குறளின் கதிர்களாய்…(198)

செண்பக ஜெகதீசன்

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல். (திருக்குறள் -621: இடுக்கண் அழியாமை)

புதுக் கவிதையில்…

துன்பம் வருகையில்
துவண்டிடாது
உவந்திடுக உள்ளத்துள்…
துன்பமதை
ஏதிர்த்து அழிக்கவல்லது
உவகையிதுபோல்
வேறொன்றுமில்லை…!

குறும்பாவில்…

மகிழ்க துன்பத்தில்,
மகிழ்ச்சியிதுபோல் துன்பத்தை அழிக்கவல்லது
வேறொன்றுமில்லை…!

மரபுக் கவிதையில்…

வாழ்வில் துன்பம் வருகையிலே
-வருத்தம் ஏதும் கொள்ளாமல்
ஆழ்ந்த மனத்தில் உவகையுடன்
-அமைதி யுடனே ஏற்றிடுவாய்,
தாழ்வு யெதுவும் இதிலில்லை
-துன்ப மிதனை அழித்தொழித்தே
வாழ்வில் இன்பம் தரவல்லது
-உவகை யிதுபோல் வேறிலையே…!

லிமரைக்கூ…

துன்பத்திலே மகிழ்ச்சிமுகம் காட்டு,
மகிழ்ச்சி இதுபோல் வேறெதுவுமில்லை
துன்பமதை அழிக்கவல்ல வேட்டு…!

கிராமிய பாணியில்…

சிரிச்சுக்கோ சிரிச்சிக்கோ
செரமம் வந்தாலும் சிரிச்சிக்கோ,
தும்பத்தப் பாத்து
தொவண்டு போவமலே
சிரிச்சுக்கோ சிரிச்சிக்கோ…

புரிஞ்சிக்கோ புரிஞ்சிக்கோ
தும்பமித அழிச்சிடவே
தகுந்த ஆயுதம்
இந்த
சிரிப்பப்போல வேறயில்ல…

அதால
சிரிச்சுக்கோ சிரிச்சிக்கோ
செரமம் வந்தாலும் சிரிச்சிக்கோ…!

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *