தீ தின்ற உயிர்..!
பெருவை பார்த்தசாரதி
விந்தையாய் அனைத்தும் மாறுகின்ற வியனுலகில்..
……….வியக்கும் வகையில் வீண்செயல்களும் உண்டாம்.!
கந்தைத்துணியுடன் கடுமுழைத்து வாழும் வர்க்கம்..
……….காலம்தள்ளக் கந்துவட்டிக் கடனால் தத்தளிப்பார்.!
சிந்தை கலக்கும்வட்டியும்.!அசலையே விழுங்கிவிட..
………. சீர்கெடும் தம்வாழ்வைத் தடுக்கமுயன்று தோற்பார்.!
தந்தையும்தாயும் எடுக்கும் தவறான கொடுமுடிவால்..
……….தளிர்க்குழந்தையும் தீக்குளிப்பது கொடுமை யன்றோ.!
உள்ளத்தில் நல்லுள்ளம் கொண்டே பெற்றோர்தன்
……….பிள்ளையின் படிப்பினிலே பெருமிதம் கொள்வார்கள்.!
பள்ளிக்குச் செல்வார்கள்! சிறப்பாகப் படிப்பார்கள்!
……….போற்றும் வித்தகனாவார்! என்றேதான் எண்ணுவர்.!
கள்ளமற்ற உள்ளத்தை உறவாய்க் கொண்டுவளர்ந்த
……….கபடமறியாப் பருவமதை யாரிழக்க நினைப்பார்கள்.!
பள்ளியினுள் பாலகர்கள் கவனம் பாடத்திலிருக்க
……….பற்றியதீ தின்றது பச்சிளங்குழந்தைகளை உயிரோடு.!
மேற்படிப்பு என்பது கனவாகுமெனும் நிலையினால்..
……….மேன்மையில் அரியமானுடப் பிறவியைத் துறக்க…!
தற்கொலையெனும் முடிவை தனித்தே எடுப்பார்.!
……….தரணியில் வாழ்வதில்லை இனியெனச் சபதமேற்பார்.!
கற்றபயனறியுமுன் தன்னுயிரைத் தீக்கிரை யாக்குவர்..
……….காலத்தின் கோளாறா?…….பருவத்தின் கோளாறா.?
தற்கொலை ஒன்றுதான் நிரந்தரமான தீர்வென்றால்..
……….தரணியில் நிலையாய்வாழ கற்றகல்வி பயனுறாது!
மாயோன்நம்மை மண்ணுலகில் படைத்து விட்டான்..
……….மானிடராய் வாழ்ந்து பிறர்க்குதவி செய்துவாழ்வோம்.!
தீயோமண்ணோ ஏதோவொன்று இறந்தபின் உடலைத்..
……….தின்றுவிடும் எனுமெண்ணச் சிந்தனையில் வாழ்வோம்.!
தூயோமாய் வருமெண்ணமே வாழ்விலுயர வழியாகும்..
……….தழைத்துயர வழிகோலும்!..தற்கொலையைத் தவிர்க்கும்.!
ஐயோ.! இக்கொடுங்செய்கை இனிவேண்டாம் இறைவா?
……….அகத்தினில் இருள்நீக்கி ஜகத்தினில் சிறக்கவாழஅருள்.!
நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::28-10-17
நன்றி:: படம் கூகுள் இமேஜ்