மீ.விசுவநாதன்

 

பகுதி: பத்து
பாலகாண்டம்

தேவர்கள் வானர சேனைகளாக வருதல்

ஸ்ரீராம-தர்ம-சரிதம்

ஜாம்பவான் சுக்ரீவன் வாலி
தாரன், நளன்,நீலன், வாயு
தாமெனத் தந்திட்ட பிள்ளை
தவத்தோன் அறிவனுமன், இன்னும்
மாபலங் கொண்டிருக்கும் வீரர்
மண்ணில் வானரராய்த் தோன்றி
ராவணப் போர்புரிந்து சீதா
ராமன் சேவைசெய்ய வேண்டி (1)

நான்முகன் தேவர்கள் பார்த்து
நல்ல றிவுரையாகச் சொன்னார் !
வானிலே பாய்ந்துசெல்லும் ஆற்றல்,
மனத்தில் உறுதியோடு தீயோர்
மேனியைச் சாய்த்தழிக்கும் எண்ணம்
மிக்க வரத்துடனே தேவர்
நானிலப் பிறப்புகொண்டு “ராம
நாம” பணிக்கென்றே வந்தார் ! (2)

வேள்வி முடித்து அயோத்தி திரும்புதல்

யாகமும் முடிந்தவேளை மன்னன்
அங்கே அந்தணர்கள் கொள்ள
ஏகமாய்ப் பரிசளித்தார்! யோகி
ரிஷ்ய சிருங்கராலே உள்ள
தாகமே தீர்ந்ததாகக் கூறி
தக்க மரியாதை செய்தார் !
“யோகமே காண்பாய்நீ” என்றே
யோகி ஆசிதந்து சென்றார் ! (3)

“ஸ்ரீராம, பரத, லக்ஷ்மண, சத்ருக்கனன்” பிறப்பு

பங்குனி நவமியன்று கோள்கள்
பாங்காய் அமைந்தவேளை அன்பின்
நங்கையாம் “கோசலைக்கு” ராமன்
நல்ல குழந்தையாக வந்தார்!
திங்களை ஒத்த”கை கேயி”
தேவ குணபரதன் ஈந்தாள் !
மங்கள “சுமித்திரை”யோ ரெண்டு
வாய்மைத் திருமகன்கள் பெற்றாள் ! (4)

குலகுரு வசிட்டர் பெயர் சூட்டினார்

இலக்குவன், சத்ருக்னன் என்றும்
இனிய குருவசிட்டர் தானே
குலத்தினை வளர்க்கவந்த நான்கு
குழந்தை களுக்கும்பேர் வைத்தார் !
நிலத்திலே வந்தபிள்ளை தெய்வ
நிகராய்க் கிடைத்ததாக தர்ம
பலத்தவன் தானங்கள் செய்து
பலனை இறைவனுக்கே தந்தார் ! (5)

விதைகள் கற்ற பிள்ளைகள்

பிள்ளைகள் வல்லோராய் நன்கு
பெரிய வீரரென ஆனார் !
வெள்ளையாம் நெஞ்சுக்குள் நித்தம்
வேத நெறிசெழிக்கக் கற்றார் !
அள்ளவே வற்றாத அன்பு,
அறத்தால் அயோத்தியிலே மக்கள்
உள்ளனர் என்கின்ற பண்பை
உலக முணர்ந்திடவே வாழ்ந்தார் ! (6)

விசுவாமித்திர முனிவர் வருகை

பாலனாம் ராமனுக்குக் கொஞ்சம்
பருவம் முதிர்கின்ற வேளை
காலையில் அரண்மனைக்குள் வந்தார்
தவசி விசுவாமித் ரர்தான் !
ஏலமாய் மணக்கின்ற வேத
தேகம் படைத்திட்ட ஞானி
சீலத்தை உணர்ந்துள்ள ராஜன்
சேர்த்த கரத்தோட ழைத்தார் ! (7)

தயரதன் ரிஷியின் தேவை அறிதல்

குறையிலாக் கௌசிகரைப் பார்த்து
“கோவே ராஜரிஷி தேவே”,
இறையென வந்துள்ள உங்கள்
எண்ணம் எதுவென்று சொல்க
நிறைவுடன் தந்திடுவேன்” என்றார் !
நிமிர்ந்த பார்வையைக் காட்டிக்
கறையிலா மன்னவரே எந்தன்
கவலை நீங்கிற்று என்றார் ! (8)

(தர்ம சரிதம் வளரும்)
(ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் பதினேழு, பதினெட்டு பகுதிகள் நிறைந்தது)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on ““ஸ்ரீராம தர்ம சரிதம்” (10)

  1. எனது அபிமானக் கவிஞர் வாலியின் வாரிசாக வளர்ந்து வர…..

    தனது கவிதை வளத்தின் மூலம் கவிஞர் மீ.வீ அவர்கள் வரவேண்டும்…

    மேன்மேலும் ஆன்மீகத்தை கவிதை மூலம் பரப்பவேண்டும்…

    எனது பாராட்டுக்களும், நன்றியும்..அன்புடன் பெருவை பார்த்தசாரதி

Leave a Reply

Your email address will not be published.