கவிதைகள்

உங்களில் ஒருவன்

மதியழகன்


தவிர்த்து விடுங்கள்;

நிலைக் கண்ணாடியில்

உற்றுப் பார்க்காதீர்கள்

உங்கள் உருவங்களை.

 

நீங்கள் செய்த

தில்லுமுல்லு

நினைவுக்கு வரலாம்,

உள்ளுக்குள்

உறங்கிக் கிடந்த மிருகம்

வெளியே எட்டிப் பார்க்கலாம்.

 

கையில் நீண்ட நகங்களுடனும்

கூரிய பற்களுடனும்

உங்கள் பிம்பம் தெரியலாம்

தோலின் சுருக்கங்களும்

நரை முடியும்

மரணம் கொஞ்சம் கொஞ்சமாக

உங்களை நெருங்கிக் கொண்டிருப்பதை

உங்களுக்கு உணர்த்தலாம்.

 

முகமூடி விலக்கப்பட்ட

உங்கள் முகத்தைக் கண்டு

நீங்களே அச்சம்

கொள்ள நேரலாம்;

ஆதாம் அறிவுக்கனியை

உண்டதற்காக

சந்ததிகள் தண்டனை

அனுபவிப்பதை எண்ணி

அழலாம்.

 

படத்திற்கு நன்றி

 

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comment here