க. பாலசுப்பிரமணியன்

இசை நுண்ணறிவு (Musical Intelligence)

education

உலகின் ஆரம்பத்திலிருந்தே ஒலியும். அதன் கருவிலிருந்து பிறந்த இசையும் நம்மால் போற்றப்பட்டுவருகின்றது. இயற்கையின் பல இசைப் பரிமாணங்களை நாம் அனுபவித்தும் ரசித்தும் வந்திருக்கின்றோம். இசையின் பல வடிவங்கள், பல  வெளிப்பாடுகள் நம்முடைய உயிரோடும் வாழ்வோடும் உணர்வுகளோடும் ஒன்றியிருப்பதை நாம் அறிந்தும் அதனை உபயோகித்தும் வந்திருக்கின்றோம். இசைக்கு இணங்காத மானிடர்களை மிருகங்களுக்கு இணையாக பல கலாச்சாரங்களும் பல இயக்கியங்களும் ஒப்பிட்டு வந்திருக்கின்றன.

ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பிறந்தது முதல் தாலாட்டு வழியாகவும் சிறிய பாடல்கள் வழியாகவும் இசை அவர்களது வளர்ச்சிக்கும் உணர்வுகளின் முதிர்ச்சிக்கும் காரணமாக இருந்து வந்திருக்கின்றது. மூளை நரம்பியல் வல்லுநர்கள் மூளையின் வலது பாகம் இசையை அறிந்து கொள்வதற்கும், இசை சார் உணர்வுகளையும் அனுபவங்களையும் ஏற்படுத்துவதற்கு காரணமாக இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். பல காலங்களாக இசையை கற்றுக்கொள்ளுவதற்கும் அதில் வல்லமை பெற்றுக்கொள்ளுவதற்கும் பாரமபரிய முறைகள் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. ஆகவே இசையை பள்ளிகளின் மூலமாக அதிகமாக் கற்றுக்கொண்டு சிறப்படைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்துள்ளது. ஆனால் பாரம்பரிய முறைகளில் ஒரு குருவிடமிருந்து அவருடன் கூடவே இருந்து பயிற்சி மூலமாகக் கற்றுக்கொண்டு சிறப்படைந்தவர்களே அதிகமாக உள்ளனர்.

இசையில் ஈடுபாடு வம்ச வழியாகவும் தன்னிச்சையாலும் மூளையின் வலப்பக்கத்தில் ஏற்படும் தூண்டுதல்களாலும் நுண்ணறிவாக வளர்ந்து வெளிப்படுகின்றது. `தாயின்  கருவிலே இருக்கும் சிசு தன் தாயின் இசை ஒலிகளைக்கேட்டு வெளிப்படுத்தும் அசைவுகள் அந்தக் குழந்தை பிறந்த பின்னே தாய் அதே இசையை இசைக்கும் போது முன்னிருந்ததுபோலவே வெளிப்படுவதாக ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன.

மூளை அறிவியல் ஆராய்ச்சியில் வல்லுனராக விளங்கும் திரு வி. எஸ். ராமச்சந்திரா என்ற அறிஞர் வளரும் பருவத்தில் இசையின் முக்கியத்துவத்தை விளக்கி குழந்தைப் பருவத்தில் கற்றலில் இசையின் தேவையையும் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றார். அவருடைய கருத்தின் படி இசை சிந்தனையின் முதிர்ச்சிக்கும், கற்பனையின் வளர்ச்சிக்கும், படைப்பாற்றல்களை வளர்ப்பதற்கும் இன்றியமையாததாகும்.. இசையைக் கற்றுக்கொள்ளுபவரின் மூளையின் இணைப்புக்கள் அபரிமிதமாக இருப்பதாகவும் அறியப்பட்டுள்ளது. ஆகவே வளரும் பருவத்தில் பள்ளிகளில் இசையை ஒரு முக்கிய பாடமாக மட்டுமின்றி கட்டாய பாடமாக ஆக்கவேண்டிய அவசியம் உள்ளது.

இசை நுண்ணறிவின் வெளிப்பாடுகள் எப்படி வெளிப்படுகின்றன?

  1. ஒலிகளின் அசைவுகளை உணர்வும் திறன்
  2. ராகங்கள், தாளங்களை உணர்வும் திறன்
  3. இயற்கையில் இசையின் தாளங்களை அறிதல்
  4. மனமுவந்து இசையமைக்கும் திறன்
  5. பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளில் ஒருங்கிணைப்பை உணருதல், அறிதல்

இதுபோன்று கற்றலிலும் கற்றல் முறைகளிலும் இசையின் அடிப்படை நுணுக்கங்களை அறிந்து போற்றி அதன் அமைப்புக்களை உபயோகப்படுத்துதல் இசையின் நுண்ணறிவின் வெளிப்பாடுகளாகக் கருதப்படுகிறது.

இந்த இசை நுண்ணறிவின் சிறப்பினால் உலகில் கௌரவிக்கப்பட்டவர்கள் பலருண்டு. உதாரணமாக திருமதி எம். எஸ். சுப்பலக்ஷ்மி, காருக்குறிச்சி அருணாசலம், ஏ..ஆர். ரஹ்மான், பீத்தோவன், மொசார்ட் , இசைஞானி இளையராஜா போன்ற எண்ணற்றவர்கள் இந்த இசை நுண்ணறிவுக்குச் சான்றாக உள்ளனர். இசையில் பட்டப்படிப்பு பெறுவதற்கும் இசை நுண்ணறிவுக்கும் அதிகமான சார்புகள் இருப்பதாக கருதப்படுவதில்லை.

இசை வல்லுனர்களின் மூளை செயல்பாடுகளைப் பற்றி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட ஒரு ஆராய்ச்சியில், இசைக்கும் பொழுது இந்த வல்லுணர்களின் மூளையின் எந்தப்பக்கம் அதிகமாகச் செயல்படுகின்றது என்பதற்கான சோதனை மேற்கொள்ளப்பட்டது. அறிவியல் விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பின்படி அவர்களது மூளையின் வலது பக்கம் எண்பது விழுக்காடுகளும் இடது பக்கம் இருபது விழுக்காடுகளும் செயல்படுமென கணிக்கப்பட்டது.  ஆனால் இருநூறுக்கும் மேற்பட்ட வல்லுநர்கள் இசைக்கும் பொழுது அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் எதிர்மறையான முடிவுகளைக் காட்டின. அதன்படி அவர்களது இடது பக்க மூளை கிட்டத்தட்ட எண்பது விழுக்காடுகளும் வலது பக்க மூளை இருபது விழுக்காடுகளும் செயல்படுவதாக அறியப்பட்டது, இதன் காரணத்தை அலசி ஆராய்ந்தபொழுது இசை கணிதத்தின் அடிப்படைகளில் அமைந்துள்ளது அறியப்பட்டது, தாளங்கள் ராகங்கள் ஆரோகண அவரோகணங்கள் எல்லாம் ஒரு கணக்கின்படி அமைந்துள்ளதையும், ஒருவர் பாடும்பொழுது இந்த தர்க்க ரீதியான கணிப்புக்களைப் பின்பற்றும்பொழுது மூளையின் இடது பக்கம் அதிகமாக வேலை செய்வதும் அறியப்பட்டது. ஆனால் இந்த இசையை ரசிக்கும் ரசிகர்களின் வலது பக்க மூளை அதிகமாக செயல்படுவது அவர்களின் ரசனைத் திறனுக்குச் சான்றாக இருந்தது. இந்த ரசனைத் திறன் வலது மூளையின் செயல்பாடுகளில் ஒன்றாகும். இதிலிருந்து கல்வியாளர்களுக் கிடைக்கும் ஒரு செய்தி:: இசையில் வல்லமையும் நுண்ணறிவும் பெற்றுள்ள ஒருவர் கணிதத்தில் ஏன் சிறப்பாக இருக்கக்கூடாது என்பதாகும்.

இதைத் தொடர்ந்து மேற்கொண்ட பல ஆரய்ச்சிகள் இசையின் மேலாண்மையையும் எவ்வாறு ஒரு மனிதனின் மற்ற பல திறன்களை வளர்ப்பதற்கு அது உறுதுணையாக இருக்கின்றது என்பதையும் நிரூபிக்கின்றன. எனவே எல்லாக் குழந்தைகளுக்கும் ஏதாவது ஒரு இசைத்திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்தினால் அது நல்ல பயன் தரும். அது மட்டுமல்ல,, இசை நுண்ணறிவு ஒரு தனி மனிதனின் உணர்வு நிலைகளை மேம்படுத்தி வாழ்க்கையைச் செம்மையாக்கத் தேவையான “உணவுசார் நுண்ணறிவை’ (Emotional Intelligence) வளப்படுத்த முக்கிய காரணமாக உள்ளது. அது மட்டுமல்ல கருணை, இரக்கம், மனித நேயம் ஆகிய குணங்களை வலுப்படுத்தி வாழ்க்கையின் சவால்களை சந்திக்காத தயாராக்குவது மட்டுமின்றி, அவர்களின் சமூக உணர்வுகளை (Social consciousness) வளப்படுத்தவும் உதவுகின்றது.

இதை கருத்தில் கொண்டுதான் ஹோவர்ட் கார்ட்னர் என்ற “பல்வகை நுண்ணறிவுகள்” என்ற கருத்தின் தந்தையாகக் கருதப்படுபவர் கூறினார்: “நீங்கள் இசையில் சிறந்தவராக இருந்தால் மற்ற வகையான அறிவுகளில் நீங்கள் எவ்வளவு சிறந்தவர் என்பதை என்னால் ஒரு விழுக்காடு தவறில்லாமல் கூறமுடியும்” (If I know you’re very good in music, I can predict with just about zero accuracy whether you’re going to be good or bad in other things)

இசையின் வல்லமையை வெளிப்படுத்த பிளாட்டோவின் சொற்களை விட வேறு அதிகம் தேவையில்லை. “இசை ஒரு தார்மீகச் சட்டம். அது  அது உலகிற்கு ஆன்மாவையும், மனதிற்கு இறக்கைகளையும் கற்பனைக்கு வேகத்தையும், வாழ்க்கைக்கும் மற்ற எல்லாவற்றிற்கும் அழகையும்  மகிழ்வையும் அள்ளித்தருகின்றது.”  ( “Music is a moral law. It gives soul to the universe, wings to the mind, flight to the imagination, and charm and gaiety to life and to everything.”  Plato)

(தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *