விசாலம்

ஒரு சிவன் கோயில்… அதன்  அருகே பிரும்மாண்டமான ஒரு மைதானம். அந்த மைதானத்தில் ஒரு பழைய  தேர். அதன் அருகில் பல சிறுவர்கள் களித்துக் கொண்டிருந்தனர். ஒருவன்  சக்கரத்தின்  மேல் ஏறினான், ஒருவன் அதற்குள் ஒளிந்து கொண்டான். இதையெல்லாம் பார்த்தபடி அமர்ந்திருந்தார் ஒரு சித்த புருஷர்.  குழந்தைகளைப் பொறுத்த வரையில்  அவர் ஒரு தாடித்தாத்தா.

சித்தர் பேசினார் “குழந்தைகளே இந்தத் தேரையே இப்படித் தடவித் தடவிப் பார்க்கிறீர்களே!  இதை விடப் பல மடங்கு பெரிய தேரைப் பார்த்திருக்கீர்களா? அதுதான்  திருவாரூர் கோயிலின் தேர்”

“தாத்தா தாத்தா, நாங்கள் அதைப் பார்க்க வேண்டுமே எங்களை அழைத்துப் போங்கள்”

“போடா ராமு, அவர் என்ன ஏரோப்பிளேனா பறந்து போவதற்கு?”

“குழந்தைகளே,  இந்தத் தாத்தா இப்போது ஏரோப்பிளேன் மாதிரி பறந்து உங்களை அழைத்துப் போகப் போகிறேன். என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள்”

குழந்தைகளும் அவசர அவசரமாக அவர் தோளிலும் முதுகிலும் ஏறிக் கொள்ள   சித்தர் பறந்தார், ஒரு சில நிமிடங்களில் திருவாரூர் வந்து விட்டார்.  குழந்தைகள் பிரமிப்பில் மூழ்கினர். ஆவல் தீர அந்தத் தேரைப் பார்த்துக் களித்து பின் திரும்பவும் அவர் முதுகில்  அமர,  சித்தர் பறந்து முதலில் இருந்த இடத்திற்கே வந்தார்.

இதைச் சாமானிய மனிதனால் செய்ய முடியுமா? சந்தேகமில்லாமல் ஒரு சித்தரால்தான் செய்ய முடியும். அந்தச் சித்தர்தான் வில்லியனூரில் இருந்த “ஸ்ரீராம் பரதேசி ஸ்வாமிகள்”. ‘ரிஷி மூலம் நதி மூலம்’ கேட்கக் கூடாது என்பார்கள், இவரது  பெற்றோர்கள் யார் என்று தெரியாது.

இவர் நிச்சயமாக வட நாட்டைச் சேர்ந்தவர்தாம். இவர்  சிறு வயதில் தனியாக  தன் இஷ்டப்படி  திரிந்து  வந்தார், பாசம் என்பதே தெரியாமல் தானே வளர்ந்து வந்தார்.

ஒரு நாள் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இவர்   தன் இருப்பிடம் விட்டுக் கொஞ்சம் தூர காலாற நடந்து வரும் போது, அங்கு ஒரு முதியவரைச்  சந்தித்தார், அந்த முதியவர் ஆசையுடன் இவரை அழைத்தார்.

“என்ன செய்வது என்று  தெரியாமல் இப்படிச் சுற்றிக் கொண்டு இருக்கிறாயே! என் அருகே வா, உனக்கு ஞான ஒளி கிடைக்கும் நேரம் வந்து விட்டது. உனக்குப் பரப்பிரும்ம உபதேசம் செய்கிறேன்” என்று கூறி அவர் காதில் ஒரு மந்திரத்தை உச்சரித்தார். பின் அவர் உடல் முழுவதும் தடவினார். உச்சந்தலையில் முத்தம் கொடுத்தார், பின், “நீ பெரும் துறவியாய் வருவாய், போய் வா” என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார்.

ரமண மகரிஷியைப் போல் அப்போது அவருக்கு பதினாலு வயதுதான். அன்றைய தினத்திலிருந்து   அவர் மாறினார். வெறும் கோவணம் கட்டிக் கொண்டு பசி தாகம் மறந்து  தூக்கமில்லாமல் தியானத்தில் அமர்ந்தார். இவர் சென்று பூஜை செய்த ஊர் வில்லியனூர். திருக்காமீசர் என்ற ஈச்வரனும், கோகிலாம்பாள் என்ற திரு நாமமுடைய அம்பாளும் அருள் புரியும் கோயில்தான்   அது.

இந்த ஆலயத்திற்கு அவர் அடிக்கடி   வந்து அங்கப்பிரதட்சிணம் செய்வார்.  சில சமயம்  அவர் உடலே இதில் தேய்ந்து  விடும். அந்த இடம் தான் இன்று தெய்வீக ஸ்தலமாக, புனித ஜீவ பீடம் அமைந்த இடமாக விளங்குகிறது, இவரே ஸ்ரீராம் “பரதேசி சுவாமிகள்”. ஸ்ரீராம் பரதேசி ஸ்வாமிகளின் தபோவனம்  புதுச்சேரி வில்லியனூர் சாலையில் சுல்தான் பேட்டை அருகில் மூலக்கடை என்ற இடத்தில் இருக்கிறது.

இது ஒரு   காலத்தில்  வில்வமரக் காடாக இருந்ததாம். அங்கே சுயம்புவாக ஒரு லிங்கம்  தோன்றியதாம்.  அங்கு  ஒரு பசு தினமும் வந்து அதன் மேல் பால் சுரந்து  வழிபட்டதாம். பின்னர் சோழ மகாராஜா இந்தக் கோயிலைச்  சிறப்பாகக் கட்டி  வழிபட்டாராம்.

இந்தச் சித்தர் செய்த அதிசயங்கள் பல.  இவர் இடுப்பில்   வைக்கோலைக் கட்டிக் கொண்டு, திருக்கோயிலை வலம் வரும் போது சிறுவர்களைக் கூப்பிட்டுத் தன்னை இழுக்கச்   சொல்வார். பின் மண்ணை அள்ளி  எடுத்து  அதை மிட்டாயாக மாற்றி, அதை சிறுவர்களுக்கு வழங்குவார்.

ஒரு நாள், ஒரு இளைஞனைப் பாம்பு கடித்து விட்டது,    மக்கள் அவனைத் தூக்கி இவர் முன் கொண்டு  வந்து போட்டார்கள். இவர் கண் மூடித் தியானம் செய்து கடித்த பாம்பை வரவழைத்தார், பின்  அதை, தான் கடித்துப் பரப்பிய விஷத்தை உறிஞ்சித் தன்னுடைய அலுமினியத்   தட்டில் உமிழச் செய்தார்.  பாம்பும் அவர் சொன்னபடியே செய்ததை எல்லோரும் வியப்பால் சிலை போல் நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

சித்தரோ அந்த விஷத்தைக்  குடித்து விட்டார், அவர் உடம்புக்கு ஒன்றும் ஆகவில்லை, இவர் தொட்ட இடமெல்லாம் வளமுற்றன. இவர் ஆசிகளால் பலர் பயனடைந்தனர். இவர் பிரும்ம நிலை அடைந்து விட்டால் தனக்குத் தானே ஸ்ரீராம் என்று கூறித் தன்னையே அர்ச்சித்துக் கொள்வாராம். ஆகையால் கூட இவரது பெயரும் ஸ்ரீராம் என்று வந்திருக்கலாம்.

சுவாமிகள் 1838-வது வருடம் மரங்கள் அடர்ந்த சோலை நடுவில் ஜீவபீடக் குழி பறித்து அதில் தான் அமர்ந்த பின், அதை குச்சிகளால் நிரப்பி, பின் மண் போட்டு மூடும்படி   கேட்டுக் கொண்டார். அந்த மண்ணை பிற்பாடு எடுத்தால் மிட்டாயாக மாறும் என்றார், அதே போல் சில சிறுவர்கள் அதைச் செய்து பார்க்கையில், அந்த மண் மிட்டாயாக மாறியது என்கிறார்கள் மக்கள்.

இதெல்லாம் நடந்து முப்பது ஆண்டுகள் ஓடிய பின். புதுச்சேரியில் பிரஞ்சு ஆதிக்கம் வந்த போது,  அந்த இடத்தில் ரயில்வே லைன் அமைத்து, அதற்குப் பின் ஒரு கட்டிடம் கட்டுவதற்காக கூலித் தொழிலாளி கடப்பாரையினால்  அந்த இடத்தைத் தோண்ட, இரத்தம் பீறிட்டது. தொழிலாளிகள் பயந்து வேலையை    நிறுத்தி விட்டனர்.

பின்  மேலதிகாரிகள் வந்து பார்த்த போது, அங்கே ஒரு ரிஷியைப் பார்த்தனர். அவரிடத்திலிருந்து “ராம்ராம்” என்ற ஒலி கேட்டது. அவரது உடல் தங்கம் போல் ஜொலித்தது. எல்லோரும்  அவரை வணங்கினர். பின் மருத்துவர் வந்து பரிசோதித்துப் பார்க்கையில் நாடித்துடிப்பு எல்லாம் ஒழுங்காய் இருந்ததாம். அவரை அப்படியே தூக்கி ஒரு கருங்கல் பீடம் அமைத்து அதற்குள் அமர்த்தி விட்டனர். பின் கோபுரம் கட்டி அற்புதமானதொரு ஜீவபீடத்தையும் ஏற்படுத்தி விட்டனர்.

ஜீவபீடம் உட்புறம்   எட்டுக் கோணங்கள் கொண்டது, உள்ளே “மஹாத்மா ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் சாலிவாஹன சஹாப்தம் 1868” என்ற கல்வெட்டு உள்ளது. கோயிலில் இவருக்கு ஒரு சிலை உள்ளது.  நீண்ட ஜடாமுடி, தாடி, நீண்ட கைகள் , வலக்கால் மடக்கி இடக்கால் தொங்கும் நிலை. காந்தச்சுடர் கண்கள், அழகான மேனி, அவரது திருக்கோலத்தைப் பார்த்தால்  நம் கை  தானாகவே  கூப்பி வணங்க முற்படுகிறது, அங்கே அவ்வளவு சக்தி நிலவுகிறது.

இவரைத் தரிசித்தால் பல பிணிகள் அகலுகின்றன. சரும வியாதி  நீங்குகிறது. விஷக்கடிகளுக்கு இவரது விபூதி மருந்தாகிறது. பௌர்ணமியன்று அவர் வெளியே வந்து அந்தக் கோயிலை வலம் வருவதாக அங்கிருக்கும் மக்கள் சொல்லுகின்றனர். அந்த அற்புத மகானைக் காண   அவசியம் அங்கே சென்று வர வேண்டும்.

கேட்டதை வழங்கும் அந்தச் சித்தரின்  ஆசியைப் பெறுங்கள்.

 

படத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “வானத்தில் பறந்த சித்தர்

 1. ஆர்வத்தைத் தூண்டும் அருமையான கட்டுரை. மேலதிக விவரங்கள் கிடைத்தால் நலம். திருவான்மியூரில் சக்கரையம்ம்ன் கோயில் உள்ளது, போய் பார்த்தேன். தரிசன வேளை அல்ல. அந்தக்கோயிலை டா. நஞ்சுண்டராவ் (சுவாமி விவேகானந்தரின் காலத்தவர்.) குடும்பத்த்இனர் பராமரிக்கிறார்கள். நன்கொடை வாங்குவதில்ல்லை. அவருடைய மைலாப்பூர் வீட்டில் ஆகாயமார்க்கமாக, சக்கரத்தம்மாள் வந்து இறங்குவார் என்று டாக்டர் எழுதியிருக்கிறார்.

 2. இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை “நான்” என்று நம்பி இருக்கிறோம். சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

  Please follow

  http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)

  (First 2 mins audio may not be clear… sorry for that)

  (PART-2) http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4

  http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (PART-3)

  Online Books
  http://www.vallalyaar.com/?p=409

 3. Excellent writing about the siddhar.  Thanks for providing some more details, while not much is known about the great souls.  Thanks lot Madam Visaalam!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *