க. பாலசுப்பிரமணியன்

உள்ளுணர்வு சார்ந்த நுண்ணறிவு (Intra-personal intelligence)

education-1-1

ஒரு முறை மக்களின் தொழில் திறனையும் உற்பத்தித் திறனையும் மேம்படுத்த உதவும் வண்ணம் ஒரு மேலாண்மை பற்றிய கல்வியில் பட்டம் பெற்ற இளைஞன் கடற்கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தான். அங்கே ஒரு படகிற்குப் பின் சாய்ந்து புகை பிடித்துக்கொண்டிருந்த ஒரு முப்பது வயது உள்ள மற்றொருவரைக் கண்டு அவரிடம் வினவினான் “இந்த நேரத்தில் இங்கே உட்கார்ந்து என்ன செய்துகொண்டிருக்கின்றீர்கள்?”

அதற்குப் பதிலளித்த இரண்டாவது இளைஞன் “இன்று என்னுடைய வேலை முடிந்து விட்டது. நான் ஒய்வெடுத்துக்கொண்டிருக்கின்றேன்.”

“இப்பொழுதுதான் பகல் 12 மணி ஆகின்றது அதற்குள்ளே ஓய்வா?”

“:ஆம். இன்றைய வேலை முடிந்துவிட்டது. இன்றைக்கான மீன்களை பிடித்து விற்று காசு சம்பாதிப்பட்டுவிட்டேன்.”

அப்படியானால் மீண்டும் ஒரு முறை சென்று மீன் பிடித்து வந்திருக்கலாமே?

“எதற்கு?”

“:இன்னும் கொஞ்சம் பணம் கிடைத்திருக்கும்?

“அப்புறம்?”

“நிறையப் பணம் இருந்தால் நீங்கள் ஒரு புதிய மாதிரி வேகமாகச் செல்லக்கூடிய படகை வாங்கியிருக்கலாம்

‘பிறகு?’

:இன்னும் நிறைய மீன்களை பிடித்திருக்கலாம். அதனால் இன்னும் கொஞ்சம் பணம் கிடைத்திருக்கும் ?

“பிறகு?”

“நான்கு ஐந்து படகுகளை வாங்கித் தொழிலை மேம்படுத்தியிருக்கலாம்

“பிறகு?””

“ஒரு அழகான வீடு கட்டிக்கொண்டு பணக்காரனாக வாழலாம் ?

“பிறகு?”

“எல்லாக் கவலைகளையும் மறந்து கடலோரமாக அமர்ந்து புகை பிடித்துக்கொண்டு வாழ்க்கையை அனுபவிக்கலாம்”

“நண்பா,  அதைத்தானே நான் இப்பொழுது செய்துகொண்டிருக்கின்றேன்.. இதற்கு ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்?”   என்று பதில் சொன்னான்.

நாம் யார்? நமக்கு என்ன தேவை? வாழ்க்கையில் நம்முடைய குறிக்கோள் என்ன? நம்முடைய இலக்கு என்ன? இந்த இலக்கை நோக்கிச் செல்ல நாம் என்னென்ன செய்ய வேண்டும்?

நம்முடைய மகிழ்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பாதை எங்கே உள்ளது? எப்படிப்பட்ட பாதை? அதில் உள்ள கரடு முரடுகளைக் கடக்க என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடும் உள்ள நிலையை மேம்படுத்துவதே உள்ளுணர்வு சார்ந்த நுண்ணறிவு.

இந்த நுண்ணறிவு ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்டதாகவும் தனித்தன்மை வாய்ந்ததாகவும் அமைகின்றது. பல நேரங்களில் இந்த நுண்ணறிவின் அடிப்படையில் அவர்கள் பிறந்த, வாழ்ந்த சமுதாய பொருளாதார மற்றும் கலாச்சார சூழ்நிலைகள் காரணமாக அமைந்திருக்க வாய்ப்புக்கள் உண்டு.

இந்த உள்ளுணர்வு சார்ந்த நுண்ணறிவில் சிறந்தவர்களாக இருக்கின்றவர்களுடைய பொதுவான குணங்கள் ழ்க்கண்டவையென அறியப்பட்டுள்ளது

  1.  தனிமை
  2.  சுய சிந்தனை
  3. இலக்குகளை நோக்கி செல்லும் தன்மை
  4. சுய விழிப்புணர்வு
  5. ஆழ் சிந்தனை, தியானம்
  6. மௌனம்
  7. தன்னிச்சையாகச் செய்தல்
  8. புதிய நோக்கு, புதிய பாதைகள் வகுத்தல்
  9. மற்றவர்களோடு ஒட்டாமல் தனிவழி வகுத்தல்
  10. உள்நோக்கு மனப்பான்மை

இந்த நுண்ணறிவில் சிறந்தவர்கள் பிற்காலத்தில மேற்கொள்ளக்கூடிய  தொழில்கள்

  1. தத்துவ சிந்தனையாளர்கள்
  2. ஆராய்ச்சியாளர்கள்
  3. திட்ட வரைவாளர்கள்
  4. கருத்து கணிப்பாளர்கள்
  5. கவிஞர்கள், எழுத்தாளர்கள்
  6. மன நல மருத்துவர்கள்

பொதுவாக பள்ளிகளில் சில மாணவர்கள் தனியாக இருப்பதும், யாரோடும் அதிகமாகப் பழகாமல் இருப்பதும், படிப்பில் மட்டும் தங்கள் இலக்கையும் குறியையும் வைத்துக்கொண்டு மற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதும், அதிகமாகப் பேசாமல், சிரிக்காமல் தன்னிச்சையாக இருப்பதும் இந்த நுண்ணறிவைச் சார்ந்தவர்களுக்கான அறிகுறிகள். இந்த நுண்ணறிவு ஒரு மனிதனுக்கு மிகவும் தேவையானது. இந்த உள்ளுணர்வு சார்ந்த நுண்ணறிவே தனது திறன்களையும் தனது எழுச்சிக்கான பாதைகளை வழிப்பதற்கும் உதவி செய்கின்றது. அதே நேரத்தில் இந்த நுண்ணறிவின் மேலாதிக்கம் ஏற்பட்டு மற்ற நுண்ணறிவுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் கவனித்துக்கொள்ளுதல் அவசியம்.

ஓவியம் வரைதல், கவிதைகள் எழுதுதல். புத்தகங்கள் படித்தல் திட்டங்கள் தீட்டுதல,ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்தல், சுயசரிதைகள் படித்தல் போன்ற பல ஆக்க பூர்வமான வேலைகள் மூலம் இந்த நுண்ணறிவை வளப்படுத்த முடியும்.  சமூகப் பிரச்சனைகளை பற்றி பேசுதல், கருத்துக் பரிமாற்றம் மற்றும் ஆராய்ச்சிகள் மூலமும் இந்த அறிவை வளப்படுத்த முடியும்.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *