என் முதல் கனவு..!
பெருவை பார்த்தசாரதி
ஒருமுறைதான் உனைநான் நினைத்தேன் நீயோ..
……….ஓராயிரமுறை வந்தாயென் கனவில்!….நீயாரோ.!
பருவமெய்திய நாள் முதல்கனவு கண்டபின்..
……….புரண்டு புரண்டு படுத்தாலும் நித்திரையில்லை.!
ஒருநாள் விடாமலென் உறக்கத்தைக் கெடுத்தவன்..
……….ஊர்புகழும் அன்னவன் வாள்சுழற்றும் வீரன-வன்.!
தருமின்ப மதிமயக்கமும் தழுவுமினிய சுகம்தனில்..
……….தழைந்துவந்த கனவிதுவேதான் என் முதல்கனவு.!
கொல்லும் காதலெனும் பெருந்தீயை மூட்டிவிட்டு..
……….கண்ணைக்கட்டி காட்டில் விட்டகன்ற கட்டழகன்.!
இல்லற சொர்க்கத்தை இயக்கிக் கொண்டிருக்கும்..
……….இன்ப அதிர்வலையில் திக்குமுக்காட வைத்தவன்.!
கொல்லும் பகைகிழிக்கும் வீரமுடன் வேகமாகச்..
……….செல்லும் குதிரைஏறி வாளுடனெங்கு சென்றான்.!
மெல்லமெல்ல நானுமெனை மறந்தேன் இதுதான்..
……….மென்மை நிலவொளியில் கண்டயென் முதல்கனவு.!
பட்டகாலிலே படும் கெட்டகுடியே கெடுமென்பார்..
……….படாதபாடு படுத்துமாம் பருவக் காதல்தொல்லை.!
கட்டான ஆண்டகையென் கனவில் வந்த-தாலென்..
……….கட்டுடல் குலைகின்றது காதலெனும் ஏக்கத்தாலே.!
மொட்டவிழ்ந்த மலராகி இதழுதிர்ந்த காம்புபோல..
……….மெலிந்து விட்டேன்!கண்டவர்கள் சொல்கிறார்கள்.!
பட்டுமேனி என்னழகைப் பார்த்து…,கருப்புநிலா..
……….பழிப்பதுபோல் உணர்ந்ததுதான் என் முதல்கனவு.!
ஒற்றை நிலாவொளி உலகுக்கே வெளிச்சம்தரும்..
……….உன்னால் இளவரசி என்மேனியில் அனல்பரவும்.!
அற்றைநாள் நீவிடுத்த விழிக்கூரம்பு தைத்ததால்..
……….அங்கயற்கண்ணி நான் படுந்துன்பம் அறிவாயோ.!
பிற்றைநாளிலும் பிதற்றுவேன்! கனவு கலையுமுன்..
……….பற்றியமனத்தைப் பதைக்க விட்டுச் சென்றாயென.!
இற்றைநாள் நடக்கும் மன்மதப்போரில் வெல்லும்..
……….ஈண்டிய மறவனைக் கண்டதேயென் முதல்கனவு.!
=============================================
நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::25-11-17
நன்றி:: கூகிள் இமேஜ்