தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பேரா.பெஞ்சமின் லெபோ
பகுதி 3 – இ : எப்படி வந்திருக்கும் ‘முயற்சித்தான்’ ?
சென்ற பகுதியை இப்படி முடித்திருந்தேன் : இனி அடுத்த பகுதியில்,” ‘முயற்சித்தான் எனப் பலரும் எழுதுகிறார்கள் ; எனவே அதைத் தமிழ் ஏற்றுக்கொள்ளவேண்டும்” எனச் சிலர் கூறுவதற்குப் பதில் காண்போம். அதே சமயம், ‘முயற்சித்தான் என்பது எப்படிப் புகுந்திருக்கும் என அலசிப் பார்ப்போம்.அதன் தொடர்ச்சிதான் இக்கட்டுரை.
‘முயற்சித்தேன் ‘ , ‘முயற்சித்தான்’ , ‘முயற்சித்தல் ‘, ‘முயற்சிப்பது’… போன்றவற்றைத் தமிழ் இலக்கணம் ஏன் ஏற்காது, ஏற்க முடியாது என்பதைமுந்தையப் பகுதியில் இலக்கண வழியாகப் பார்த்தோம். இப்படிப் பயன்படுத்துபவர்கள் மிகப் பலர் என்ற வாதம் சரியா என இங்கே கொஞ்சம் அலசுவோமே!
உங்களில் பலரும் மிகவும் சுறுசுறுப்பாக (ஆகா, இதோ இன்னொரு சொல் ; சுருசுருப்பா? சுறுசுறுப்பா ?) சில பல பணிகளில் ஈடுபட்டு இருப்பீர்கள்.அப்படி யாராவது வேலை வெட்டி இல்லாமல் ஈ ஒட்டிக்கொண்டு இருந்தால் அல்லது தமிழில் புற்றீசலாய்ப் புறப்பட்டு வரும் படம் / serial பார்த்துக்கொண்டு இருந்தால் அவர்களுக்கு இதோ சிறு வேலை :(ஆயிரம் அலுவல்களையும் அப்புறம் பார்க்கலாம் என ஒதுக்கிவிட்டுத்தான் இந்த வேலையில் ஈடுபட்டேன் என்பதை இப்போதே சொல்லிக்கொள்கிறேன். இல்லை என்றால் என்னையும் இந்தப் படம் / serial பார்ப்பவர் வரிசையில் சேர்த்துவிடுவீர்கள் !).
கூகுள் தெரியும் இல்லையா? இணையதள அல்லாவுதீன் பூதம் ! அதனைப் பயன்படுத்தி இருப்பீர்கள், எதனையாவது தேடுவதற்கு. தேடு பொறி மட்டும் அல்ல அது – வேறு நல்ல பல பணிகளையும் அது செய்து தரும் என்பதை அறிவீர்களா?
காட்டாகக் கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் என்ற கணித அடிப்படைச் செயற்பாடுகளை (basic mathematical operations) நமக்காக அது செய்யும். ஒரு நாட்டு நாணயத்தின் மதிப்புக்கு ஈடான வேற்று நாட்டு நாணய மதிப்பைக் காட்டித்தரும்.. இப்படிப் பல.
அது போலவே அது செய்யக் கூடிய பணிகளில் ஒன்று சொற்களின் எண்ணிக்கையைச் சுட்டிக் காட்டுவது.ஏதாவதொரு சொல்லைத் தமிழில் இட்டுத் தேடிப்பாருங்கள். மிக மிகக் குறைந்த கால அளவில், அச்சொல் எத்தனை இடங்களில் அல்லது வலைப் பக்கங்களில் காணப்படுகிறது என்பதைச் சுட்டிக் காட்டிவிடும். இந்த முறையைப் புரிந்து கொண்டீர்களா? நல்லது!இப்போது, அதில் ‘முயற்சித்தான்’ , ‘முயற்சித்தல் ‘, ‘முயற்சிப்பது ‘ போன்ற சொற்களை இட்டுத் தேடுங்கள். கிடைக்கும் எண்களைக் குறித்துக் கொள்ளுங்கள் – அந்த அந்தச் சொற்களுக்கு நேராக. இதே முறையைக் கையாண்டு, ‘முயல்’, ‘முயலுதல் ‘, ‘முயற்சி’ , ‘முயற்சி செய்’ …போன்ற சொற்களை இட்டுத் தேடுங்கள்.
கிடைக்கும் எண்களை முன்பு போலவே அந்த அந்தச் சொற்களுக்கு நேராக எழுதிகொள்க . இரண்டு பட்டியலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.வேலை மெனக்கெட்டு நான் எடுத்த பட்டியலைத் தரவா :
பிழையான சொல் – எண்ணிக்கை
முயற்சித்தல்
3 280
முயற்சித்து 81 400
முயற்சித்தாள் – 2 380
முயற்சித்தது – 17 400
……………………………………………………..
சரியான சொல் – எண்ணிக்கை
முயலல் – 616
முயன்றாள் – 18 600
முயல் – 26 400
முயல்கிறேன் – 27 600
முயல்வது – 38 800
முயல்கிறது – 31 600
முயல்கிறார் – 21 500
முயற்சியில் – 7 22 000
முயற்சி – 36 00 000
முயற்சி செய் – 2 33 000
முயற்சி செய்ய – 21 10 000
முயற்சி செய்கிறேன் – 1 56 000
முயற்சி செய்யும் – 10 50 000
முயலும் – 1 41 000
முயற்சி செய்தேன் – 1 72 000
முயற்சி பண்ணேன் – 36 70 000
முயற்சி பண்ணி – 1 48 000
இந்த அலசலின் அடிப்படையில் நீங்களே சொல்லுங்கள், எந்த வடிவம் அதிகமாகப் புழங்குகிறது என்று.
எனவே ‘முயற்சித்தான்’ போன்ற வடிவங்களை அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர் என்ற வாதம் அடிபட்டுப் போகிறது அல்லவா?பயன்படுத்தும் சிலரும் அது தவறான வடிவம் என்பதை அறியாமல் பயன்படுத்துகின்றனர். அது தவறு என அவர்கள் புரிந்து கொண்டால், திருத்திக் கொள்வார்கள். (என்றுமே) திருந்தா மக்கள் (மாக்கள்) சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.
‘முயற்சித்தான்’ போன்ற பயனில் சொல் பாராட்டும் இவர்களைத் திருவள்ளுவர் மிக நாகரிகமாக, ‘மக்கட் பதடி’ எனச் சொல்லிச் செல்வார்.அதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?
பிழையாக இருந்தாலும் வழக்கில் வந்துவிட்டது. எனவே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறுபவர்களும் உண்டு. களையாக இருந்தாலும் களையாமல் வளரவிட்டுக்கொண்டே போனால் பயிர்கள் அழிந்துவிடும். இப்படிப் பிழைகளைப் பொறுத்துக்கொண்டே போனால், மொழி திசை மாறிப் போகும்.தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகள் கிளைத்ததற்கு இத்தகு பிழைகளை முளையிலேயே களையாமல் விட்டதும் ஒரு காரணம் ஆகும்.
இதனை எழுதும் போது பழைய படம் நினைவுக்கு வருகிறது .அந்நாளைய அமெரிக்கத் திரைப்பட நகைச்சுவை இரட்டையர்களை – லாரல், ஆர்டி (Laurel & Hardy) – அறிந்திருப்பீர்கள். முதல் உலகப் பெரும் போரின் போது நடக்கும் கதை அது. அதில் இவ்விருவரையும் கட்டாயமாகப் படையில் சேர்த்துவிடுவார்கள். வீரர்கள் நடைப் பயிற்சி செய்யும் நேரம் அது. இடக் கால், வலக் கால் (left, right) என மாற்றிப் போட்டு வீரர்கள் நடை பயிலுவார்கள். இடையில் வந்து நுழைந்த இந்த இரட்டையரில் ஆர்டி மற்றவர்களைப் போலவே இடக் கால், வலக் கால் போட்டு நடப்பார். லாரலோ வலக் கால், இடக் கால் எனத் தவறாகப் போடுவார். அது மட்டும் அல்ல, ஆர்டியைச் சைகையால் அழைத்துத் தன் கால்களைக் காட்டுவார். ஆர்டியோ குழம்பிப்போவார். லாரல் வற்புறுத்த ஆர்டியும் வலக் கால், இடக் கால் என மாற்றிப் போடத் தொடங்குவார். அவர்களைப் பார்த்து ஏனைய வீரர்களும் தாங்கள் தவறாக நடை போடுவதாக எண்ணித் தம் நடையை மாற்றிக்கொள்ள இறுதியில் படை முழுவதும் தவறாகவே நடை போடும். இதனைக் காணும் அந்தப் படைப் பிரிவின் தலைவன் முடியைப் பிய்த்துக்கொண்டு நிற்பான். அந்தப் படைப் பிரிவுத் தலைவனின் நிலைமை தமிழுக்கும் ஏற்பட வேண்டுமா?
இனி, இக்கட்டுரையின் இறுதிப் பகுதியைக் காண்போம். ‘முயல்’ என்பது வினைச்சொல் ; அதில் இருந்து பிறப்பதுதான் ‘முயற்சி’ என்ற (தொழிற்) பெயர். இதன் வேர்ச் சொல் விளக்கங்களை அறிஞர் பொறிஞர் இராம .கி எடுத்துரைக்கிறார் .
இதனை இத்தளத்தில் காணலாம் :http://www.treasurehouseofagathiyar.net/15800/15890.htm
இந்த இடத்தில் மறுபடி தொல்காப்பியரை அழைத்துக் கொள்வோம்.வினைகளைப் போலவே தோற்றம் அளிக்கும் (வினைச்) சொற்கள் சில உண்டு. ஆனால் அவை முழு வினைகள் அல்ல.ஏனெனில் அவற்றில் தொழில் நிறைவு பெறுவதில்லை. முழுமை அடையாமல் எஞ்சி இருப்பதை ‘எச்சம்’ என்பர். தொழில் முழுமை அடையாமல் எஞ்சி நிற்கும் வினை வடிவங்களைத் தொல்காப்பியர் ‘வினை எஞ்சு கிளவி ‘ என அழைப்பார்.’வினை எச்சம்’ எனப் பெயர் சூட்டியவர் நன்னூலாருக்கு முன் வாழ்ந்த குணவீர பண்டிதர். இவர் இயற்றிய இலக்கண நூல் பெயர் : நேமிநாதம். தொல்காப்பியர் காலத்தில் ஒன்பது வகையான வினை எச்சங்கள் வழக்கில் இருந்தன : செய்து செய்யூ செய்பு செய்தெனசெய்யியர் செய்யிய செயின் செய செயற்கு எனஅவ் வகை ஒன்பதும் வினையெஞ்சுகிளவி. (தொல்காப்பியம் -சொல்லதிகாரம்- வினையியல் நூற்பா :31 )
இதைப் பார்த்து அஞ்ச வேண்டா! சும்மா பந்தா காட்டத்தான் இதனைக் குறிபிடுகிறேன்.இவற்றை வாய்பாடுகள் (வாய்க்கும் பாடுக்கும் இடையில் ‘ப்’ வரக் கூடாது எனபதைக் கவனிக்கவும்)காட்டு : அவன் வந்து காண்பான் . இதில் ‘காண்பான்’ எனபது எதிர்கால வினை (முற்று). ‘வந்த’ என்ற வினைச்சொல்லில் தொழில் முற்றுப் பெறவில்லை எனவே இது (வினை) எச்சம். ‘செய்து‘ என்னும் வாய்பாட்டில் அமைவது. இதைப் போலவே ‘செய‘ என்பது வினை எச்சம். காட்டு வரச் சொன்னான். இதில் ‘வர’ எனபது ‘செய’ என்னும் வாய்பாட்டு வினை எச்சம். ‘செய்து’, ‘செய’ ஆகிய இவற்றை மட்டும் இந்த நூற்பாவில் இருந்து புரிந்துகொண்டால் போதும்.தொல்காப்பியரை வீணாகக் காக்க வைக்காமல் அனுப்பி விடலாம்.
பிற் காலத்தில் ‘துணை வினைகள்’ என ஒரு பகுதி தோன்றியது.ஒவ்வொரு வினைச்சொல்லுக்கும் தனித்தனியே சொற்பொருள் (Lexical meaning) உண்டு. இரு, பாடு, ஆடு, செய், அழு, தள்ளு போன்ற வினைச்சொற்களும் தமக்கென்று தனித்தனியே பொருள் உடையன.இத்தகைய வினைச்சொற்களுள் சில, வேறு வினைச்சொற்களுடன் இணைந்து வருதலும் உண்டு. அவ்வாறு இணைந்து வரும்பொழுது, அவை தமக்குரிய தனிப்பொருளை இழந்து, தாம் சேர்ந்து வரும் வினைச்சொற்களுக்குப் புதிய பொருளைத் தருவனவாய் அமைகின்றன. இத்தகு புதிய பொருளை மொழியியலார் இலக்கணப்பொருள் (Grammatical meaning) என்று குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தம்பொருளை இழந்து, இலக்கணப்பொருளைத் தருகின்ற நிலையில் வரும் வினைச்சொற்களையே துணைவினைகள் (Auxillary verbs) என்று மொழியியலார் கூறுகின்றனர். காண்க :http://www.tamilvu.org/courses/degree/d041/d0412/html/d0412551.htm.
இந்தத் துணை வினைகளால் என்ன பயன்? சுருக்கமாகக் கூறினால், ‘வினைகளுக்குப் புதிய பொருள்களை உண்டாக்குவதற்குத் துணை வினைகள் பயன்படுகின்றன’ எனலாம். காலப் போக்கில் பல துணை வினைகள் புதியதாய்ப் பிறக்கத் துணை வினைகள் குடும்பம் பெரிதாகிப் போனது : செய், வை, பண்ணு , காண், கொள் , கொண்டிரு, விடு, தொலை, தள்ளு, அழு, ஆயிற்று, அருள், இரு, ஒழி, பெறு, இடு, போ, தா, புரி, உண், படு, கில் போன்றவை துணை வினைகளாகப் பிறவி எடுத்தன.
இந்தத் துணை வினைகள் பற்றித் தனி நூலே எழுதலாம். எழுதி இருக்கிறார், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் துறைத் தலைவராகப் பணியாற்றிய முனைவர் சு அகத்தியலிங்கம். இவற்றுக்கு எல்லாம் எடுத்துக்காட்டு, இலக்கியச் சான்றுகள்…என எடுத்துக் கூறிக்கொண்டிருந்தால் பொழுது விடிந்துவிடும் ; இந்தக் கட்டுரையும் தினத்தந்தியில் வந்த (வரும், இன்னும் வருகிறதா என்ன?) ‘கன்னித் தீவு’ போல நீள வேண்டியதுதான்.இங்கே நீங்கள் கவனிக்க வேண்டிய துணை வினைகள் இரண்டு : செய், பண்ணு.
இந்தத் துணை வினைகள் இரண்டும் செய, செய்து என்ற வினை எச்சங்களின் அடிப்படையில் வருவன. புரிந்துகொண்டீர்களா? இல்லை என்றாலும் பாதகம் இல்லை. இந்த அடிப்படையில் தான் நம் கட்டுரையின் பொருளைக் காணப் போகிறோம்.’நல்லனவற்றைச் செய்ய முயல்’. – இப்படி எழுதாமல் , ‘முயல்’ என்ற வினையை முயற்சி’ எனப் பெயராக்கி விட்டுப் பார்த்தால்’நல்லனவற்றைச் செய்ய முயற்சி ….’ சொற்றொடர் (வாக்கியம்) முழுமை பெறவில்லை, வினைச் சொல் இல்லாத காரணத்தால். ஆகவே, ‘நல்லனவற்றைச் செய்ய முயற்சி செய் / பண்ணு ‘ என எழுத வேண்டி வருகிறது.இந்த இடத்தில் தான் ‘முயற்சி செய்’ என்னும் புது வடிவம் உள்ளே புகுகிறது.இங்கே ‘செய்’ என்ற துணை வினை, முழு வினையாகித் தன் வினைப் பயனைச் செய்யத் தொடங்குகிறது.வினைச்சொல் மூவிடத்தும் முக்காலத்திலும் வரும் அல்லவா ! (புரியாதவர்கள் இதைப் பற்றிக் கவலற்க! மேற்கொண்டு படித்துச் செல்லுக .)’நல்லனவற்றைச் செய்ய முயற்சி செய்தான்’ – இப்போது சொறொடர் நிறைவு பெற்று விட்டது.இலக்கணப் பிழை ஏதும் இல்லை. இங்கேதான் வினை விளையாடத் தொடங்குகிறது.ஒரு சில அதி புத்திசாலிகள், ‘முயற்சி செய்தான்’ என்பதில் உள்ள (துணை) வினையைத் தூக்கிவிட்டு’முயற்சி +தான் என்று எழுதிப் பிறகு தகர ஒற்றை -(த்)- இலக்கணப்படிச் சேர்த்து விட்டார்கள்.
(‘முயற்சி +த்+ஆன் >வல்லின ஒற்று இரட்டிக்கவேண்டும் என்ற விதிப்படி ‘முயற்சி +த்+த்+ஆன் >முயற்சித்தான்).ஆக, முயற்சி +த்+தான் > முயற்சித்தான் என (வினை இல்லாத) புது முறை யைக் கண்டு பிடித்துப் புழக்கத்தில் விட்டார்கள், நகைச்சுவை மன்னன் லாரலை’ப் போல – (தாம் செய்வது இன்னதென்று அறியாமலே !)
செய் என்ற துணை வினையைப் போட்டு ‘முயற்சி செய் ‘என்று ஆக்கி அதன் பின் அந்த(த் துணை) வினையைத் தூக்கி. எறிந்து… அடடா துணைவினை என்ன கறிவேப்பிலையா, முதலில் போட்டு அப்புறம் தூக்கி எறிய!
இப்போது புரியும் எப்படி ‘முயற்சித்தான்’ என்பது உள்ளே புகுந்தது என்று!’முயற்சி’ என்ற சொல்லுக்குத்தான் இந்தச் சோதனையும் வேதனையும். இதன் எதுகைகளான ‘பயிற்சி’, ‘அழற்சி’, ‘சுழற்சி’… போன்றவற்றையும் இப்படி மாற்றவேண்டும் என அடம் பிடிக்காதவரை சரிதான். ஆனாலும் ஒரு சிலர் இந்த முறைப்படி, ‘பயணித்தான்’ என எழுதலாம் என்று சொல்லுவதும் பிழையே!எனவே பிழையான வடிவை – ‘முயற்சித்தான்’, ( ‘பயணித்தான்’ …) கை விட்டுச் சரியான வடிவமான ‘முயன்றான்’ (பயணம் சென்றான் )…என்பதை ஏற்போம், கையாளுவோம்.இதுவரை நாம் கண்ட பிழைகள் அவற்றின் திருத்தங்கள் :
பிழை – திருத்தம்
_________________________________________
எல்லோரும் – எல்லாரும்
_________________________________________
காலை, மாலை, நண்பகல் , பிற்பகல்,
வணக்கம் இரவு..வணக்கங்கள் – வணக்கம்
__________________________________________
முயற்சித்தானமுயன்றான்
முயற்சித்தல் – முயலல், முயற்சி
___________________________________________
இனிவரும் பகுதியில் எந்தத் தவறைப் பார்க்கப் போகிறோம்?