வசந்தமாய் மாறும் !
[ எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா ]
ஆண்டவன் படைப்பிலே அனைத்துமே அற்புதம்
ஆயினும் மனிதனோ அனைத்திலும் அதிசயம்
வேண்டிய அனைத்தையும் விரைவினில் பெற்றிடும்
வித்தைகள் அவனிடம் சொத்தென இருக்குதே !
மனிதனைப் படைப்பினில் உயர்வெனக் கருதிட
மனிதனின் செயல்களே காரணம் ஆயின
புனிதனாய் மனிதனும் புவிதனில் இருக்கையில்
மனிதனின் மாண்புகள் மாட்சிமை ஆகிடும் !
தானமும் செய்தான் தவமும் செய்தான்
ஈனமாம் காரியம் எண்ணிலாச் செய்தான்
யானது என்னும் ஆணவக் குப்பை
போனது போலத் தெரியவே இல்லை !
குப்பைகள் குவிந்திடின் குணமெலாம் சிதறும்
தப்பிதமாகவே செயல் எலாம் அமையும்
எப்பவும் மனநிலை இறுகியே இருக்கும்
எதை நினைத்தாலும் பதட்டமே பெருகும் !
விருப்புகள் வெறுப்புகள் நிறையவே இருக்கும்
வேதனை சோதனை நாளுமே குவியும்
மனமதில் குப்பையாய் இவற்றினைச் சேர்த்தால்
வாழ்கின்ற வாழ்வு வதங்கியே போகும் !
வீட்டிலே குப்பைகளைச் சேர்த்துமே வைத்தால்
வேண்டாத விளைவுகள் வந்துமே சேரும்
நாற்றமது எடுக்கின்ற நரகமதாய் ஆகி
நம்மகிழ்ச்சி ஆரோக்கியம் நாசமாய் போகும் !
குப்பைகளைச் சேரவிடல் எப்பவுமே தப்பு
குப்பைகளை குழிதோண்டி புதைத்துவிடல் வேண்டும்
தப்பான எண்ணமதை எப்பவுமே நாளும்
தலைமீது வைப்பதனை நிறுத்திடுதல் நன்றே !
மனமதிலே குப்பையாய் குவிந்துவிடும் அனைத்தும்
மனமதனை மாய்த்துவிட வழிவகுக்கும் அன்றோ
தினமே குப்பைகளை சேராது காத்தால்
மனமென்னும் மாளிகை வசந்தமாய் மாறும் !