பவள சங்கரி

 

திவாகரின் வரலாற்றுப் புதினம் – ஒரு பார்வை

எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான திரு.திவாகர் ‘வம்சதாரா, திருமலைத் திருடன், விசித்திர சித்தன் மற்றும் எஸ்.எம்.எஸ். எம்டன்’, ஆகிய வரலாற்றுப் புதினங்களின் ஆசிரியர். இவருடைய அனைத்து வரலாற்றுப் புதினங்களும், மிகுந்த ஆராய்ச்சியின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன. மேடை நாடகங்கள் பல எழுதி மேடையேற்றியவர். பல்வேறு பிரபல இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள், கதைகள், வெளிவந்துள்ளன. கப்பல் போக்குவரத்து, மற்றும் வெளிநாட்டு வணிகத்துறை பற்றி இவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் தொடராக வெளிவருகின்றன. தற்சமயம் விசாகப்பட்டிணத்தில் வசித்து வருகிறார்.

97 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வு ஒன்று நடந்தது நினைவிருக்கும் அனைவருக்கும். ஆம். மறக்கக் கூடிய நிகழ்வா அது?

22-09-1914 ஆம் நாள் இரவு 9.20 இலிருந்து 9.30 வரை நடந்தேறிய அந்த குண்டு வீச்சை யார்தான் மறக்க இயலும்? சென்னை கடற்கரையில் எல்லாரும் நின்று பார்க்கும் தொலைவில் மிகத்துணிச்சலாக தன்னந்தனியே நங்கூரமிட்டு சென்னை மாநகரின் மீது படபடவென குண்டு மழை பொழிந்த , ஜெர்மனி போர்க்கொடி தாங்கிய அந்த பொல்லாத ’எம்டன்’ எனும் போர்க்கப்பலை அறியாதோர் இருக்க வாய்ப்பில்லை. எம்டன் என்ற பெயர் நம் அன்றாட வழக்கில் சர்வ சாதாரணமாக கலந்துவிட்ட ஒன்றே அதற்கான சான்று அல்லவோ? இந்த சுவாரசியமான நிகழ்வுகளின் பின்னனியில், வெகு திறமையாக சித்தர்களின் வேறுபட்ட வாழ்க்கை முறை, சாமான்ய மனிதரும் சித்தராக மாறிய வல்லமை மற்றும் சாம்பவ விரதம் பற்றிய ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டுச்செல்லும் நிகழ்வுகளையும் பின்னிப் பிணைத்து அழகான புதினமாக்கியிருக்கிறார் ஆசிரியர் திவாகர். கையில் எடுத்த புத்தகத்தை முழுவதும் தொடர்ந்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் கொண்டு நிறுத்துகின்றன மாறுபட்ட அந்த நிகழ்வுகள். முதலாம் உலகப் போர் நடந்து முடிந்த அந்த காலகட்டங்களை நம் கண்முன் நிறுத்துகின்றன.


“ ஏதோ மனிதராக இந்த புவனியில் பிறப்பு எடுத்தோம்…. இது ஒரு அற்புத பிறவி. அதனால் வாழும் வரை நல்லதைச் சிறப்பாகச் செய்துவிட்டு இறந்து போனால் சொர்க்கம் கிடைக்கும்…” கதையின் நாயகன் சிதம்பரம் இதே எண்ணத்தில் புதினம் முழுவதும் வலம் வந்து அரிய சாதனைகள் பல புரியும் வல்லமை பெற்றவனாகவும் , சிதம்பர ரகசியம் காப்பவனாகவுமே இறுதி வரை சித்தரிக்கப்பட்டுள்ளது கதையின் போக்கிற்கு மேலும் சுவை கூட்டுவதாகவே உள்ளது.

ஆங்கிலேயப் பிரபுக்கள், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் இருந்த கோவில்களையும் விரும்பி தரிசித்ததோடு, சிவ வழிபாட்டு முறைகளையும் அறிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டியுள்ளனர் போன்ற தகவல்களையும், நம் நாட்டுத் திருமணக்கலாச்சாரங்களில் அவர்கள் கொண்டிருந்த மதிப்பும், ஆர்வமும், இப்படி பல செய்திகள் கந்தன் போன்ற உப கதாபாத்திரங்களின் மூலம் தெளிவாக்கியதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ருத்திராகமங்களில் 18 ஆகமத்தில் ஒன்றான மகுடாகமம் குறித்த தகவல்கள் லகுளீச பண்டிதர் மூலமாக ராஜேந்திர சோழன் அறிந்து கொள்வதும், பெருவுடையார் கோவிலைக்கட்டிய சோழ மன்னனும், ராஜ ராஜ சோழச் சக்கரவர்த்தியாய் முடிசூடி பின்னர் அந்த முடியையும் துறந்து பற்றற்ற நிலையில் சிவபெருமானைச் சரணடைந்து சிவபாதசேகரனாய் மாற்றிக் கொண்டவரின் உயிர் பிரிக்கப்பட்ட கதை ஆச்சரியத்தின் உச்சம் எனலாம். சாம்பவ விரதம் பற்றிய அரிய தகவல்களும் சுவாரசியமாகவும், யதார்த்தமாகவும் வழங்குவதில் ஆசிரியர் வெற்றி கண்டிருப்பதாகவே தோன்றுகிறது.

காலம் , அது நாகரீகம் வளராத புராண காலமானாலும் சரி, அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற சென்ற நூற்றாண்டுக் காலமானாலும் சரி, சூழ்நிலைக் கைதிகளாய் வாழும் அப்பெண்களை அதே சூழ்நிலை அவர்களை உறுதியான எண்ணம் கொண்டவளாகவும், பிரச்சனைகளை வெகு நேர்த்தியாக சமாளிக்கக் கூடியவளாகவும் மாற்றுகிறது என்பதை ராதை என்ற கதாபாத்திரம் மூலம் விளக்கிய பாங்கு பாராட்டுதலுக்குரியதாகும். அதே போன்று உல்லாச பொழுது போக்கு மற்றும் மோதல் என்று எதுவானாலும் உச்சத்தில் நிற்பதே ஐரோப்பியர்களின் வாழ்க்கை முறையாக இருக்கிறது என்பதையும் பல இடங்களில் தெளிவாகவே விளக்கியுள்ளார். நவநாகரீக ஐரோப்பிய கலாச்சாரத்தையும்,  புராதன சித்தர் கால சாம்பவ விரதம் போன்ற , சம்பந்தமில்லாத இரண்டு முனைகளையும் மிக அழகாக சமன்படுத்தியுள்ள பாங்கு ஆசிரியரின் கைதேர்ந்த எழுத்தாற்றல் திறனை பறை சாற்றுவதோடு, சிறந்த வரலாற்று ஆய்வாளர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே அமைந்துள்ளதும் நிதர்சனம்!

மனித வாழ்வில் இறப்பு என்பது இயற்கையானதொன்றாகும். தவிர்க்க இயலாததும் கூட என்பதை பல் வேறு ஞானிகள், சித்தர்கள் , தேவ தூதர்கள் முதல் சாமான்ய மனிதர்கள் வரை பலரின் சரிதம் மூலம் அறிய முடிந்தாலும், நம் சித்தர்கள் அந்த இறப்பை எதிர் கொண்ட விதமும், அது குறித்த நம்பிக்கையும் நம் நாட்டவர் மட்டுமன்றி பிற நாட்டினருக்கும் பேராச்சர்யத்தை விளைவிக்கக் கூடியதாகும்….

” இறந்திறந்தே இளைத்ததெல்லாம் போதும் அந்த

உடம்பை இயற்கை உடம்பாக அருள் இன்னமுதமும்

அளித்து என் புறத்தழுவி அகம் புணர்ந்தே

கலந்து கொண்டு எந்நாளும் பூரணமாம் சிவபோகம்

பொங்கிட விழைத்தேன் !”

என்று, பிறப்பெய்தாத பரிபூரண நிலை எய்திட வேண்டி , “சர்வேசா என்னை உன்னுள் ஐக்கியப்படுத்திக் கொண்டு மரணமில்லா பெருவாழ்வைத் தந்தருள்வாயே ஈசனே…….” என்று இறைஞ்சுகிறார் , வள்ளல் பெருமான் தன் அருட்பாவின் மூலம்!

எஸ்.எம்.எஸ். எம்டன் என்ற புதினத்தின் நாயகன் சிதம்பரத்தின் தந்தையின் இறுதிக் காலங்களின் வேள்விகள் மட்டுமன்றி மிக வித்தியாசமான ஒரு முக்தி நிலையை, பண்டிதர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் மிகத்தெளிவாக வழங்கியுள்ளார் என்றாலும் அது மிகையாகாது.

அந்த வகையில் ஒரு வரலாற்றுப் புதினத்தில் “ சாம்பவ விரதம்” என்கிற அற்புதமான ஒரு விடயம் குறித்து ஆழ்ந்த பார்வையும், சுவையான தகவல்களும் அளிப்பதில் பெரும் வெற்றி கண்டிருக்கிறார் ஆசிரியர்.

மாயவரம் அருகிலுள்ள வயக்காட்டில், முள்ளுக்காட்டினுள் நடந்த சம்பவமாக சிதம்பரத்தின் தாயார் கூறுவது, இப்படியும் நடக்கக் கூடுமா என்ற சந்தேகத்தையும், பல வினாக்களையும் எழுப்புவதும் தவிர்க்க முடியாததாகிறது.

தற்கொலைக்கும், சமாதி நிலைக்கும் உள்ள வேறுபாட்டை ஆசிரியர் விளக்கியிருக்கும் விதமும், அதற்கான சூழலும் ஏற்றுக் கொள்ளும்படியாகவே உள்ளது.

புதினத்தின் ஆரம்பத்தில் போட்ட முடிச்சை இறுதி வரை மிக நேர்த்தியாக மற்ற நிகழ்வுகளின் ஊடே பயணிக்கச் செய்து இறுதியில் ஒரு நல்ல, எதிர்பார்க்க இயலாததொரு திருப்பமாக அம்முடிச்சை தளர்த்தி, வாசகரின் சிந்தனைக்கும் அதனை விருந்தாக்கி, இலை மறைவு காய் மறைவாகவும் பல விடயங்களை விளக்கி, இப்படி பல சாகசங்களை இப்புதினத்தில் நிகழ்த்தி வெற்றி கண்டிருக்கிறார் இந்நூல் ஆசிரியர் என்றால் அது மிகையாகாது!

சாம்பவ விரதம், யோகப்பயிற்சி மூலம் மிக உயரத்திலிருந்து குதிக்கும் சக்தி, யாகம், முக்தி நிலை என்று ஆசிரியர் சொல்லும் பல கருத்துகள் நம்புவோருக்கு நாராயணன் என்ற போக்கில் இருந்தாலும், சில பழைய வரலாறுகளைப் புரட்டும் பொழுது, இவையெல்லாம் சாத்தியமாகியும் இருக்கக்கூடுமோ என்று எண்ணவும் தோன்றுகிறது.

வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்த தீரன் சின்னமலையின் (பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்தவர்) வரலாற்றைக் கூறும் போது, முனைவர், புலவர் கல்வெட்டு ராசு அவர்கள் ஒரு சம்பவம் கூறுவார்கள். சின்னமலை சிவன்மலை முருகன் மீது எல்லையில்லாப் பக்தியுடையவன்.

