Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் – 33

க. பாலசுப்பிரமணியன்

வேண்டிக்கிடந்தால் வேதனையில்லை !

திருமூலர்-1-3

இறைவனின் அருளைப் பெற அடியார்கள் என்னென்னவோ முயற்சிகள் செய்கின்றார்கள். சிலருக்கு அவன் அருள் மிக விரைவிலேயே கிட்டுகின்றது. சிலருக்கு பல காலம் தவமிருந்து அருள் கிடைக்கிறது. இன்னும் சிலருக்கு எவ்வளவு முயன்றும் அருள் கிடைப்பதற்கான அறிகுறி கூடாக கிடைப்பதில்லை. ஏன் இந்த பாரபட்சம் என்ற கேள்வி நம் உள்மனதில் தோன்றுகின்றது . ஆனால் இறைவனோ நம் உள்ளத்திலே குடிகொண்டுள்ளதாகக் கூறுகின்றார்கள் . அப்படியானால் நம்முடைய உணர்வுகளுக்கும் பேச்சுக்களுக்கு சிந்தனைகளுக்கு அவன் உள்ளிருந்து சாட்சியாக அமைகின்றான்.

அவனை நாம் எப்படி அணுக வேண்டும்? திருமூலரின் இந்தப் பாடல் நம்முடைய சிந்தனைக்கு விருந்தாக அமைகின்றது.

காண்டற்கு அறியான் கருத்திலன் நந்தியும்

தீண்டற்கு சார்தற்கும் சேயேனாகத் தோன்றிடும்

வேண்டிகிடந்து விளக்கொளியான் நெஞ்சம்

ஈண்டிக்கிடந்து அங்கு அருள் அறும் ஆமே

வேண்டிகிடப்போருக்கு விளக்கொளியாய் வந்து அருள்பாலிக்கும் பேரருளாளன் ! உள்ளத்தில் நிறுத்தி ஆராய்ந்து பார்த்தால் உலகமே அங்கே அவன் வசத்தில் தென்படும். வெளியுலகில் காண்கின்ற காட்சிகளெல்லாம் நம் உள்ளுணர்வில் உறைந்திருப்பதைக் காணக்காண அணுவும் அண்டமும் ஒன்றுக்குள்ளே ஒன்றாய் எல்லையில்லா இன்பத்தின் பிரதிபலிப்பாய் இருப்பதைக் காண முடியும்

திருமூலர் சொல்வதைக் கேட்கலாமே!

குறிப்பினின் உள்ளே குவலயம் தோன்றும்

வெறுப்புஇருள் நீங்கில் விகிர்தனும் நிற்கும்

செரிப்புஉறு சிந்தையை சிக்கென நாடில்

அறிப்பு உறு காட்சி அமரரும் ஆவே.

நம்முடைய ஆன்மாவை விட்டுப் பிரியாமல் அத்தோடு ஒன்றி இருக்கும் நிலையை மிக அழகாக “’விகிர்தன் நிற்கும்’” என்று விளக்கிய திருமூலர் இந்தப் பாடலில் இறைவனின் காட்சிக்கு வழி காட்டுகின்றார்.

“சிக்கென நாடில்” என்று திருமூலர் சொல்லும்பொழுது இறைவனைக் காண வேண்டும் அந்த ஆனந்த அனுபவத்தை ரசிக்க வேண்டும் என்பதில் எவ்வளவு உறுதி தேவை என்பது தெளிவாக வெளிப்படுகின்றது.

இதே உறுதியான போக்கை நாம் மாணிக்கவாசகரிடமும் பார்க்கின்றோம்

செம்மையே ஆய சிபதம் அளித்த

செல்வமே சிவபெருமானே

இம்மையே உன்னைத் சிக்கெனப் பிடித்தேன்

எங்குஎழுந் தருளுவது இனியே !

இவ்வாறு ‘சிக்கெனைப்பிடித்த’ மாணிக்கவாசகருக்கு அவன் எப்படி அருளினான் தெரியுமா? அந்த அனுபவத்தை அவரே வர்ணிக்கின்றார்

கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான்

கிளையினான் கேளாதே எல்லாங் கேட்டான்

நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே

நாயினிக்குத் தவிசிட்டு நாயி னேற்கே

காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்

கேளா தனவெல்லாங் கேட்பித்த தென்னை

மீட்டேயும் பிறவாமற் காத்தாட கொண்டான்

எம்பெருமான் செய்திட்ட விச்சைதானே !

“சிக்கெனப் பிடித்த” மாணிக்கவாசகருக்கு அருளிய இறைவன் அன்பு பாராட்டித் தன்னை நாடி வரும் உயிர்களின் குற்றங்களைக் கூட ‘குணாமாகக்” கருதி ஆட்கொள்ளும் கருணை உள்ளம் படைத்தவன். அதை உணர்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் பாடுகின்றார்:

மற்று நான் பெற்றது ஆர்பெற வல்லார்?

வள்ளலே கள்ளமே பேசிக்

குற்றமே செயினும் குணமேயெனக் கொள்ளும்

கொள்கையால் மிகைபல செய்தேன்:

செற்றமீது ஓடும் திரிபுரம் எரித்த

திருமுல்லை வாயிலால் அடியேன்

பற்றினேன் உற்ற படுத்துவர் களைவாய்

பாசுபதா !   பரஞ்சுடரே !

“சிக்கெனப் பிடிப்பதும் பாதங்களை பற்றிக்கொண்டு வேறு சிந்தனையே இன்றி அழுவதும் அரற்றுவதும் வேண்டுவதும் அடியார்களுக்குச் சொல்லியும் வேறு தர வேண்டுமோ? வேண்டிக்கிடந்தால்  வேதனையில்லையே

இவர்கள் சொன்னதுபோல் “சிக்கெனைப் பிடிக்காமல் ” சிந்தையை அலைக்கழித்து ஊரெல்லாம் தேடி பயனற்று உள்ளம்நொந்து அந்த வேதனையில் நாம் வாடும் பொழுது பத்திரகிரியாருக்கு ஏற்பட்ட நிலையும் அதில் பிறக்கின்ற கேள்வியும் தான் நினைவுக்கு வருகின்றது

மற்றிடத்தைத் தேடியென்றென் வாழ்நாளைப் போக்காமல்

உற்றிடத்தைத் தேடி யுறங்குவது யெக்காலம்?

இறைவனின் பாதங்களை தங்கள் உணர்வுகள் மூலம் பற்றிக்கொண்ட அடியார் நெஞ்சம் பதைபதைக்கின்றது. “இறைவா! என்னென்ன பிழைகளெல்லாம் நான் வாழ்வில் செய்துவிட்டேன். அப்படியிருந்து உன் பெருங்கருணை எல்லாப் பிழைகளையும் பொறுத்து என்னை ஆட்கொள்ள விரும்புகின்றதே !” என்று வியந்து தன் பிழைகளைப் பொறுத்தருள பட்டினத்தார் வேண்டுகின்றார். ஆயின் என்னென்ன பிழைகள் செய்திட்டோம் என்று அவர் பாடல் பட்டியலிட்டுக் காட்டுகின்றது:

கல்லாப்  பிழையும் கருத்தாப் பிழையும் கசிந்துருகி

நில்லாப் பிழையும் நிலையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்

சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்

எல்லாப் பிழையும் பொருத்தருள்வாய் கச்சி ஏகாம்பரனே !

என்ன உருக்கமான வேண்டுகோள் ! இந்த மனம் விட்டுப் பேசும் அடியார்களின் அன்புக்கு இறைவன் பணியமாட்டானா? மனமுருகி வேண்டுகின்ற அடியார்களுக்கு அருளே வடிவான இறைவன் எப்படி வந்து அருள் புரிகின்றான் ? திருமூலர் சொல்லுவதைக் கேட்போமே !

அருளில் பிறந்திட்டு அருளில் வளர்ந்திட்டு

அருளில் அழிந்து இளைப்பு ஆறி மறைந்திட்டு

அருளால் ஆனந்தத்து ஆரமுதூட்டி

அருளால் என் நந்தி அகம் புகுந்தானே 

சிற்றறிவு பேரறிவில் இணைவதற்கு அவன் அருள் தேவைதானே! அது அடியார்களுக்கு அளவின்றிக் கிடைத்துக் கொண்டிருந்தது !

தொடரும்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க