செண்பக ஜெகதீசன்

 

 

ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்

கிரவி னிளிவந்த தில்.

-திருக்குறள் -1066(இரவச்சம்)

 

புதுக் கவிதையில்…

 

பசுவின் தாகம் தீர்க்கும்

நல்லறம் கருதி

நீர்கேட்டு இரந்தாலும்,

அவ்விதம்

இரத்தலைக் காட்டிலும்

இழிவான செயலொன்றில்லை,

இரக்கும் நாவுக்கு…!

 

குறும்பாவில்…

 

பசு பருகிட நீர்கேட்டிரந்தால்,

அறமிதுவெனிலும் இரக்கும் நாவுக்கு

இதற்குமேலோர் இழிவில்லை…!

 

மரபுக் கவிதையில்…

 

தாகம் தீர்த்திட பசுவினுக்காய்

தண்ணீர் கேட்டே யிரப்பதது,

சாகும் உயிரைக் காத்திடும்நல்

சாத்திரம் காட்டும் அறமெனிலும்,

தேக உறுப்பாம் நாவினுக்குத்

தண்ணீர் பெறவே யிரந்ததுதான்,

ஆகக் கூடிய தலைகுனிவாம்

அதற்கு மேலும் இழிவிலையே…!

 

லிமரைக்கூ..

 

நீரிரப்பர் தீர்த்திட பசுவின் தாகம்,

அறமிதென்றாலும் ஆகாதிரந்த நாவினுக்கே

அதுபெறும் ஈடிலா இழிவாம் சோகம்…!

 

கிராமிய பாணியில்…

 

எரக்காத எரக்காத

எதுக்காகவும் எரக்காத..

 

தாகத்தில தவிக்கிற பசுவுக்கு

தண்ணிகுடுக்கறது புண்ணியந்தான்,

அனாலும் அத

எரந்துகுடுக்கறது நல்லதில்ல..

 

எரந்து கேட்ட நாக்குக்கு

இதவிடக் கேவலமான

கெடுதியில்ல கெடுதியேயில்ல..

 

எரக்காத எரக்காத

எதுக்காகவும் எரக்காத…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *