நிசப்த வெளியில்..!
பெருவை பார்த்தசாரதி
எத்தனையோ எண்ணங்கள் எழுகிறது ஏட்டிலெழுத..
……….ஏனைய கவிஞர்பாவலரின் எழுச்சிமிகு சிந்தனையால்.!
புத்தகத்தைப் புரட்டிப்பார்த்து வித்தகனாய் வலம்வந்து..
……….பூவுலகில் வாழ்வோருக்கு புதியசெய்தி சொல்லவேணும்.!
சொத்தாவதெலாம் எழுதிச்சேர்க்கும் வரிகளொன்றே..நாம்..
……….செத்தபிறகும் நிலைத்திருக்கும் எழுதிய எழுத்தேயாம்.!
முத்தானக் கவிதைவரிகள் மூளையிலே முளைப்பதற்கு..
……….முனையும் எண்ணமும் நிசப்தமுமங்கே நிலவவேண்டும்.!
காலத்தால் அழியாத காப்பியத்தைக் கவிச்சக்கரவர்த்தி..
……….கம்பனும் வடிவமைத்தான் கடவுளிடம் பெற்றருளாலே.!
ஞாலத்தில் நிலைபெற்ற எழுச்சிதரும் கவிதையையே..
……….மணக்குள விநாயகனின்முன் புனைந்தான் மஹாகவியும்.!
காலத்துக்கும் பொருந்துகின்ற கவிதையைக் கொடுத்தான்..
……….கவியரசன் கண்ணதாசன் தன்கையில் கோப்பை ஏந்தி.!
நீலவானும் விண்வெளியும் கவியெழுதக் கைகொடுக்க..
……….நிசப்த வெளியிலமர்ந்து இயற்கையை நானெழுதுவேன்.!
கண்ணில் தோன்றுமியற்கைக் காட்சிகளுக் கிடையில்..
……….கதிரவன் தோன்றுமற்புத நேரம்தெய்வ நினைப்பூறும்.!
மண்ணிலோடும் சிற்றோடை மெல்லிசை எழுப்பும்போது..
……….மகரந்தக் கருத்தெலாம் மலர்போன்ற கவிதையிலுதிக்கும்.!
விண்ணிலுலவும் விண்மீன்களைக் காண மண்ணின்மீது..
……….விரியும் பூஞ்சோலைக் களியூட்டுமதில் கவியூற்றெழும்.!
பண்ணிலெழும் மகுடிச்சப்தத்திற் கெழும் பாம்புபோல..
……….எண்ணிலாச் சிந்தனைகளெழும் நிசப்தச் சூழ்நிலையில்.!
அழகான சூழலில் அடர்த்தியான மரங்களுக்கிடையில்..
……….அடுத்திருக்கும் அருவியில் எழுமெல்லிசைச் சப்தமும்.!
பழுத்திருக்கும் கனிகளைப் பறவைகளும் மந்திகளும்..
……….பகுத்துண்ணும் காட்சிகளால் பார்ப்பவர் மனம்துள்ளும்.!
நிழல்தருமரமும் புல்வெளியும் மழைநோக்கி நிமிரும்..
……….நெடுநேரமங்கே அமர்ந்திருக்க நெஞ்சமும் இசையும்.!
சூழலோடுசுற்றமும் சுகமானநிசப்தமும் சேரும் போது..
……….சாமரங்கள்வீசும் தென்றலால் பாவெழுதும் திறன்வரும்.!
நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::14-10-17
நன்றி படம்:: கூகிள் இமேஜ்