தவறின்றித் தமிழ் எழுதுவோமே!(பகுதி-4)
பேரா.பெஞ்சமின் லெபோ
தவறை? தவற்றை?.. எது சரி?
பகுதி 3 -இல்
இனி வரும் பகுதியில் எந்தத் தவறைப் பார்க்கப் போகிறோம்?’ எனக் கேட்டிருந்தேன்.
இக்கேள்வியில் தவறான சொல் எது எனக் கண்டு பிடித்திருந்தால், இந்தப் பகுதியை நீங்கள் படிக்க வேண்டிய தேவையே இல்லை. வேறு எதாவது பயனுள்ள வேலை பார்க்கப் போகலாம். கண்டு பிடிக்கவில்லையா ? கண்டிப்பாகப் படிக்க வேண்டிய பகுதி இது.
தொடங்கலாமா? தொடரலாமா?
இணையதளத்தில் ‘தமிழ்மொழியில் ஒற்றுப் பிழைகள்!’ பற்றி (நல்ல நோக்கத்தோடுதான்) கட்டுரை எழுதி இருக்கிறார் ஒருவர். (பெயர் வேண்டாமே! அவருடைய வலைப்பூவின் முகவரியும் தருவதற்கு இல்லை. தேவைப்படுவோர் எனக்குத் தனி அஞ்சல் அனுப்பிக் கேட்கலாம் ;
என் மின்னஞ்சல் : benjaminlebeau@gmail.com).
அவர் எழுதுவதை அப்படியே தருகிறேன்:
‘தமிழுக்கும் அமுதென்று பேர். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கும் மூத்த மொழி எங்கள் மொழி என்றெல்லாம் சொல்வோம். ஆனால் பயன்படுத்துகையில் இலக்கணப் பிழைகளைத் தவிர்க்கப் பெரும்பாலோர் முயற்சிப்பதே இல்லை. கரணீயங்கள்:
- தவறை உணராமல் சரியென்றே நிச்சயமாக எண்ணிக் கொண்டு பயன்படுத்துதல்.
- தவறு என்று அறியாமல் பிழையாகவே பயன் படுத்துதல்.
- தவறை இலக்கணப்படித் தவறென்று அறிந்தாலும், இன்றைய காலகட்டத்துக்கு இதுவே சரி என்று பயன் படுத்துதல்.
இப்படிப் பலர் உண்டு. ஆனால் ஆங்கிலத்தில் “a”, “an”, “the” பயன்பாட்டை மட்டில் மிகச் சரியாகப் பயன் படுத்த வேண்டும் என்று 100க்கு 99 விழுக்காடு ஆங்கிலம் அறிந்த தமிழன்பர்கள் எல்லோருமே சொல்வார்கள். நான் சொல்ல வருவது, ஆங்கிலத்தில் தவறு செய்ய வேண்டும் என்பதல்ல. தமிழிலும் இலக்கணப் பிழையற எழுத முயற்சிக்க வேண்டுமென்பதே!’
பொருத்தமான கருத்துகள் தாம்; பிழை களைய வருபவர் எழுத்தில் இவ்வளவு பிழைகள்! வருத்தம்தான். ஒற்றுப் பிழை களைய வேண்டும் எனச் சொல்ல வருபவர் போட மறந்த ஒற்றுகளைப் பச்சையாகத் தீட்டி இருக்கிறேன்; இல்லை, இல்லை, பச்சையில் காட்டி இருக்கிறேன். வேறு தவறுகள் மூன்றை நீலத்தில் சுட்டி இருக்கிறேன். (மட்டில் > மட்டும்; கரணீயங்கள்> கரணியங்கள் ; 100க்கு 99> 100 –உக்கு 99). சிவப்பில் உள்ளவை? உங்களுக்கே தெரியும். எவற்றை எல்லாம் பிழை எனக் காட்டித் திருத்த முயலுகிறேனோ அவற்றையே சிவப்பில் கொடுத்திருக்கிறேன் ‘கரணீயங்கள்:’, ‘விழுக்காடு’ போன்ற நல்ல தமிழ்ச் சொற்களைப் பெய்திருக்கும் அன்பரின் தமிழ்ப் பற்று போற்றத் தக்கது. இவர் முதல் இரண்டு புள்ளிகளில் (point 1&2). குறிப்பிடுவதைப் போலவே செயல் பட்டிருக்கிறார். அவ்வளவுதான்.
இங்கே நாம் காணப் போகும் தவற்றை, திருத்தப் போகும் தவற்றை இந்நேரம் கண்டு பிடித்திருப்பீர்கள்.
இத்தவற்றை மிகப் பலரும் செய்கிறார்கள். காட்டாகத் தினகரன் தாளிகையைப் பாருங்கள் :
‘ராஜிவ் விஷயத்தில் நன்றி மறக்கலாமா? செய்த தவறை ஜெயலலிதா திருத்திக் கொள்ள வேண்டும்’
http://www.epaper.dinakaran.com/News_detail_2011.asp?Nid=4749.
புதுக் கவிதை எழுதுபவர்களும் இதற்கு விதி விலக்கு அல்லர் :
‘தவறை உணர்ந்தேன்!..
இதயத்தை,
கோவிலாக்கி,
“என்னவளை” சிலையாக்கி,
கண்களால் ஆராதனையும்,
கவிதைகளால் அர்ச்சணையும்,
செய்து தினம் -என்
ஆசைகளையும், அள்ளியெடுத்து,
அபிஷேகமும், செய்தேன்,
பின்புதான்….. என் தவறை உணர்ந்தேன்,
அவளை கோவில் சிலையாக எண்ணியதால்
அப்படியே இருந்துவிட்டாள்.’
எழுதியவர் :கு.காமராஜ்.
நாள் :04-07-2011 02:37:42 பம்
http://eluthu.com/kavithai/31081.html
தாளிகைத் தமிழிலும் இணையதளத் தமிழிலும் இத்தவறு ஆயிரக் கணக்கில் இடம் பெற்றுள்ளது. ‘தவற்றை‘ எனச் சரியாக எழுதாமல், இப்படித்’தவறை‘ எனத் தவறாகவே எழுதுவோர் எவ்வளவு பேர் தெரியுமா?
நம் அல்லாவூதீன் பூதத்தின் படி (அதாங்க கூகுள்) 1, 36, 000 பேர் !
‘தவற்றை‘ எனச் சரியாக எழுதுபவர்கள் வெறுமனே 11, 900 பேர்தாம்.
சரி, ‘தவறை‘ எப்படித் தவறாகிறது? ‘தவற்றை‘ எப்படிச் சரியாகிறது?
இதைக் காணச் ‘சொல்’ என்னும் குளத்தில் மூழ்க வேண்டும்.
நேற்று இரவு, கனவில் வந்தார் – பவணந்தி முனிவர்– நன்னூல் ஆசிரியர்.
“என்ன ஐயா, பெரியவரை (தொல்காப்பியரை)த் தோள் மீது வைத்துக் கொண்டு ஆடுகிறீரே! யான் ஒருவன் இருப்பதை மறந்து விட்டீரோ? பெரியவர் இலக்கண நியூட்டன் என்றால், யான் ஐன்ஸ்டீன் ஆக்கும்” என்றார்.
(ஐன்ஸ்டீனை மகா பெரியவர் என்று பாராட்டிய போது அவர் சொன்னாராம்: “ஐயையோ அப்படி எல்லாம் இல்லை. நான் குள்ளந்தான் ஆனால் நியூட்டன் என்னும் பெரியவர் தோள் மீது நிற்பதால் பெரியவனாகத் தெரிகிறேன். அவ்வளவுதான்”)
“கடந்த பகுதிகளில் வினைச் சொல், பெயர்ச்சொல் பற்றிச் சொன்னீரே! அவை இரண்டுதான் அடிப்படைச் சொற்கள். காரணம் அவை தனித்து இயங்கக் கூடியவை. அவை தவிர வேறு இரு வகைச் சொற்கள் தமிழில் உண்டு; அவை தனித்து இயங்க முடியாதவை. வினை, பெயரோடு மட்டுமே சேர்ந்து இயங்கும். அவைதாம் இடைச் சொல், உரிச்சொல். ஆகச் சொற்கள் இப்படி வினை,பெயர், இடை, உரி என நான்கு வகைப்படும்..” பெரியவர் கருத்து இது. “இந்த நான்கையும் இயற்சொல், திரிசொல் என்ற இரண்டால் பெருக்கி அவற்றோடு திசைச் சொல், வட சொல் என இரண்டைக் கூட்டிச் சொற்கள் மொத்தம் பத்து வகைப்படும் என்று சொல்லி இருக்கிறேன். நன்னூல் சொல்லதிகாரம் பெயரியல் நூற்பா- 270 -ஐ எடுத்துப் பாரும்” என்றார்.
“அப்படியே ஆகட்டும் ஐயா, இனிமேல் உங்களையும் துணைக்கு அழைத்துக் கொள்வேன்” என்று சொல்ல அவர் மறைந்தார். விழித்து எழுந்து இதனை எழுத அமர்ந்து விட்டேன்.(அப்ப, தூங்கிக் கிட்டேதான் இத எழுதிறீங்களான்னு கேக்கப்படாது!).
கருத்து : இனிமேல், நன்னூலாரும் துணைக்கு வருவார்.
அவர் சொன்ன கருத்துகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் பத்து வகைச் சொற்களில் இடைச் சொல்லைக் கவனிக்கவும். அதில் ‘சாரியை‘ என்றோர் இனமுண்டு. இந்த இடத்தில் இன்னொரு கருத்தைச் சொல்ல வேண்டும். தமிழ்ச் சொற்கள் உள்ளனவே, இவை பூட்டப்பட்ட எந்திரங்கள் மாதிரி. ‘Lego’ தெரியும் இல்லையா? நெகிழியில் (plastic) சில பல வடிவங்களில் சிறு சிறு கட்டைகள் இருக்கும், இவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பலவேறு பொருள்களை உருவாக்கலாம். (அடிப்படைத் துணுக்குகள் சேர்ந்து அணுக்களாகி, அவை மூலக் கூறுகளாக மாறி, அவை தம்முள் இணைந்து பொருளாக உரு எடுப்பதைப் போல).
தமிழ்ச் சொற்களும் அப்படித்தாம். எந்திரத்தைப் பூட்டுவது போலவே அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்கவும் பிரித்ததைப் பூட்டவும் முடியும். (nuts and bolts). இத்தகைய நிலையை உடைய மொழியை ‘ஒட்டுநிலை‘ (agglutinative) மொழி என்பர் மொழியியலார். எந்தத் தமிழ்ச் சொல்லையும் இப்படி அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்க முடியும். தமிழில் எது அக்கு? எது ஆணி? ‘பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ‘ இந்த ஆறும் தான் தமிழில் உள்ள அக்குகளும் ஆணிகளும். (பகாப் பதம் நீங்கலாக உள்ள) எந்த ஒரு சொல்லிலும் முதல் மூன்றும் கண்டிப்பாக இருக்கும். மற்ற மூன்றும் இருந்தாலும் இருக்கும், இல்லாமலும் போகும். இவை ‘optional’.
‘எந்தத் தமிழ்ச் சொல்லையும் இப்படி அக்கு வேறு ஆணி வேறாகப் பிரிக்க முடியும்.‘ என்று சொன்னேன் அல்லவா? அதில் சிறு திருத்தம் செய்தல் வேண்டும். பிரிக்க முடியாத சிறு சொற்களும் இருக்கின்றன . சொல் என்பதைக் குறிக்க வேறொரு சொல் உண்டு – அதுதான் ‘பதம்‘. பிரிக்கக் கூடிய சொற்களைப் ‘பகு பதம்’ என்றும் பிரிக்க இயலா சொற்களைப் ‘பகாப் பதம்’ என்றும் கூறுவர். காட்டாக, அடி, வா, போ, இரு…..போன்ற (ஏவல் வினை முற்றுகள் எனபது இவற்றின் இலக்கணப் பெயர்; பெயர் பற்றிக் கவலற்க!) சொற்களைப் பிரிக்க முடியாது. எனவே இவை பகாப் பதங்கள். பிரிக்கக் கூடிய சொல்லுக்குக் காட்டு :
படித்தனன் = படி + த் + த் + அன் + அன்.
இதில்
படி – பகுதி
த் – சந்தி
த் – இடைநிலை
அன் – சாரியை
அன் – விகுதி
புரிந்து கொண்டீர்களா?
ஓகோ கொட்டாவி வருவது போல் தெரிகிறது! தவறில்லை. களைத்துப் போய் விட்டீர்கள்.
அடுத்த பகுதியில் ‘சாரியை‘ பற்றிப் பார்த்து விட்டு நம் ‘தலைப்புக்குள்‘ மீண்டும் வந்து விடலாம். சரியா?
பி.கு. :’சாரியை‘ என்ற தமிழ்ச் சொல்லை saree -ஐ என்றும் ‘தலைப்பு‘ என்பதை முந்தாணி என்றும் குறும்பாகப் பொருள் கொண்டால் அடியேன் அதற்குப் பொறுப்பல்லன்.
இந்த இழைக்குக் கருத்து எழுதுவது கடினம் ~ தவற்றை புரிந்து கொண்டதால்!