பயனுள்ள மருத்துவக் குறிப்புகள்(பாகம்-5)
தொகுப்பு: புவனா கோவிந்த்
உணவே மருந்து
முட்டைக்கோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.
மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா? அந்த நாட்களில் கார்ன்ஃபிளேக்ஸை காலை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்.
இரத்தத்திலிருக்கும் சிவப்பணுக்களின் உற்பத்திக்குப் புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கனிகள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பச்சைப் பயறு, மோர், உளுந்து வடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால்… நாக்குப் பூச்சித் தொல்லை, வயிற்றுப் பூச்சித் தொல்லை தொலை தூரத்திற்கு ஓடி விடும்.
வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத் தன்மை நீக்கும் உணவுகளாகும்.
பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன் படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளை கட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்து விடும்.
பீட்டா காரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், முட்டைக்கோஸ், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிறக் கீரைகள் போன்றவைகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.