தவறின்றித் தமிழ் எழுதுவோமே!
பகுதி 4 -ஆ : தவறை? தவற்றை? எது சரி?
பேரா.பெஞ்சமின் லெபோ
பகுதி 4 அ -வை முடிக்கும் போது, இப்படி எழுதி இருந்தேன்:
‘அடுத்த பகுதியில் *சாரியை’ பற்றிப் பார்த்துவிட்டு நம் ** ‘தலைப்பு’க்குள் மீண்டும் வந்து விடலாம். சரியா?’
ஆனால், இப்போது முதலில் தலைப்பைப் பார்த்து முடித்துவிட்டுப் பிறகு ‘சாரியைக்கு’ப் போவோம். ஏனெனில் அடுத்த பிழையைத் திருத்த ‘சாரியை’ பற்றிய அறிவு மிகத் தேவை.
இனி, தவறை, தவற்றைப் பற்றி ஆய்வோம்.தவறு – இது பெயர்ச்சொல். நாம் முன்பே பார்த்தபடி, இந்தப் பெயர்ச் சொல் (ஐ, ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன், கு, இன், இல், அது, உடைய, கண்) உருபுகளை ஏற்கும்.. இப்படி உருபுகளை ஏற்கும் போது என்ன ஆகிறது என்பதைக் காண்போம்.(ஆய்வகத்தில் – laboratory- அறிவியல் ஆய்வு செய்வதைப் போன்றதுதான் இதுவும்)தவறு என்பது பகு பதம். அதனை இப்படிப் பிரிக்கலாம் / பகுக்கலாம் : தவறு > தவ+று > தவ+ற்+உ இதனோடு இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’ சேர்ப்போம் :தவறு > தவ+று > த+ற் ஐ !
கணிதத்தில் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண முயலும் போது, எந்த விதியை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அறிதல் அகத்தியம். (அவசியம்) .
அது போலவே தமிழ் இலக்கணமும் ஒருவகையில் கணிதம், அதன் அடிப்படையாகிய ஏரணம் – தர்க்கம் – போன்றதுதான்.
எந்த விதியை எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்று அறிதல் தமிழ் இலக்கணத்துக்கும் தேவை. இந்த இடத்தில் நன்னூல் விதி ஒன்றை நினைவு படுத்த வேண்டி இருக்கிறது :
வினைச் சொல்லை வரையறை செய்ய வரும் தொல்காப்பியர் வாழ்க்கை மெய்ப்பொருளை (தத்துவத்தை)த் தம் நூற்பாவில் பொதிந்து வைத்திருப்பதை முன்பு விளக்கினேன். அதைப்போல இந்த நூற்பாவில் நன்னூலார் நகைச் சுவைக் காட்சி ஒன்றை அமைத்து வைக்கிறார். தமிழ்ப் படம் ஒன்றில், நகைச்சுவை நடிகர் வடிவேலு தனியாக நின்று சிலம்பக் கம்பு ஒன்றைச் சுழற்றி ‘ஆ, ஊ’ என்று வெற்றொலி எழுப்பிக் கொண்டிருப்பார். உணமையிலேயே சிலம்பாட்டத்தில் வல்லுநரான ஒருவர் அங்கே வந்து நின்றதுதான் தாமதம், வடிவேலு இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போய் மறைந்து விடுவார். இப்படிப்பட்ட காட்சியை நன்னூலார் காட்டுகிறார். குறைந்த கால அளவுடைய உகரம் (குற்றியலுகரம்) மெய்யோடு கூடி நிற்கிறது. அங்கே முழுக் கால அளவுடைய உயிர் (எழுத்து) வருகிறது. வலிமையான இந்த உயிரைக் கண்டவுடன் குற்றுயிரும் குலை உயிருமாய் இருக்கும் உகரம் தன் மெய்யை (உடலை) விட்டுவிட்டு ஓடிப் போகுமாம். இதோ வேடிக்கையான அந்த நூற்பா :
‘உயிர்வரின் உக்குறள் மெயவிட் டோடும்’ (நன். நூற்பா 164).
மேலே சொன்ன சமன்பாட்டை மறுபடி கொண்டுவந்து இந்த விதியை அதில் செயல் படுத்துவோம் :தவ+று > தவ+ற்+உ + ஐ இங்கே குறை உயிர் ‘உகரம்’ . அருகே முழு உயிரான ‘ஐ’ வருகிறது.நன்னூலாரின் விதிப்படி, இந்த ‘உகரம்’ சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போய் மறைகிறது.
விளைவு : தவ+று > தவ+ற்+ ஐ
இந்த இடத்தில் இன்னொரு விதி குறுக்கிடுகிறது :’உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே ‘ (நன். 204 ).உயிரை இழந்து நிற்கும் உடல் ‘ற்’ மீது உயிர் (‘ஐ’) சேர ‘றை’ பிறக்கிறது.ஆக நம் சமன்பாடு இப்போது எப்படி ஆகிறது? இப்படித்தான் :தவ+று > தவ+ற்+ ஐ > தவ + றை> தவறை!அப்படியானால் தவறை என எழுதுவது தவறல்லவே, சரிதானே!
ஆம், ஆம் என்றுதான் மிகப் பலரும் எழுதி வருகின்றனர், இங்கே வந்து குறுக்கிடும் இன்னொரு விதி இருப்பதை அறியாமலே!என்ன விதி அது?
‘ஒற்று இடையில் மிகும் … குற்றியலுகரங்களின் முன் வருகின்ற வல்லினம் வேற்றுமையில் மிகும் ‘.இதற்கான நூற்பாக்களைத் தருகிறேன் :தொல்காப்பியம் எழுத்ததிகாரம்; குற்றியலுகரப் புணரியல் சூத்திரம் 6.நன்னூல், 182
இவற்றை இங்கே விளக்க இடமும் காலமும் போதா.மேலும் இவற்றின் கருத்தை மட்டும் புரிந்துகொண்டால் போதும். தமிழில்… இல்லை, இல்லை தமிழ் இலக்கணத்தில் ஈடுபாடு கொண்டோர் இந்த நூற்பாக்களில் இறங்கி உரைகளைப் படித்துப் புரிந்துகொள்ள முயலலாம்.அந்த வம்பு வேண்டா என்பவர்கள் தெம்பாகத் தொடர்ந்து படியுங்கள்.
மேலே சொன்ன விதியின் பொருள் என்ன ? குற்றியல் உகரத்தின் முன்னாலே வரும் வல்லின மெய் எழுத்து இரட்டிக்கும். எப்போது? வேற்றுமை உருபை ஏற்கும் போது.
மறுபடி நம் சமன்பாட்டுக்கு வருவோம்: தவறு > தவ+றுஇந்த ‘று’ வில் உள்ள ‘உ’ குற்றியல் உகரம். இதற்கு முனனால் உள்ள வல்லின மெய் எழுத்து : ‘ற்’. இது இரட்டிப்பாக வேண்டும்.அப்படியானால் நம் சமன்பாடு இப்படி ஆகும் :
தவறு > தவ+று >தவ+ ற் +உ+ஐ > தவ+ற் +ற் +ஐ (முழு உயிர் வருவதால், இந்தக் குற்றியல் உகரம்’ ஓடிப் போய் விடும் என்பதை நினைவில் கொள்க!).
இவ்வளவு நேரம் பகுத்துப் பார்த்ததை (இதனை, உயர் கணிதமான Calculus இல் differentiation என்பர்)
இனி, தொகுத்துப் பார்த்தால் (இதனை, உயர் கணிதமான Calculus இல் integration என்பர்) தவ+ற் +ற் +ஐ > தவ +ற் +றை> தவற்றை என வரும்.
தமிழ் இலக்கணத்தை இப்படிக் கணித முறை வழியாகவே விளக்க இயலும் என்பதைத் தெரிவிக்கவே இந்த முறையைக் கையாண்டேன்.இதுவரை விளக்கியதில் இருந்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய செய்தி இவைதாம் :
(உயிர்த் தொடர்க்) குற்றியல் உகரத்தில் முடியும் பெயர்ச் சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்கும் போது
1 ‘குற்றியல் உகரம்’ காணமல் போய்விடும்
2 அதற்கு முன் உள்ள வல்லின மெய் எழுத்து இரட்டிப்பாகும்.
ஆகவேதான் ‘தவறை’ என எழுதுவது தவறு ; ‘தவற்றை’ என்று எழுதுவதே முறை.
தவறு என்னும் சொல்லுக்கு எதுகையாக வரும் சொற்களைத் தேடிப் பாருங்கள் :
கயிறு, வயிறு, பயிறு,… இப்படி வரும் சொற்கள் எல்லாம் உருபுகளை ஏற்கும் போதுகயிற்றை, கயிற்றால்…., வயிற்றை, வயிற்றால், வயிற்றோடு…, பயிற்றை, பயிற்றால்… என்றே எழுத வேண்டும்.
இதே விதிகள் (நெடில் தொடர்க்) குற்றியல் உகரத்தில் முடியும் பெயர்ச் சொற்கள் வேற்றுமை உருபுகளை ஏற்கும் போதும் பொருந்தும்.காட்டாக :ஆறு > ஆற்றை சோறு> சோற்றால் சேறு > சேற்றோடு… என வரும் ; வருவதே முறை.
இதன் எதுகைகளைத் தேடிப் பாருங்கள் : கூறு, வேறு, மாறு, சீறு ….இவை யாவும் மேல சொன்னபடிதான் உருபை ஏற்கும் , ஏற்கவேண்டும்.இது தான் விதி. நம் முன்னோர் மதி வகுத்த விதி. இந்த விதியை நம் மதியால்’ மாற்றுவோம் எனபது அறிவின்மையின் பாற்படும்.எனவே,
இனியாகிலும், இத் ‘தவறை’த் திருத்தித் ‘தவற்றை’ச் சரி செய்வோமா?அடுத்த பகுதியில், மிக, மிக, மிகப் பலரும் பரவலாகச் செய்து வரும் இதே போன்ற தவற்றைச் சுட்டிக் காட்டித் திருத்த விழைகிறேன் .
அது……………………………………?
இதுவரை “தவற்றை” தவறாய் “தவறை” என்று எழுதிவந்தேன். அருமையான எளிமையான விளக்கம். இனி இந்தத் தவறு நிகழாது. ”கற்றல்” ஒரு தொடர் நிகழ்வு என்பதை எனக்கு மீண்டும் உணர்த்தியுள்ளீர்கள். நன்றி!
கேப்டன் கணேஷ்!
பின்னூட்டத்துக்கு நன்றி.
“இனி இந்தத் தவறு நிகழாது”
என்ற உறுதிமொழி நெஞ்சில் தேன் வார்க்கிறது.
மேலும் கட்டுரை எழுத ஊக்கம் சேர்க்கிறது.
நன்றி பல.
அன்புடன்
பெஞ்சமின்
சுவரை என எழுதுங்கால் சுவற்றை என எழுதுவதைச்
சொல்லப்போகிறீர்கள்
தேவ்
அன்புள்ள நண்பர் தேவ்
வணக்கம்!
முன்பு தாங்கள் இட்ட முன்னூட்டம்
வழியே தங்கள் ஆர்வத்தை அறிந்தேன்.
இந்த முன்னூட்டம் வழியே தங்கள் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டேன்.
‘தவற்றை ‘ப் போலவே ‘சுவற்றை’ என் எழுத வேண்டும் என்பது சொல்லாமல் பெறப்படும் .
ஆகவே அதனைச் சொல்லவில்லை.
‘சுவரை’ என எழுதினாலும் தவறில்லை.
தமிழில் ரகரம், றகரம் தம்முள் மாறி ஒலிப்பது உண்டு.
புறநானூற்றில் வரும் வரி :
‘ ஒளிறு வாள் அருஞ்சமம் முறுக்கி ‘
‘ ஒளிரு வாள் அருஞ்சமம் முறுக்கி ‘
முரிதல், முறிதல்…
பி.கு :
தங்கள் பெயரில் இருந்துதான் தெய்வங்கள் தோன்றுகின்றன.
வடமொழி தேவ், இலத்தின் Deus, ஆங்கில deity, பிரஞ்சு மொழியில்
dieu & déesse…
எல்லாவற்றிற்கும் தெய்வம் என்ற தமிழ்ச் சொல்லே அடிப்படை.
பலமொழி தெய்வங்களுக்குப் பெயர் கொடுத்த வள்ளலே வாழ்க!
ஐயா, இது நாளது வரையிலான எனது தவறை உணர்ந்தேன்..
தவறானது என்பது சரியா?
தவற்றானது என்பது சரியா?