ஒரு முறை காங்கய நாட்டினர் சிவன்மலைக்குப் பால் குடங்கள் எடுத்து வரும் சமயம் ஒரு ஏழைக் குடியானவன் பால்குடம் சுமந்து வந்து மலையேற முடியாமல் மலை அடிவாரத்திலேயே நின்றுவிட்டானாம். அதைக் கண்ணுற்ற சிவன்மலை ஆண்டவர் சின்னமலையிடம் அசரீரி வாக்கால், ‘பக்தா, என் உடம்பு பற்றி எரிகிறது. அந்த எரிச்சல் தணிய அதோ மலையடிவாரத்தில் என்மீது கொண்ட பக்தியால் பால்குடம் கொண்டுவந்த குடியானவன் மலையேற முடியாமல் அடிவாரத்தில் நிற்கின்றான். அவனிடமுள்ள பால்குடத்தை வாங்கி மலையடிவாரத்திலிருந்து உச்சிவரை நடந்து வந்து என்மீது அபிடேகம் செய்தால் என் உடம்பு குளிரும் என்றாராம். அவ்வாறே சின்னமலை பால்குடம் ஏந்தி வந்தார் என்ற செய்தி இன்றும் அப்பகுதி மக்களால் கூறப்படுகிறதாம்… ஆக, நம் பாரதநாட்டின் பெரும் பலமான, ஆன்மீகச் சக்தியே நம் நாட்டை பல இன்னல்களிலிருந்தும் காத்து வந்து கொண்டிருப்பதும் புரிகிறது.

திரு திவாகர் அவர்களின், எஸ்.எம்.எஸ். எம்டன் என்ற இப்புதினத்தில் அதற்கான சான்றுகள் பல உள்ளன. வரலாற்றுத் தகவல்களுக்குரிய சான்றுகளும், குறிப்புதவிகளையும் தெளிவாக இறுதிப் பகுதியில் அளித்துள்ளதும் வாசகருக்குப் பல வகையிலும் பயன் தரக்கூடியதாகும். ’சுக்கா, மிளகா….சும்மாவா வந்ததிந்த சுதந்திரம்’? என்று சத்தமாகப் பாட வேண்டும் போல் உள்ளது, எம்டன் குண்டுமழை பொழிந்த இந்நாளில்!

இப்புதினத்திற்கு மகுடம் சூட்டியுள்ள மற்றுமொரு இன்றியமையா அம்சம் எழுத்தாளர் திரு நரசய்யா அவர்களின் அழகான, அணிந்துரை.

 

எஸ்.எம்.எஸ். எம்டன்

நூலாசிரியர் – திரு .திவாகர்

வெளியிட்டோர் – பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகம்

பக்கம் – 371

விலை – ரூ. 200.00

வாசகர்களின் பல்வேறு ஐயங்கள் குறித்த வினாக்களுக்கு ஆசிரியர் விடை பகறும் வலைப்பூவின் சுட்டி கீழே: http://vamsadhara.blogspot.com/2009_02_01_archive.html

பதிவாசிரியரைப் பற்றி

18 thoughts on “எஸ்.எம்.எஸ்.எம்டன் 22-09-1914

  1. கொஞ்சம் தெனாவட்டுடன் எழுதுகிறேன். இன்னம்பூரான் செய்ய விரும்பி ஒத்தி போட்டதை பவளசங்கரி செய்து காட்டி விட்டார். அதன் பின்னால் இருக்கும் நுட்பத்தின் ஒரு பகுதி திவாகருக்குத் தெரியும்; மற்றொரு பகுதி பவளசஙரிக்கு தெரியும். அவர் அவர்களே சொல்லட்டும். வழக்க்ம் போல தாமதம். இன்று மின் தமிழில், தமிழ் வாசலில், ‘அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 22’ நோக்கவும். அங்கும், இங்கும், ‘வம்ச்தாராவிலும்’ பின்னூட்டவும்.
    இன்னம்பூரான்

  2. மிக விரிவான அருமையான பதிவு வாழ்த்துகள் பவளா!
    மறு(ற)க்க முடியாததுஎம்டனின் நினைவுள்ளளவும் திவாகர்ஜீயின் நினைவும்!

  3. விரிவான விமரிசனம். வாழ்த்துகள் பவளசங்கரி. திரு இன்னம்புராரின் பதிவைப் பார்த்துத் தான் இன்றைய தினத்து முக்கியத்துவம் தெரிய வந்தது. நீங்கள் அழகானதொரு பதிவை அளித்துச் சிறப்பித்திருக்கிறீர்கள்.

  4. 22-09-1914 ஆம் நாள் இரவு 9.20 இலிருந்து 9.30 வரை நடந்தேறிய அந்த குண்டு வீச்சை யார்தான் மறக்க இயலும்? சென்னை கடற்கரையில் எல்லாரும் நின்று பார்க்கும் தொலைவில் மிகத்துணிச்சலாக தன்னந்தனியே நங்கூரமிட்டு சென்னை மாநகரின் மீது படபடவென குண்டு மழை பொழிந்த , ஜெர்மனி போர்க்கொடி தாங்கிய அந்த பொல்லாத ’எம்டன்’ எனும் போர்க்கப்பலை அறியாதோர் இருக்க வாய்ப்பில்லை. எம்டன் என்ற பெயர் நம் அன்றாட வழக்கில் சர்வ சாதாரணமாக கலந்துவிட்ட ஒன்றே அதற்கான சான்று அல்லவோ? இந்த சுவாரசியமான நிகழ்வுகளின் பின்னனியில், வெகு திறமையாக சித்தர்களின் வேறுபட்ட வாழ்க்கை முறை, சாமான்ய மனிதரும் சித்தராக மாறிய வல்லமை மற்றும் சாம்பவ விரதம் பற்றிய ஆச்சரியத்தின் எல்லைக்கே கொண்டுச்செல்லும் நிகழ்வுகளையும் பின்னிப் பிணைத்து அழகான புதினமாக்கியிருக்கிறார் ஆசிரியர் திவாகர். கையில் எடுத்த புத்தகத்தை முழுவதும் தொடர்ந்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் கொண்டு நிறுத்துகின்றன மாறுபட்ட அந்த நிகழ்வுகள். முதலாம் உலகப் போர் நடந்து முடிந்த அந்த காலகட்டங்களை நம் கண்முன் நிறுத்துகின்றன.
    ……..

    excellent! படிக்கிறபோதே முழுவதையும் தெரிந்துகொள்ளூம் ஆவல் வருகிறது

  5. Thanks to Writer Pavalasankari for bringing back the Emden Ship on this day. I am reading again and again during my leisure periods. But my favourite Noble was not found in this review. Oh God please bring her back too.  

  6. அன்பின் திரு மகாதேவன்,

    நன்றி. நோபிள் மிக அழகான பாத்திர படைப்புதான். டாக்டர் சிதம்பரம் குறித்து நோபிள் ஆச்சரியப்படும் செய்திதான் சிதம்பரத்தின் அறிமுகம் என்று தங்களுக்குப் புரிந்திருக்க வேண்டுமே…
    “ ஏதோ மனிதராக இந்த புவனியில் பிறப்பு எடுத்தோம்…. இது ஒரு அற்புத பிறவி. அதனால் வாழும் வரை நல்லதைச் சிறப்பாகச் செய்துவிட்டு இறந்து போனால் சொர்க்கம் கிடைக்கும்…”

    நோபிளின் மெல்லிய அந்த காதல் இழை ஒரு வேளை சிதம்பரத்துடன் இணைத்து பின்னப்பட்டிருந்தால் மனதில் இன்னும் ஆழமாக பதிந்திருக்கக் கூடுமோ? ஆனால் பாவம் ராதையை யார் தேற்றுவது? ….

  7. Masterful storytelling, gripping plot – felt as if i was traveling on the very vessel. Still have one grouse against Sir, he knows. Great review.

    Tks
    vj

  8. My all time favorite. 

    The story is as old as very fresh. Masterly narration. The big point is that the meeting between hero and heroine happened in the first chapter and the very next meet mentioned only in last chapter.  But the feeling of both on each other is being carried by them in almost each and every chapter. Oh! Great one. Thanks Writer Pavalasankari for reviewing the great book on this very particular day.

    Sridevi

  9. திவாகரின் எழுத்து அனைத்தையும் படித்திருகிறேன். வம்சதாரா மணிமகுடம் என்றால், அதில் பதித்த வைடூரியம் எம்டன். அவர் எழுதிய அனைத்து நாடகங்களிலும் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
    “உன் நண்பனை காட்டு, உன்னைப்பற்றி சொல்லுகிறேன்” என்பார்கள், திவாகரின் நண்பன் நான். அவனிருக்கும் இடத்தில் இருப்பதில், அவன் எழுத்தை நடிப்பதில் / ரசிப்பதில் எனக்கு பெருமை. வாழ்க அவன் தமிழ் எழுத்து.

  10. துல்லியமான, விரிவான விமர்சனத்திற்கு நன்றி. திவாகர் அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

  11. விரிவாக தெளிவாக எழுதப்பட்டுள்ள விமர்சனம், புத்தகம் படிக்கும் ஆவலை ஏற்படுத்துகிறது.எஸ் எம்.எஸ் எம்டன் கப்பலைப் பற்றியும் திரு.திவாகரின் எழுத்தாற்றல் குறித்தும் அறிந்து கொள்ள முடிந்தமைக்கு நன்றி. திருமதி.பவளசங்கரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  12. ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை பயணித்து வந்த கப்பலின் பெயர்தான் எஸ்.எம்.எஸ் எம்டன். செண்பகராமன் பெயரை மறந்து விட்டவர்கள் கூட எம்டனை மறக்க மாட்டார்கள். ”1914செப்டம்பர்24ல் மெட்ராசுக்கு எஸ்.எம்.எஸ். எம்டன் கப்பல் மூலம் வந்து ஜெஹிந்த் செண்பகராமன் புனித ஜார்ஜ் கோட்டையின் மீதும், உயர்நீதிமன்றத்தின் மீதும், துறைமுகத்தின் மீதும் குண்டுகளை வீசித் தாக்கினார். உயர் நீதிமன்றத்தின் எல்லைச் சுவற்றின் மீது குண்டு விழுந்த இடம் நினைவுச் சின்னமாக இன்றும் உள்ளது.” இப்பொழுதுதான் மெட்ராஸ் (சென்னை) ஹை கோர்ட்+வ.உ.சி.+வாலேஸ்வரன் என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்து வந்தேன். தினமும் கலாட்டா நடக்கும் வீட்டிற்கு வியட்நாம் வீடு என்று பெயர் வைத்து வியட்னாமியர்களின் சுய உரிமைப்போராட்டத்தக் கொச்சைப்படுத்தியவர்கள் தானே நாம்! நாவலின் கரு நல்லதாக இருந்தாலும் விளம்பரத்திற்காக இந்தத் தலைப்பப் பயன்படுத்தியது தவறு.

  13. அன்பின் திரு ராமசாமி,
    திரு திவாகரின் எஸ்.எம்.எஸ். எம்டன் என்ற இந்த நாவல் சமீபத்தில், 2009/10 இல் தான் வெளிவந்துள்ளது. இந்தப் புத்தக விமரிசனத்தை நாம் போட்ட அந்த நாள் செப்டம்பர் – 22. எம்டன் குண்டு போட்ட அதே நாளில் இந்த விமர்சனம் வெளிவருவது சாலப் பொருத்தமாகும் என்பதனாலேயே அன்று வெளியிட்டிருந்தோம். 
    இந்தப் புத்தகத்தை தாங்கள் முழுமையாக வாசிக்க நேர்ந்தால் , குறிப்பாக எம்டன் பற்றிய தகவலையும், செண்பகராமன் பற்றிய விவரங்களையும் திரு நரசய்யா அவர்கள் கொடுத்துள்ள முன்னுரையையாவது, வாசித்தால் செண்பகராமன் என்கிற சுதந்திரப் போராட்ட வீரருக்கு எந்த இகழ்வும் அவருடைய கதையில் இல்லை என்பதும் தெளிவாகப் புரியும். தாங்கள் இந்தக் கதையை முழுமையாகப் படிப்பது நலம். நன்றி.

  14. தாங்கள் தொடக்கத்தில் இணைத்திருக்கும் அட்டைப் படத்தில் 22-10-1914 என்று தேதி தவறாக உள்ளது. 22-09-1914 என்று இருக்க வேண்டும்.

    – J S ஞானசேகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *