அன்றும் இன்றும் [2]
இன்னம்பூரான்
ஜனவரி 2, 2018
அகஸ்மாத்தாக என் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு முன்சாக்கிரதை மனிதர். வயது 92 என்பதால் எல்லாம் முன்கூட்டியே செய்து விடுவார். அடுத்த க்ஷணம் யார் கண்டா என்பார். 2019 வருட வாழ்த்துக்களை இப்போதே அளித்து விடுவார். அவர் எழுதும் எழுத்து ஒவ்வொன்றும் கம்பீரமாக நின்று நம்மை எடை போடும். அத்தனை அழகிய கையெழுத்து. ஆடாமல் அசையாமல் வாடா என்பார். வந்து கட்டியம் கூறும். அவர் எனக்கு பொங்கல் வாழ்த்துக்களை இன்றே எழுதி கொடுத்து விட்டார். அதற்கு பிறகு வருவோம். ‘கொற்றையருள்’ என்ற தன் புனைப்பெயரால் எழுதிய கவிதை ஒன்றை நீட்டினார். நம்ம ருத்ரனே அசந்து போகிறமாதிரி நீரோட்டம். இந்த தொடருக்கு உகந்த கருத்துக்கள்:
“இன்னாளில்
அன்பினால் இவ்வுலகம் ஆட்படவேண்டும்
அறநெறி ஓங்க வேண்டும் பிறநெறி நீங்கவேண்டும்
தன்னலம் காத்தலோடு பொதுநலம் பேணவேண்டும்
பழியிலாப் பொருளீட்டிப் பயனுற வழங்கவேண்டும்
நல்லன எண்ணிடில் நல்லன விளைந்திடும்
நல்லன மொழிந்திடில் நட்பது மிகுந்திடும்
நல்லன ஆற்றிடில் நானிலம் உய்யுமால்
நல்லன எண்ணி, நல்லன மொழிந்து நல்லன ஆற்றுக!
நலமோங்க வாழ்க! நாடொறும் வாழ்க!”
கொற்றவையருள்
எளிய தமிழில் வழங்கப்பட்ட கவிதை தான். எனினும், உள்ளே தொக்கி நிற்கும்
பொருட்களஞ்சியம் கண்டு களித்து பேணத்தக்கது. சாங்கோபாங்காமாக அடுத்தத் தொடரில் அலசலாம்.
(தொடரும்)