலத்தயன், பெருமகன், மாறிலான்.

இத்தகு பெருமைகளைக் கொண்ட அயன் ‘சிவனுடைய முடி காண்பேன்‘ எனச் செருவுற்று அன்னப் பறவை வடிவெடுத்துப் பல நாள் பறந்தும் காண முடியாமல் தோற்றுச் சரண் அடைந்ததால் அவருக்கு ஏற்பட்ட பிற பெயர்கள் விண் பயில மண்பகிரி வண்பிரமன், பிரமப் பறவை, பருத்துருவதாகி விண் அடைந்தவன், பறந்தார், பறவையர், அன்ன வாகனன், அன்னமாக உருவெடுத்தவன், நாணமுடை வேதியன் (தோற்றதற்காக வெட்கப்படுபவன்).

மால் அயன் ஆகியோரது பெயர்களையோ அடைமொழிகளையோ பயன்படுத்தாமல் வெறுமனே இருவர் என்ற சொல்லால் குறிப்பிட்ட இடங்கள் 32 உண்டு அவரது பதிகங்களில். அந்த இடங்களில் கூட சம்பந்தர் கூறியது கூறவில்லை. உதாரணத்துக்குச் சில மட்டும் காண்போம். இருவரறியாத ஒருவன் 1.93.9, இருவரேத்த நின்று உருவம் ஓங்குமே 1.94.9, இருவரை அசைவு செய்தீரே 3.97.9, இருவரை இடர்கள் செய்தீரே 3.96.9, இருவரை வெருவுற ஆரழல் ஆயினார் 3.88.9, அன்றிருவர் தேர்ந்துணரா வானூரான் 1.61.9, இருவர் தெரியாததோர் தீத் திரள் ஆயவன் 2.18.9

பொருள் சிறப்பு

ஒரே கருத்தைத் திரும்பத் திரும்பப் பதிகம் தோறும் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? ராவணன் செருக்கு அடங்கியதைக் கூறும் எட்டாவது பாடலும், மால் அயன் செருக்கு அடங்கியதைக் கூறும் ஒன்பதாவது பாடலும் ‘சமணர் உரையைச் செவி மடுக்காதீர்’ என்று கூறும் பத்தாவது பாடலும் இந்த மூன்று கருத்துகளையும் மக்கள் மனதில் பதியவைப்பது தான் சம்பந்தரின் முக்கிய நோக்கம் என்பதை உணர்த்துகின்றன.

பதினொரு பாடல்கள் கொண்ட பதிகத்தில் நிறைவுப் பாடல் பதிகப் பலன் கூறுவது. பத்தாவது பாடல் சமண சாக்கியத்தைக் கண்டிப்பது. மற்ற ஒன்பது பாடல்களும் சிவபிரான் பெருமையைப் பேசுபவை.

முதல் எட்டுப் பாடல்களில் சம்பந்தர், செஞ்சடை, பிறை நிலா, கங்கை, கொன்றை, வன்னி, பாம்புகள், புலித் தோல், யானைத் தோல், கோவணம், எலும்பு மாலை, கையில் பிரம்ம கபாலம், பிச்சைக்குச் செல்வது, இரவு நேரங்களில் சுடுகாட்டில் பேய்க் கணங்கள் சூழ நின்று நடனம் ஆடுவது, அவரது உடலில் இடக்கூறாக அமைந்துள்ள உமை, நீலகண்டம், நெற்றிக்கண் ஆகிய சிவனுக்கே உரிய தோற்றச் சிறப்புகளை வர்ணிக்கிறார். காமனை, காலனை, தக்கனை, சலந்தரனை அழித்தல், முப்புரம் எரித்தல், ராவணனை நசுக்குதல் ஆகிய அவரது அருஞ்செயல்களும் அவற்றில் இடம் பெறுகின்றன.

முதலில் சிவனின் பல்வேறு தோற்றச் சிறப்புகளையும் அருஞ்செயல்களையும் விவரித்து விட்டு இறுதியாக ஒன்பதாவது பாடலில் மாலயன் காணா எரியாய் நிமிர்ந்தான் என்று அவர் சொல்வதற்கு ஏதாவது காரணம் இருக்கக் கூடுமா?

சிவனாரது தோற்றச் சிறப்புகளுக்கும், அருஞ்செயல்களுக்கும் சிகரம் வைத்தாற்ப் போல இருப்பதை, அதாவது மாலையும் அயனையும் விட மேலானவராக எரி உருவமாக விளங்குவதை இந்த நிறைவுப் பாடலில் அவர் வைத்துள்ளார். முந்தைய பாடல்களில் வர்ணிக்கப்பட்ட தோற்றங்கள் எல்லாம் ஆரம்ப சாதகர்கள் மனதில் பதிய வைத்துக் கொள்ளத் தான், சிவனுடைய உண்மையான சொரூபம் பெருஞ் சோதி வடிவமே எனக் கூறுவதே போல அவர் ஒன்பதாவது பாடலில் சிவனது எரியாகி நீண்ட கோலத்தை முன் வைக்கிறார்.

வரலாற்றுப் பின்னணி

புராணக் கதைகளை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அவற்றின் மெய்ப் பொருளை ஊகித்து அறிவது  வரலாற்று ஆய்விற்கு உதவும். இந்தப் புராணக் கதையின் பின்னணி என்னவாக இருக்கக் கூடும்?

திருமால் என்பவர் தமிழ் மண்ணின் பழமையான தெய்வம். தொல்காப்பியர் காலத்தில் முல்லை நிலக் கடவுளாக இருந்தவர். சிவன் வழிபாடு மேலோங்குவதற்கு முன்பு முல்லை நிலத்தில் மட்டுமன்றிப் பிற இடங்களிலும் பரவி இருந்தது அவரது வழிபாடு. பிரமன் என்பவர் வேதத்தில் குறிப்பிடப்பட்ட தெய்வம்.

சங்க காலத் தமிழகத்தில் மால் வழிபாடும், ஆலமர் கடவுள் (சிவன்) வழிபாடும் செல்வாக்குப் பெற்றிருந்தன. பிரமன் வழிபாடு அந்தணர் இயற்றிய வேள்விகளில் மட்டும் இருந்திருக்கக் கூடும். முழு முதல் கடவுள் என்ற கோட்பாடு அதற்கு முன் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் சிவனை முழு முதற் கடவுளாக்கும் போக்கு நிலவி வந்ததற்கான அடையாளங்களைச் சிவனுக்கு அளிக்கப்பட்ட முது முதல்வன், தொல் முது கடவுள் என்ற அடைமொழிகளிலிருந்து அறிகிறோம். சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவன் மாலின் பிரசாதத்தை விடச் சிவனுடைய பிரசாதத்திற்குச் சிறப்பிடம் தந்தது கூறப்பட்டுள்ளது.

பிரமன், மால் ஆகிய இந்த இரண்டு தெய்வங்களின் வழிபாடும் அருகிச் சிவன் முழுமுதற் கடவுளாக மேலோங்கிய நிலையைத் தான் இப்புராணக் கதை குறிப்பதாகக் கொள்ளலாம். காரைக்கால் அம்மையார் காலத்திலேயே சிவன் சிறப்பிடம் பெற்று விட்டார் என்பது அவரது பாடல்களிலிருந்து தெரிகிறது. வேத தெய்வமான பிரமன் வழிபாடு அருகியது என்றால் சிவன் வழிபாடு வேதத்துக்கு விரோதமானது என்பது பொருள் அல்ல. வேதமும் சிவனும் இணை பிரியாதவை என்று புறநானூறும் அம்மையாரும் கூறுவதை ஒட்டிச் சம்பந்தரும் சுமார் ஆயிரம் தடவைகள் சிவனை வேதத்துடன் தொடர்பு படுத்திக் கூறுகிறார்.

வேதமும் புறச்சமயங்களும்

வேத வழிபாட்டு முறையில் அக்கினி முக்கிய இடம் பெறுகிறது. மற்றத் தெய்வங்களுக்கு அளிக்கப்படும் ஆகுதியை எல்லாம் சுமந்து செல்பவன் அக்கினி. அவனைச் சில இடங்களில் வேதம் ருத்ரனாகவே குறிப்பிடுகிறது. ஆனால் அக்கினியை அந்தணர் மட்டும் வேள்வி செய்து தான் வழிபட முடியும் என்ற நிலை இருந்தது.

அந்தணர்கள் வேள்வி இயற்றியது யாவும் சமுதாய நலனுக்காக மட்டுமே. மித்திரனும், வருணனும் எங்களுக்கு நல்லவர்களாக இருக்கட்டும்”, “இரண்டு கால் பிராணிகளுக்கும் நான்கு கால் பிராணிகளுக்கும் நலம் உண்டாகட்டும்”, “எங்களைப் பகைவர்களிடமிருந்து காப்பாற்று”, “எங்களுடைய பசுக்களையும் குழந்தைகளையும் காப்பாற்று”, “எங்களுக்குச் செல்வம் கொடு”, “எங்களுக்கு மழை பொழிவி” என்று சமுதாய நலனையே வேண்டுகின்றன வேத மந்திரங்கள்.  புகழ் பெற்ற காயத்ரி மந்திரம் கூட, “எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக” என்று பன்மையில் தான் வேண்டுகிறது. ‘எனக்குக் கொடு’ என்று கேட்கும் சமகம் போன்ற மந்திரங்கள் சில வேதத்தில் இருந்தாலும் அவையும் சமுதாய நலனுக்குரிய வேள்வி செய்யத் தேவையானவற்றைத் தான் எனக்குக் கொடு என்றுகேட்கின்றன.

சமண சாக்கிய நிறுவனர்கள் தனி மனிதன் வாழ்வில் அனுபவிக்கும் துயரங்களாகிய பிணி, மூப்பு, சாக்காடு என்பவற்றால் உந்தப்பட்டு அவற்றிலிருந்து விடுபடப் புது வழி காண முனைந்தவர்கள். பிறவி என்றால் துன்பம் தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த பின், ‘பிறவியே இல்லாத ஒரு நிலையில் துன்பங்களே இரா’ என்று கற்பனை செய்தனர். துன்பங்களுக்கு ஆசையே காரணம் என்றும், அறநெறி வாழ்வின் மூலம் ஆசையை ஒழித்து விட்டால் பிறவியே அழிந்து போகும் என்றும் கூறினர்.

பிணி, மூப்பு, சாக்காட்டை ஒழிப்பதில் அவர்கள் வெற்றி பெறாததை மறைப்பதற்காக தனிப்பட்ட மனிதன் முத்தி நிலை அடைய வேண்டும் என்பதையே குறிக்கோளாகப் பிரசாரம் செய்தனர் அவர்கள். இதனால் அவரவரது உயர்வுக்கு அவரவரே முயல வேண்டும் என்னும் கொள்கையும்,  வேள்வி என்பது செய்பவருக்கு மட்டும் தான் பலன் தரும், மற்றவருக்கு நன்மை இல்லை என்ற தவறான கருத்தும் பரவின. வேள்வி மந்திரங்கள் மறு உலகம் பற்றிக் கூறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் வேள்வி செய்யாதாரும் பக்தியின் மூலம் இறைவனின் அருளுக்கு ஆளாகிச் ‘சிவகதி‘ என்னும் பிறப்பிலா நிலை அடைய முடியும், அப்படி மீண்டும் பிறக்க நேர்ந்தாலும் இறைவனின் திருவடிகளைத் தொழும் இன்பத்தின் முன் உலகியல் துன்பங்கள் ஒரு பொருட்டல்ல என்னும் வழியை முதன் முதலில் எடுத்துக் காட்டினார் காரைக்கால் அம்மையார்.

அம்மையாரின் வழி நின்ற சம்பந்தர், ‘அக்கினியும் சிவனும் வேறல்ல, சிவனை நீரும் மலரும் கொண்டு போற்றியும் வழிபடலாம்’ என்ற கருத்தை வலியுறுத்துவதற்காகவே எரியுருவான சிவன் என்ற கருத்தை ஒன்பதாவது பாடல் தோறும் வைத்துள்ளார் எனக் கருத முடிகிறது. இவ்வாறு வேதத்தின் அக்கினி வழிபாட்டைச் சாதாரண மக்களுக்காக எளிமைப் படுத்துவதே அவரது நோக்கமாகத் தெரிவிக்கின்றன இந்த ஒன்பதாவது பாடல்கள்.

 

பிரம்மா படத்திற்கு நன்றி

பேரழல் படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பேரழலாகிய பெம்மான்-2

  1. ஒரு ஆசிரியர் எழுதுகிறார் என்று தெளிவாகத் தெரிகிறது. அத்தனை ஒழுங்காக அணி சேர்க்கிறார், பொருள் கலையாமல்,, திரு,க,கோதண்டராமன். வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *