நவராத்திரி நாயகியர் (6)
காளி
கொட்டும் குருதியினை நாவில் வைத்தும்
கொய்த தலையினைக் கையில் வைத்தும்
கூரிட்ட அரக்கத்தைக் காலில் வைத்தும்
கூப்பிட்ட குரலுக்குக் குறைதீர்க்க வருபவளே !
,
கண்ணில் நெருப்பைக் கக்கியே வந்ததாய்
கைகளில் ஆயுதம் ஏந்தியே வந்தாய்
கபாலங்கள் அணிந்தே காட்சியைத் தந்தாய்
கருணை மழையே கண்களில் நிறைந்தாய்!
சந்தனத்தைச் சாத்தியதும் சாந்தமாய் நிற்பவளே
செங்குருதி நீராட்டல் சிங்காரி உனக்கெதற்கு ?
செவ்வரளிப் பூவாலே சீருடைகள் செய்திடுவேன்
சடுதியில் வந்திடுவாய் சங்கடங்கள் போக்கிடவே !
பாலோடு தேனும் பருகிடவே பானகமும்
பல்சுவை விருந்தோடு பரிமள நறுமணமும்
எண்ணை விளக்கும் எலுமிச்சை மாலையும்
என்னவளே தந்திடுவேன் ஏற்றிடுவாய் மனமிரங்கி !
பயந்த பார்வையை பைரவியே விரட்டிடுவாய்
மருண்ட மனதை மகிடனாய் கொன்றிடுவாய்
காரிருள் கலக்கத்தை காளியே! விலக்கிடுவாய்
பாரினில் ஈடுண்டோ பராசக்தி பயங்கரியே !
தாயென அழைத்தேன் தணிந்திடு கோபம்
சேயென அணைத்திடு சிந்தையில் நித்தம்
இராத்திரி நேரம் கொலுவினில் வேண்டும்
இசையுடன் அழைப்பேன் இனிதே வருவாய் !