பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

23515563_1478743548846506_1738025179_n
சாந்தி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.12.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம2

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “படக்கவிதைப் போட்டி (137)

 1. இப்படிக்கு…

  அதிர்ஷ்டசாலி நான்..!

  ‘கை வலிக்கிறது’ என ஒரு போதும்
  எனை நீ கீழே இறக்கி விட்டதில்லை

  ‘தூக்க முடியவில்லை நடந்து வா’ என்ற வார்த்தையை
  நான் உன்னிடம் இருந்து கேட்டதில்லை

  ‘வேலை இருக்கிறது; பின்பு கவனிக்கிறேன்’ என
  ஒருநாளும் எனை தனியே விட்டுச் சென்றதில்லை

  என் அழுகுரல் கேட்டு ஒரு நொடி கூட தாமதித்ததில்லை
  உடனே ஓடி வந்து கையில் ஏந்திக் கொள்வாய்

  நித்தமும் அரவணைப்பு; நீங்காத பந்தம்; நிறைவான பாசம்..

  பொறாமை படத்தானே செய்வார்கள்- உன்
  தாயும் தந்தையும்; மகனும் மகளும்; அன்பான மனைவியும்..

  பேசாத எனை பேணிக்காக்கிறாய்
  பேதையாய் உன் பின் வருபவரை பரிதவிக்க வைக்கிறாய்

  அன்பே… நீ எனை நேசிப்பதைப் போல
  அவர்களையும் நேசித்துப் பாரேன்..
  அழகாகும் உன் வாழ்க்கை; வரமாகும்; வசந்தம் வீசும்..!

  இப்படிக்கு
  உன் கைபேசி…

 2. சொர்கமே என்றாலும் அது நம்மூரு போலாகுமா..!
  =============================================

  அய்யா.!அவனங்கே அமர்ந்திருப்பதைப் பார்த்தால்..
  ……………அன்றாடம் அலைந்து ஓய்ந்தவனெனவும் தெரியும்.!
  அய்யே.!இனியிந்த நாய்ப்பிழைப்பு வேண்டாமென..
  ……………அருவருக்குமவன் மனநிலையையும் அறிய முடியும்.!
  ஒய்யாரமாய் ஓய்வெடுக்க ஒடிந்துவிழுந்த கிளையின்..
  ……………ஓரத்திலமர்ந்து நீநினைவது என்னவென்பதும் புரியும்.!
  வெய்யிலுக்கு மரநிழல்தரும் சுகம்போல இப்போது..
  ……………வீணாகப்போகும் நேரத்தில் வாட்ஸ்அப் இதம்தரும்.!

  படித்துப் பட்டம் பெற்றவர்கள் வேலைதேடியிங்கே..
  ……………பல்லாயிரம் பேர்வருவார் மொத்தமாக ஓரிடத்துக்கு.!
  அடிக்கொரு ஆலுவலகம் இருந்தாலுமதன் கதவுகள்..
  ……………அனைத்திலும் வேலை காலியில்லை எனுமறிவிப்பு.!
  கடிமணமாகாத காளையரென்றால் குடியிருக்க வீடு..
  ……………கிடைக்காது இக்கொடுமை போதாதெனில் அங்கே.!
  முடியைப் பிய்த்துக்கொண்டு முழுநேரமும் வேலை..
  ……………முடிந்தபின்னும் வீடுதிரும்ப முடியா நிலையிதுவே.!

  சொந்த ஊரிலிருந்த சுகமெல்லாமிங்கே இல்லை..
  ……………சந்துபொந்துக்குப் பஞ்சமில்லை சத்துண வில்லை.!
  பந்தங்கள் இருந்தும் பெயருக்குத்தான் சொந்தம்..
  ……………பணக்காரத் தனத்தினால் உறவுக்குக் வந்ததுகேடு.!
  மந்திரசக்தியால் மாம்பழம் பறிப்பது போலத்தான்..
  ……………எந்திரசக்தி கொண்டுதான் எதுவுமிங்கே இயங்குது.!
  சிந்திக்கக் கூடயிங்கே சிறிதளவேனும் நேரமில்லை..
  ……………பந்தியிலுட்கார்ந்து சாப்பிட பக்கத்தில் நிற்கவேணும்.!

