க.பாலசுப்பிரமணியன்

அறம் சார்ந்த வாழ்க்கை

திருமூலர்-1-1-2

மனத்துணையாகவும் வழித்துணையாகவும் இறைவனை ஏற்றுக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தை தொடரும்போது வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் நிச்சயமாகக் கிடைக்கின்றது. ஆனால் புற உலகின் சூழ்நிலைகள், தாக்கங்கள் நம்முடைய ஆசாபாசங்களைத் தூண்டிவிடும் பொழுது மனம் சஞ்சலப் படுகின்றது. மேலும் இக வாழ்விற்கு செல்வத்தைத் தேடி அலைபாய்கின்றது. இதைத் தவிர்ப்பதும் வாழ்வில் முடியாததாக அமைந்துள்ளது. ஆனால் செல்வத்தை மட்டும் சேகரிக்க வெறித்தனமாக மனம் அலையும் பொழுது அது துயரக்கடலில் வீழ்கின்றது. “இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்” என்ற மாயையில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் இழந்து தவிக்கின்றது. இதிலிருந்து மீள்வது எப்படி?

பட்டினத்தார் மிக அழகாக பதில் அளிக்கின்றார்

பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை பிறந்துமண்மேல்

இறக்கும் பொழுது கொடுபோவ தில்லை யிடைநடுவிற்

குறிக்குமிச் செல்வஞ் சிவன்தந்த தென்று கொடுக்கறியா

திறக்குங் குலாமருக் கென்சொல்லு வென்கச்சி யேகம்பனே

அதிக அளவில் செல்வத்தைச் சேர்த்து உள்ளே பூட்டி வைத்தால் அதனால் யாருக்கு என்ன பயன்? நலிந்தோருக்கும் வாழ்க்கையில் துயருற்றோக்கும் அது பயனளிக்காத போது அது வீணாகின்றது. இதனால்தான் வள்ளுவப் பெருந்தகை கூறினார்

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

பேரறி வாளன் திரு.

இந்தக் கருத்தை எளிதாக விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் இந்தப் பாடல்

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை

யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை

யாவர்க்கு மாம்உண்ணும் போதோரு கைப்பிடி

யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.

மனிதனைப் போல் எத்துணை உயிரினங்கள் தமக்குள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணுகின்றன. உதாரணத்திற்கு காக்கை ஒன்று போதாதோ? எப்பொழுதும் உணவை தம் இனத்தோடு பகிர்ந்து உண்ணுகின்றதே. திருமூலர் பாடுகின்றார்

ஆர்க்கும் இடுமின் அவரவர் என்னன்மின்

பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்

வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்

காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

இறைவனின் அருளுக்காக ஏங்கி தன் குறைகளை எடுத்துச் சொல்லும் வள்ளலாரோ எவ்வாறு உருகுகின்றார் தெரியுமா ?

தந்தபொரு ளிலையென்றே னோ

தானென்று கெர்வித்துக் கொலைகளவு செய்தேனா

……

ஈயாத லோபி யென் றேபெய றெடுத்தேனோ? ..

இந்த அடியார்களின் கருத்தெல்லாம் செல்வத்தை அறவழியில் மற்றவர்களுக்காக செலவிடுவதின் பயனை செவ்வனே விளக்குகின்றது.

அறநெறியுடன் வாழ்வதற்கும் அறம் செய்து வாழ்வதற்கும் நாம் செல்வந்தராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பதை பகிர்ந்து இல்லாதவர்க்கு ஈந்து வாழ்வது அற வாழ்விற்கு அடையாளமாகும். இதனால்தான் இளம் பிராயத்திலேயே நமக்கு தமிழ் மூதாட்டி அவ்வையார் “அறம் செய்ய விரும்பு” என்ற பாடத்தை முதல் பாடமாகப் புகட்டினார். செல்வம் இருந்தும் அறம் செய்யாமல் இருப்பவர்கள் ஏழைகளாகவே இருப்பர்.

திருமூலர் கூறுகின்றார்

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்

தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்

விழித்திருந் தென்செய்வீர் வெம்மை பரந்து

விழிக்கவன் றென்செய்வீர் ஏழை நெஞ்சீரே

அறம் சார்ந்த இந்த அருள்ஞானம் தேடியே மனித உயிர்கள் அலையும் பொழுது அடியார்களின் தேடல்களை எடுத்தா சொல்லவேண்டும். பத்திரகிரியார் பாடுகின்றார்

அஞ்ஞானம் விட்டே யருள்ஞானத் தெல்லைதொட்டு

மெய்ஞ்ஞான வீடுபேற்று வெளிப்படுவ தெக்காலம்?

(தொடருவோம்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *