– ஆ.செந்தில்  குமார்

வாரிதியில் செங்கதிரோன் ஒளி வீசிப்பரப்பிட
வாழை மஞ்சள் கமுகும் கட்டிட
வீதிகள் தோறும் தோரணம் தொங்கிட
வருடந்தோறும் மாமழை பொழிந்திட்ட
வானத்துறையும் இந்திரன்  தனக்கு
வாழை இலைகளில் பெரும் படையலிட்டு
வாழ்த்தும் நன்றியும் சொல்லும் விழா!

பறையொலி முழங்க ஒருவன் கட்டியங்கூறிட
பார்ப்பவர் எல்லாம் வாழ்த்தொலி முழங்கிட
பணிப்பெண் இருவர் சாமரம் வீசிட
பட்டொளி வீசிப் புலிக்கொடி பறந்திட
பட்டத்தரசி பக்கத்தில் இருந்திட
பட்டத்தானை மீதில் அமர்ந்து
பட்டத்தரசனின் வீதி உலா!

சிற்றோடை ஒன்றில் அன்றில் நீந்திட
சித்திரை முழுநிலா தண்ணொளி வீசிட
சித்திரைப் பூக்கள் பூத்துக் குலுங்கிட
சிறுமியர் எல்லாம் சிற்றில் செய்திட – அதைச்
சிறுவர் கூடிச் சிதைத்து மகிழ்ந்திட
சிறுவர் சிறுமியர் ஒன்றிணைந்து
சிறுசோறாக்கிக் களித்து மகிழ்ந்தார்!

கண்கவர் அழகில் மங்கையர் திகழ்ந்திட – அவர்தம்
கருத்தை ஈர்க்க விடலையர் முயன்றிட
காதலர் தனியே கொஞ்சி மகிழ்ந்திட
காளையர் மற்போர் செய்து பழகிட
கன்னியர் எல்லாம் அதைக் கண்டுமகிழ்ந்திட
கொல்லர் உலைக்களம் செம்பொறி பறந்திட
கொடிய பல்லாயுதங்கள் குவிந்து கிடந்தன!

பெரு மாளிகையெல்லாம் விளக்கொளி மின்னிட
பெரும்பெரும் பாண்டத்தில் சோறு வெந்திட
பல்வகை இறைச்சிகள் மானும் மீனும்
பக்குவத்துடனே நெய்யில் வதங்கிட
பனங்கள் மதுவகை ஆறாய் ஓடிட
பெருந்திரள் மக்கள் ஒன்று சேர்ந்து
பெருவிருந்தாக்கி உண்டு மகிழ்ந்தனர்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.