  உழைக்கும் விவசாயி குடும்பத்தில் பிறந்தவனவன்..
  ……………ஊர்விட்டு ஊர்வந்தான் பிழைப்புதேடி ஒருவனாக.!
  உழவுக்குடி உயரவே உயர்படிப்பு படித்தானவன்..
  ……………உயரும் நாகரீகத்தில் நரகமேமேலென நினைத்தான்.!
  அழகுதிமிர்க் காளைபோல கட்டுடல் மேனிகொண்ட..
  ……………அவன்மனது…உழவுத் தொழில்மீதே நிழலாடுகிறது.!
  உழலுமவன் மனதுக்கு ஆறுதலுமிங்கில்லை மீண்டும்..
  ……………இழந்ததைப்பெற கிராமத்துக்கே போக விழைகிறான்.!

 3. தீதும் நன்றும் : தூரத்தை குறைக்க வந்தது தான் தொலை பேசி!
  துயரத்தை தர வந்தது ஏனோ இந்த அலை பேசி!
  விஞ்ஞானத்தின் வியத்தகு படைப்பு இந்தக் கைபேசி!
  ஆனால் குடும்பத்தை தீவுகளாய் பிரித்த
  அரக்கன் இந்த அலை பேசி!
  காதலனைப் பிரியாத காதலியாய் கைக்குள்ளே
  எப்போதும் கை பேசி!
  உணவு மறந்தது! காரணம் அலை பேசி!
  உறக்கம் போனது! காரணம் அலை பேசி!
  நேரடிப் பேச்சும் குறைந்தது! காரணம் அலை பேசி!
  சிந்தனை குறைந்தது! காரணம் அலை பேசி!
  வாகனத்தை ஓட்டும் போதும் விலகாத கை பேசி!
  எமனின் பாசக் காயிறாய் உயிரெடுக்கும் கை பேசி!
  சிட்டுக்குருவிகளே இவ்வுலகில் இல்லாமல்!
  அழித்தது இந்த அலை பேசி!
  சின்னஞ் சிறு பிள்ளைகளை சீரழித்தது இந்தக் கை பேசி!
  தீமைகள் மட்டும் தருவதா இந்த அலை பேசி!
  நன்மைகள் பல உண்டு, இதனால், நீ அதை யோசி!
  பயணத்தை குறைத்து,
  நேரத்தை நமக்குத் தரும் இந்தக் கைபேசி!
  பயன் தரும் செய்திகள், பலவற்றை நம்மிடம்
  கொண்டு சேர்ப்பது இந்த அலை பேசி!
  வேலைக்குச் செல்லும் பெண்களின் கூடவே இருக்கும்
  பாதுகாவலன் இந்த அலை பேசி!
  தொழில் செய்ய உதவும் தோழன்!
  இசையைத் தரும் இனிய கலைஞன்!
  குறுஞ்செய்தி கொண்டு செல்லும் அஞ்சல் காரன்!
  அழகுக் காட்சிகளை அள்ளித் தரும் அன்பு நண்பன்!
  நாணயத்திற்கு இரண்டு பக்கம்!
  நல்லது , கெட்டது அனைத்திலும் இருக்கும்!
  படிக்கும் வயதில் வேண்டாமே அலை பேசி!
  நல்ல புத்தகங்கள் நீ வாசி!
  நாளைய உலகம் உயர்வு பெற!
  நான் சொன்னதை நீ யோசி!

 4. மரத்தோடு மடி சாய்ந்த நேரம்.
  ———————–
  வாராத படிப்பை
  வாதாடி முடித்தேன்
  வாய்தாக்கள் போல் அரியர் வைத்து
  நான்காண்டுகள் ஓடின.

  சொல்லாத என் காதல்
  சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதென்று
  கல்லாத காவியத்தை
  கற்றவனாய் ஒப்பித்துவிட்டு
  விடைக்காக காத்திருக்கிறேன்
  மூன்றாண்டுகள் ஓடின.

  பிடிக்காத வேலையில் சேர்ந்து
  அடுக்கான பொறுப்புகள் வகித்து
  மிடுக்காக வலம் வந்து பார்த்து
  பொறுப்பான ஆண் மகனாய் ஆனேன்
  இராண்டாண்டுகள் ஓடின.

  கடந்து வந்த பள்ளிப்படிப்பையும்
  பட்டப்படிப்பையும்
  பாலைவன கானல்நீரைப்போல
  பாவையவள் காதலையும்
  எதிர்கால முன்னேற்றப்பாதையும்
  எண்ணிப்பார்த்து பார்த்தே
  ஓராண்டும் ஓடின.

  இவையனைத்தும் அழகாய் பதிவானது
  மட்டுமல்ல
  என் கையிலிருக்கும் கைப்பேசியிலும் தான்.

  இந்த
  வெட்டப்பட்ட மரத்தின்
  கிளைப்போல்
  என் எத்தனை ஆசைகளை
  வெட்டியுள்ளது
  தோல்வியெனும் கோடாரி.

  ஆனால்
  நான் தோள் சாயும்
  அன்பு மரமே..
  புனிதமிக்க
  உன் மீது அமரும் முன்
  என்
  காலணிகளை அகற்றிவிட்டு விட்டது போல
  புத்தன் சொன்ன புத்திமதி போல
  ஆசைகளை அகற்றிவிட்டு
  புனிதமான
  இலட்சியங்களை
  எளிதால் அடையலாம் தானே.
  தினம் சாயுங்காலம்
  நான் சாய மடிதரும்
  என் நண்பனே..!
  என் மரமே ! ???


  -சொல்லின் செல்வி.

 5. சுட்ட மரமும், சுடாத மரமும்.

  சி. ஜெயபாரதன், கானடா.

  சுடாத மரத்தின் கூக்குரல்

  தலைக்கு மேலே கத்தி
  தொங்குது !
  வெட்டப் போகிறார் !
  விலைக்கு வாங்கத்
  தரகர் கையில்
  நிறைய பணக் கத்தை !
  அழுதாலும் பயனில்லை !
  தொழுதாலும் பயனில்லை !
  பரம்பரை வாரிசு இனிமேல்
  பிறந்திடாது !
  விதியை வெல்ல
  நிதியால் தான் முடியுது !
  நாளை எனக்கில்லை !
  நரக வாழ்வில்
  நம்பிக்கை இல்லை !
  நமன் வரும்
  தருணமிது எனக்கு !
  வாசலில் நிற்கிறான்,
  வழிவிடு எனக்கு !
  கோடரிக்குத் தலை கொடுக்கவா ?
  உடல் அளிக்கவா ?
  கடவுளே காப்பாத்து !

  ++++++++++++

  சுட்ட மரத்தின் கூக்குரல் !

  வெட்டப் பட்டுக் கீழே
  வீழ்ந்து கிடக்கிறேன் பார் !
  மட்டப் பலகையாய்
  வீடு கட்ட உதவினேன் !
  மாட்டு வண்டிச் சக்கரம்
  ஆக்க உதவினேன் !
  கப்பல் கட்ட, படகு கட்ட
  உப்புக் கடலில் மீன் பிடிக்க
  உதவினேன் !
  கனிகள் காய்க்கும்
  மரமானேன் ஒரு காலம் !
  இருந்தாலும்
  ஆயிரம் பொன் நான் !
  இறந்தாலும்
  ஆயிரம் பொன் !

  ++++++++++++++++

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *