இசைக்கவி ரமணன்

c740b994503ba63b446525f69a984b73

வாலைக் குமரியென வந்துநிற்கும் பேரழகை
சாலையிற் கண்டதுண்டு சந்நிதியில் பார்த்ததுண்டு
முலைப் பிறையில் முணுமுணுக்கும் தீபத்துக்
கோலச் சுடர்முனையில் கூடிச் சிலிர்த்ததுண்டு
வேலைநடு வேவுயிரை வெட்டிப் பறிக்குமின்னின்
நீல விளிம்பில் நிலைகுலைந்து போனதுண்டு
சாலையிலே தூலம் கரைந்து மிதக்கையிலே
பாலை நிகர்த்தநகை வாசம் நுகர்ந்ததுண்டு
கோலத் தமிழ்நமக்குக் கூடி இருந்தாலும்
ஏலுமோ இந்த எழிலாள் புதிர்விளக்க?

இன்றுந்தான் காலை எதிர்ப்பட்டாள்; எப்படியாம்?
நன்று துயில்நீங்கி நானமர்ந்து மந்திரத்து
மின்பருகிக் கொண்டிருந்த விந்தைக் கணமொன்றில்
நின்றெதிரே மாலை நிமிண்டுகிறாள்! ஏதுக்காம்?
’உன்னத் தலைப்படுதல் உன்வேலை; உள்ளிருந்தே
எண்ணுவதோ என்வேலை’ என்கின்றாள்; ’நாமத்தை
எண்ணயெண்ண எண்ணங்கள் வண்ணமய மாகியிரு
கண்ணிடையே ஒற்றைக் கனல்புடைத்தல் காணெ’ன்றாள்

வட்டக் கரியவிழி வண்ணச் சதங்கைக்கால்
அட்டக் கருப்பி அதிலோர் இளஞ்சாம்பல்
கிட்ட! மிகக்கிட்டக் கீழ்மூச்சின் வெம்மையினைத்
தொட்டே சுவைத்திடலாம் போலே மிகவணுக்கம்!
எட்டேநாள் என்றாள் எவரறிவார் தாய்மழலை?
கட்டெனக்குப் பாட்டென்றாள்; கட்டிவிட்டேன்; என்னுயிரை
விட்டுவிட்டேன் கால்கள் விரலிடையில்; ஒன்றுசொல்வேன்
தொட்டவளைத் தொட்டேன் சுகம்!

24.09.2017 / ஞாயிறு / காலை 6.18

Leave a Reply

Your email address will not be published.