ரேணுகா ராஜசேகரன்

உடல்நலம் காக்கும் புடவையும் இரவிக்கையும்

மூலாதாரத்தின் மூண்டெழுகனலைக் காலால் எழுப்பும் கருத்து எம் பெண்களின் நடையிலும் உடையிலும், தினசரிப் பழக்க வழக்கங்களிலும் பிணைக்கப்பட்டது என்றேன் அல்லவா?.

விரிந்து சுருங்கும் துருத்தியாம் பெரினியத்தை இரு கால்களால் இயக்குவதும், அவ்வியக்கத்தால் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை உடல் பூராவும் பரப்புவதுமான வித்தை என்பது தமிழ்ப்பெண்கள் வாழ்வில் நித்தியக்கட்டளையாக்கப்பட்டது என்றால் அதற்கு பெண்களுக்காகத் தெரிவு செய்யப்பட ஆடை முதற் காரணமாகும் என்று அந்த அமெரிக்க இராணுவ அதிகாரியிடம் என் உரையாடலைத் தொடர்ந்தேன்.
எங்கள் பெண்களின் ஆடைகளின் வடிவமைப்பு ஒரு மிகப்பெரிய விஞ்ஞான அதிசயம் என்று ஆரம்பித்தேன்.
எப்படி? என்று வினவினார்.
அதற்கு, எளிமையான நான்கு காரணங்களை முன்வைக்கிறேன் என்று அவற்றைச் சொன்னேன்: (1) எங்கள் பாரம்பரிய இடுப்பணி பெண்ணாடைகள் கீழ்ப்புறம் திறந்திருக்கும். இரண்டு கால்களுக்கிடையே வெகு தாராளமாய்க் காற்று நுழையுமாறு செய்த ஏற்பாடு இது. அதுமட்டுமல்ல எங்களது ஆடைகள் விசாலமாய் விரியும்; இதனால், நடக்கும்போது, இந்த ஆடைகள் வெளிக்காற்றை வாகாய் சேகரித்துத் தொடர்ச்சியாய் தொடைகளுக்கிடையே விசையுடன் வீசிவிடும், இதனால் நடக்கும்போது தொடைஇடுக்குகளின் ஊடே உள்செல்லும் காற்று, விரிந்து சுருங்கும் பெரினியத்தின் வழி உள்ளீடாய்ச் செல்லும். (2) பெண்ணுறுப்பும் கருக்குழியும் எப்போதும் காற்றோட்டத்துடன் இருக்கவேண்டும் என்பது எங்கள் உடையின் நியதி; எனவே எங்கள் பெண்கள் “பாண்டீஸ்” அல்லது “ஜட்டி” எனப்படும் அடி -உள் ஆடைகளை அணியாமல் இருப்பது நெடுங்காலப் பழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது. (3) எங்கள் பெண்களின் – வயிற்றில், மார்பில், மற்றும் மார்பகங்ளுக்கு நடுவில் – சூடு சேர்மானம் அடையாமல் – உடனுக்குடன் அச்சூடு உடம்பை விட்டு வெளியேறுமாறு எங்கள் மேலாடைகளும் கூட வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அப்படியென்ன உடை அதன் பெயர் என்ன? என்றார்

வயதுக்கு ஏற்றார் போல் கொஞ்சம் உடைத்தோற்றம் மாறுபடும் அதன் பெயரும் கொஞ்சம் மாறுபடும்.
மிகச்சிறு பெண் என்றால் – பாடிப்பாவாடை
சிறு பெண் என்றால் : பாவாடை – மேற்சட்டை
பருவ வயதுப்பெண் என்றால் – பாவாடை – தாவணி – ரவிக்கை
இளம்பெண்களிலிருந்து மூத்த பெண்கள் வரை – உள்பாவாடை – புடவை- ரவிக்கை
இவற்றில் பாவாடை – ரவிக்கை ஆகியன தைத்த உடுப்புக்கள்; தாவணி, புடவை ஆகியன தைக்காத உடுப்புக்கள். தேவைப்பட்டால் தாவணி, புடவை இரண்டிற்கும் ஓரம் அடிப்போம். பல சமயங்களில் சேலையின் ஒரு ஓரமும் தாவணியில் இரு ஓரங்களும் பின்னல் முடிப்போடோ அல்லது குஞ்சத்தோடோ அல்லது பின்னலும் குஞ்சமும் சேர்ந்த வகையிலோ வெகு ஜோராக முடிக்கப்பட்டிருக்கும். அவற்றிற்கு ஓரம் அடிக்கும் வேலை மிச்சம்.

உள்பாவாடையை – தைத்த உடுப்பாக அணியாமல் அதற்குண்டான துணியைப் புடவையிலேயே சேர்த்து – உள்பாவாடையைத் தவிர்க்கும் புடவைகளும் உண்டு என்று தொடர்ந்தேன்.

எங்கள் உடைகளைத் தயாரிக்கும்போது அவ்வுடைகளில் நாங்கள் உடைக்கேற்ற படி குறிப்பிட்ட வகையிலே குறிப்பிட்ட டிசைனில் pleats அதாவது கொசுவங்கள் வைத்துத் தைக்கிறோம். இந்த கொசுவங்கள் எங்களுக்கு மிகுந்த முக்கியமானவை. தைத்ததுணியாலான உடுப்புகளாகட்டும் ஆடையாய்த் துணியை அப்படியே உடுத்தும் உடுப்புகள் ஆகட்டும் கொசுவங்களின் பால் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி, கொசுவ மடிப்புகளை ஒழுங்காய் ஒருங்கே உருவாக்கி அணிவோம் என்றேன்.

ஓ அப்படியா? இங்கே தான் நீங்களே பார்க்கிறீர்களே நாங்கள் சில கொசுவம் வைத்த உடைகளை முக்கிய விழாக்கள் – திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு மட்டுமே உடுத்துகிறோம். ஏன் – உடுத்தமுடிகிறது என்று தான் சொல்லவேண்டும். தினம் தினம் அணிவது சாத்தியமே இல்லை – அவ்வுடுப்புக்கள் யாவும் மிகமிக விலை அதிகம். நீங்கள் எப்போதுமே அங்கு உயர்மரியாதை உடையிலே இருக்கிறீர்கள்! எனக்கு உங்களைப் பார்த்துக் கொஞ்சம் பொறாமையாகவே இருக்கிறது என்றார் சிரித்த்துக்கொண்டே.

மிகச்சரியாகச்சொன்னீர்கள் எஙகளுக்கு உடுப்பு என்பது மிக மிக உயர்வானது – அதுவும் அதனைச் சரியாய் உடுத்தவேண்டும் – முறையாய் உடுத்த வேண்டும் – அழகாய் உடுத்தவேண்டும் என்று மிகவும் பிரயாசைப்படுவோம் – உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. சொல்லப்போனால் இங்கு கிடைக்கும் அந்த சில உயர்மரியாதை ஆடைகள் கூட பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வை தானே!எனச்சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன.

உடையில் மதிப்பு என்பது ஒருபுறம் இருக்க உடையின் உடல்நலப் பயன்பாடுதான் எங்களது முக்கிய குறிக்கோள். கொசுவங்களை வைத்து நாங்கள் உருவாக்கும் பெண்களுக்கான உடைகள் யாவும் அவரது உடல் நலம் பேணுவதற்காகத்தான். அழகு என்பது ஒரு உடன் விளைவு அவ்வளவே. எங்கள் பெண்களின் உடையைத் தயாரிப்பது என்பதை மிக நுட்பமான பொறியியல் திறன் என்றே சொல்லமுடியும். நாங்கள் பெண்கள் உடையில் வைக்கும் ஒவ்வொரு வகை கொசுவத்திற்கும் ஒவ்வொரு பணி உண்டு. அதாவது வைத்த கொசுவத்திற்கேற்ப எங்கள் உடை இயங்கும் – அவ்வாறு அது இயங்கும்போது – வெப்ப இயக்க வினைகள் உண்டாக்கும் – அதனால் எங்களுக்கு உடலில் நலம் சேரும். பிணிகள் – தொற்றுக்கள் அகலும் என்றேன்.

கேட்கக்கேட்க ஆச்சரியமாய் இருக்கிறதே – உங்கள் கொசுவங்களின் டிசைன் பற்றி இன்னும் கொஞ்சம் விவிரம் தாருங்களேன் என்றார்.

முதலாவது, உடை இடுப்பில் சேரும் சுற்றளவுக்கும், உடையின் அடிச்சுற்றளவுக்கும் குறைந்த பட்சம் ஒன்றுக்கு மூன்றரை எனும் விகிதாச்சாரம் இருக்கும். இது ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதாச்சரம் வரையிலும் கூடச் செல்லும். எனவே ஒரு உடுப்புக்கு நாங்கள் எடுத்துக்கொள்ளும் துணியின் அளவு அதிக தாராளமாக இருக்கும். அடுத்து, தைக்கும்போது, எங்கள் உடைகளை கோர் எனப்படும் பகுதிகளாக வெட்டி அந்த வெட்டுத்துண்டுகளை மட்டுமே இணைக்கிறோம். இந்த கோர்களை நாங்கள் பல வடிவங்களில் கத்தரித்துக்கொள்ளலாம்; எடுத்துக்காட்டாக அம்ரெல்லா கட் அதாவது குடை வடிவம். இதுபோன்றே சர்குலர் கட் எனப்படும் வட்ட வடிவம், , கோனிகல் கட் எனப்படும் கூம்பு வடிவம் ஆகிய பல வெட்டுக்கள் உள்ளன. இந்த வெட்டுக்கள் எங்கள் உடைகளின் அடிப்படை இன்ஜினியரிங் டிசைன் எனலாம்.

அடுத்து, இந்த வெட்டுத்துண்டங்களை இணைக்கும் போது, இடுப்பு சேரும் இடத்தில் துணியைச் சுருக்கவேண்டும் அல்லவா? அங்கேதான் உடைக்கேற்றபடி பற்பல வடிவக் கொசுவங்களை உருவாக்கிச் சுருக்குகிறோம். என்ன டிசைனில் கொசுவம் உண்டாக்கப்பட்டது என்பது அந்த உடுப்பு, அதனை உடுத்துபவர், அவ்வுடுப்பை உடுத்திக்கொண்டு நடக்கும்போது எப்படி விரியும் எப்படிச்சுருங்கும் என்பதை முடிவு செய்யும். அது விரிந்து சுருங்கும் தன்மைக்கேற்ப கால்களுக்கிடையில் காற்று உள் வீசப்படும். இவ்வாறு வீசப்படும் காற்று பெண்ணின் மறையுறுப்பை வருடி ஒத்தடம் தந்து அங்குள்ள ஈரம், உப்புப்படிவு, இறந்த செல்கள், மற்றும், இன்னபிற அழுக்குகளைக் களையும். அதன் ஒரு பகுதி அங்கே வாழும் நன்மை தரும் நுண்ணுயிர்களுக்கு ஊட்டச்சத்தாகும், இன்னொரு சிறுபகுதி பெண்ணுறுப்புக்குள்ளே உறிஞ்சப்படும். இதுதான் சாராம்சம்.

ஆக, ஆடைகளின் கொசுவம் தான் விசிறி போல செயல்படுகிறது என்கிறீர்கள் அல்லவா?

ஆம்! எனத் தொடர்ந்தேன். ஆடைகளில் கத்திக் கொசுவம், பெட்டிக்கொசுவம், இரட்டைபெட்டிக்கொசுவம், அடுக்குக்கொசுவம் ஆகிய டிசைன்களை உபயோகிக்கிறோம்.
சட்டை மற்றும் ரவிக்கைகளின் கையில் கார்ட்ரிட்ஜ் கொசுவத்தை வைத்து கஃப் கை, மிளகாய்க் கை என உண்டாக்குவர் அல்லது ஆணின் சட்டைபோல தளர்வாய் மூக்கு வைத்து, கை அமைப்பர். பாவாடைமேல் அணியும் சட்டைகளின் கழுத்தில் “வாட்டியோ” வகைக் கொசுவங்களை வைப்பர்.

புடவை என்பது துணி – தைத்த உடுப்பல்ல என்றேனல்லவா? இதை உடலில் கட்டிக்கொள்ளவேண்டும். அவ்வாறு கட்டிக்கொள்ளும்போது, புடவையில் எங்கள் பெண்கள் வைக்கும் கொசுவத்திற்கு ஈடு இணையே இல்லை என்பேன். 5.5 மீட்டர் நீளமும் ஏறக்குறைய 1.5 மீட்டர் உயரமும் கொண்ட துணை தான் புடவை என்றேன்.

அடேங்கப்பா! அது அத்தனைப்பெரிசா? சாரி என்பார்களே அதுபோன்றதா உங்கள் புடவை என்றார்.

சரிதான். மிகச்சரியாய் பிடித்தீர்கள் சாரியை; சாரியைத்தான் தமிழில் சேலை என்கிறோம் அது மருவிவந்த பெயர். புடவை என்பது தமிழில் நிஜப்பெயர்.

புடவை, இரவிக்கை இரண்டுமே காரணப் பெயர்கள் – வினையாலணைந்த பெயர்கள் – Action nouns
புடம் என்றால் கனல் அல்லது தணல் (Ember); அவி என்றால் இரு பொருட்கள் உண்டு: சூட்டை அணைத்தல் அல்லது சூட்டை உபயோகித்துச் சமைத்தல். அதனால், புடவை என்றால் நெருப்பை அவிக்கும் ஆடை என்பது பொருத்தமாய் இருக்கும் என்றேன்.
இரவி என்றால் சூரியன்; கை என்பது பொதுவாக மேற்கையைக் குறிக்கும் ஏனெனில் கையின் பிற பாகங்களுக்கு தனித்தனியே பெயர்கள் உள்ளன. சூரியனை உடல் தாக்காதவாறு மறைக்கும் கையுடைய உடுப்பு என்பதே இரவிக்கை என்பது என்றேன்.
பொதுவாக, இரவிக்கைகளுக்கு வைக்கும் கழுத்தின் அகலமானது, தோள்பட்டை, விலாஎலும்பு, மேல்முதுகு ஆகியவற்றைக் காட்டக்கூடாது எனவும், அது, முன்புறம் மார்பகப் பிளவு தெரியும்படியாக வெகு தாழ்வாக இருக்கக்கூடாதென்றும் என்பது பொது விதி. இப்பாகங்களில் வெயில் பட்டால் தோல் புற்று நோய் வரும் என்பது இன்று அனைவரும் அறிந்த உண்மை. எனவே வெய்யிலை மறைக்கவேண்டிய இடங்களில் கட்டாயம் மறைக்கும் கைகள் இரவிக்கைக்கு வைக்கப்பட்டன.

உங்களுக்கெல்லாம் நிறையவே முன்யோசனை இருந்திருக்கிறது! கொசுவங்களைப்பேசுங்களேன்! என்று தொடர்ச்சி தந்தார்.

அவர் ஆர்வம் என்னை மேலும் உற்சாகப்படுத்தியது. புடவையில் இரு இடங்களில் கொசுவம் வரும்; இடுப்பில் மற்றும் தோளில் என. எங்கள் பெண்கள், புடவைகளில் விதம் விதமான பாணிகளில் இவ்விரண்டு கொசுவங்களையும் வைப்பர். உடுத்தும் திசைகளும் மாறும் – இடமிருந்து வலம் அல்லது வலமிருந்து இடம். அரிஅரியாய்க் சிறு கத்திக் கொசுவம் வைப்பர் அல்லது ஜாணகலம் பெட்டிக் கொசுவம் வைப்பர்; நான்கு விரற்கிடை ரெட்டைப் பெட்டிக் கொசுவம் வைப்பர் அல்லது மாற்றெதிர்க்கொசுவம் என ஒருதிசையில் கொசுவி எதிர்த்திசையில் திருப்பி அதன்பின் இடுப்பில் செருகுவர். இடுப்பில் செருகும்போது, கொசுவம் முன்னே வரும்; பின்னே வரும்; பக்கவாட்டில் வரும் என வகை என்றால் வகையோ வகை என படு அட்டகாசமாயிருக்கும்!

உள்பாவாடை எனப்படும் உடுப்பு தைக்கப்படுவது; இது கொசுவம் இல்லாதது அதிக விஸ்தாரம் இல்லாதது. அதனால் இதனை அப்படியே ஏனோதானோவென்று தைத்துவிடமுடியாது. இதற்கும் கோர் வேண்டும் – குறைந்த பட்சம் நான்கு கோர்களிலிருந்து பத்து கோர்கள் வரை கூம்புப் பகுதிகளாக வெட்டி, அப்பகுதிகளை இணைக்கவேண்டும். சிலநேரம் குறைவான கோர் உடைய உள் பாவாடைகளில் சிறுசிறு கத்திக் கொசுவம் வைக்கப்பட்டிருக்கும்; குறைந்த கோரை ஈடுசெய்யும் ஏற்பாடு இது. உள்பாவாடை என்பது உடையின் ஒரு தொடக்கம் அவ்வளவுதான். இதன்மேல் உடுக்கப்படும் புடவையை நெறிப்படுத்தும் பொறியியல் சிறப்பு கொண்ட பொறுப்பான ஒரிழை (single layer) உடை இது. இரண்டுகால்களை வீசி நடக்கும்போது கால்களைத் தடுக்காதபடியான விஸ்தாரதத்துடன் மட்டுமே இருக்கும் உள்பாவாடையின் இடுப்பிலே நாடா கோர்க்கப்பட்டிருக்கும். தன் இடையின் அகலபருமனுக்கு ஏற்ப, உடுத்தும் பெண், நாடாவாவை இறுக்கி உள்பாவாடையை அணியவேண்டும். அணிந்துவிட்டால் இடுப்பின் அசைவுக்கு ஏற்ப, நாடா அந்த இடுப்பின் அசைவை ஒரு விசையாக பாவாடையின் கூம்பு கோர்களின் குறுகிய மேல் நுனியில் செலுத்துகிறது. கூம்பு கோர்களின் அகலம் கீழ்வாகில் அதிகமாவதால், இப்போது மேலிருந்து விசை கீழே கிடுக்கிவெனப்பரவ, பாவாடையின் அடி, வட்டமாய் விரியலாகும் ஆனால் நடக்கும் காலோ விரியும் பாவாடையின் அடிவட்டத்தை, ஒரு தூளியை அசைப்பதுபோல் கிடைமட்ட நேர்க்கோட்டில் முன்னும்பின்னுமாய் வெகு விசையுடன் வெகுநேர்த்தியாய் மாற்றி மாற்றி அசைக்கிறது எனவே அதியற்புதமானதொரு பொரிவிசைச் சங்கமம் அங்கே ஏற்பட்டு பாவாடைக்குள்ளே கூம்புச்சுழலாய் காற்று உள்புகுகிறது. ஆக, புடவை என்பது சொற்பதம்கடந்த மிகப்பிரமாதமானதொரு பொறியியல் கண்டுபிடிப்பு என்பதே பொருத்தமானது.

உள்பாவாடை இல்லாத புடவைகள் எப்படி இருக்கும்? என்றார்.

உள்பாவாடை இல்லாத புடவைகள் இருவகைப்படும்: எட்டு கஜம் மற்றும் ஒன்பது கஜம். எட்டுகஜம் புடவைகள் கொஞ்சம் எளிதானவை. உள்பாவாடைக்கான இரண்டு கஜம் பகுதியை இடுப்பில் ஒருமுடிச்சு போட்டுக் கட்டிக்கொண்டுவிடுவார்கள், அதற்கு மேலே மிச்சம் உள்ள துணியை, புடவையாய் உடுத்திக்கொள்வார்கள். ஒன்பது கஜம் புடவைகளில், உடுத்தும் பாணி பலபடிநிலைகளைக் கொண்டது; சிக்கலானது; உடுத்திக் கொண்டுவிட்டாலோ இயங்க வெகுவசதியாக இருக்கும். சிலகுலத்தினர் ஒன்பது கஜம் புடவைகளை தினசரி உடுத்துவர்; சிலர் அதனை விசேஷ நாட்களில் மட்டுமே உடுத்துவர்.

எவ்வகைப்புடவையாயினும், பொதுவாக, புடவை கட்டிக்கொள்வது என்பதே பலபடிநிலைகளைக் கொண்ட செயலாகும். புடவை உடுத்த சிரத்தை வேண்டும்; உரிய கால அவகாசம் எடுத்துக்கொண்டுதான் புடவையை உடுத்திக்கொள்ளமுடியும். புடவை கட்டிக்கொள்வது என்பது முதலில் பழகும்போது பலவித சவால்களை உள்ளடக்கிய மாபெரும் வீரவிளையாட்டில் ஜெயிப்பதுபோல் தெரியும். பழகப்பழக அது கைவந்த கலையாகும். குறைந்த நேரத்தில், நேர்த்தியாய்ப்புடவை உடுத்த விரைவாகவே கற்றுக்கொள்ளமுடியும்.

மொத்தத்தில், ஆபாசமில்லாமல், கவுரவத்தோடு, அழகும், உடல் நலமும் கொடுக்கும் ஆடை புடவை எனலாம்.

அப்படியென்றால் உங்கள் பிரதான உடை “புடவை “என்று கொள்ளலாமா? என்றார்.

ஆம்! குழந்தை வயது மற்றும் பருவ வயது ஆகியன விரைவாக நகர, எங்கள் பெண் தன் முக்கால் வாசி வாழ்நாட்களையும் புடவையிலேயே வாழ்கிறாள். எனவே எங்கள் பெண்களுக்கு, புடவை என்றால் வெகு பிரியம். அதுமட்டுமல்ல – மானம் காப்பது உடை என்பார்கள் அல்லவா? அதற்கும் ஒருபடி போய் மானத்தோடு, மகிழ்வையும், அழகையும், உடல்நலத்தையும் ஒரு சேர அளிக்கும் ஒரே உடை என்பதால் புடவை என்பது எங்கள் ஊனுக்கும் உயிருக்கும் மேலானது; மற்ற பெண்களுக்கு, புடவையும் இரவிக்கையும் வாங்கித்தருவது என்பது எங்களுக்கு பழக்கம். உறவினர் என்றல்லாது, நண்பர்கள், தெரிந்தவர் தெரியாதவர் என எவருக்குமே புடவை-இரவிக்கை வாங்கித்தருவோம். எங்கள் திருக்கோயில்களில் அம்மனுக்குப் புடவை வாங்கி சாத்துவோம். இது எங்கள் மண்ணின் உயரிய பண்பாடு. புடவையை, கோடி என்றும் எங்களில் சிலர் அழைக்கிறார்கள்; கோடி என்பது ஒரு இந்தியப் பண அளவை; கோடி என்பது யு எஸ் டாலரில் ஏறக்குறைய 160,000 டாலர்கள். அத்தனைப் பெரிய பணமதிப்பு அது. ஒரு புடவையைப் பிறருக்குத் தருவது அல்லது பிறர் தர அதனைப் பெற்றுக்கொள்ளுவது என்பது கோடி பணம் பெறுவதைப்போன்றது என்பது பொருள்.

எது எப்படியாகினும், எங்கள் பெண்களுக்காக எங்கள் மூதாதையர்கள் தெரிந்தெடுத்துத்தந்த ஆடைகள் அல்லது உடுப்புக்களின் ஒரே நோக்கம் உடலில் காற்றோட்டத்தைத் தொடர்ந்து ஏற்படுத்துவதே.

அப்படிஎன்றால் காற்றோட்டத்தின் மூலம் பெண்ணுக்குள்ளே விளையும் நெருப்பை ஆக்க சக்தியாக மாற்றுவதற்கான கருவிகளே உங்கள் பெண்ணுடைகள் எனலாமா என்றார்.

நன்று சொன்னீர்கள்! ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். பெண்ணின் மறையுறுப்புக்குள்ளே பெரினியக்குழியில் வெப்பம் உண்டாகிறது. அவ்வாறு உண்டாகும் உஷ்ணத்தைப் புடமாக்கி, அதன்மூலம் அவளது கருவறை முழுவதையும் தூய்மைப்படுத்தி, அங்கே ஜீவாதார நிகழ்வுகள் ஒழுங்காய் நடக்குமாறு அங்கு ஏற்படும் வேதிவினைகளைச் கவனமாய்ச் சரி செய்யக் காற்று தேவை. அது போன்றே நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வளரவும் – தீமை செய்யும் பாக்டீரியாக்கள் ஒழியவும் காற்று தேவை!

ஜீவாதார நிகழ்வுகளை விளக்குங்களேன் என்றார்

மாதவிடாய் முறையே நிகழ்தல், முட்டை உண்டாகுதல், முட்டை வெளியேறுதல், தாம்பத்ய உறவு கொள்ளாத நிலை அல்லது தாம்பத்ய உறவு கொள்ளுதல், கருத்தரித்தல், கரு வளருதல், பிரசவம் நிகழுதல் , பிரசவத்துக்குப்பின் கழிவு வெளியேறுதல், தசைகள் சுருங்குதல், மாதவிடாய் இறுதியில் நின்று போவதற்கு முன் பெரும்பாடாக மாறும்போது, கோளாறு ஏற்படாது மாதவிடாயை முடிவுக்குக் கொண்டுவருதல், ஆகிய யாவற்றையும் ஜீவாதார நிகழ்வுகள் எனலாம்.

மேலும், பெண்ணின் கருவறை மண்டலம் மற்றும் அங்கு உருவாகும் சிசு ஆகிய இவை இரண்டிற்கும் ஒத்தாசை செய்யும் நுண்ணுயிர்கள் உண்டு. அவை அங்கே இருந்தால் தான் பெண்ணாலும் பெண்ணும் உருவாகும் சிசுவாலும் நலமாய் ஜீவிக்கமுடியும். ஆண் -பெண் தாம்பதிய உறவுக்கும் இந்த நுண்ணுயிர்கள் தோதானவை. அவற்றுக்கு உயிர் வார்த்து வளர்த்து அவற்றை பெண்ணின் மறையுருப்பில் நிலைநிறுத்தவேண்டுமென்றால் அவற்றிற்குக் காற்று தேவை; இலேசான இள வெளிச்சம் தேவை. ஏனெனில் அவை காற்று விரும்பிகள்; லேசான இள வெளிச்ச விரும்பிகள்; காற்று இல்லையென்றால் இந்த நுண்ணுயிர் நண்பர்கள் மறைந்தொழிந்துவிடுவார்கள்.

மாறாக, காற்று இல்லையேல், தீமை செய்யும் நுண்ணுயிர்கள் மற்றும் காளான்கள் அங்கே ஏராளமாக முளைத்து நிரந்தரக் குடியுரிமை பெறுவார்கள். இந்தத் துன்பம் செய்யும் நுண்ணுயிர்களுக்கும் காளான்களும் பெண்ணுறுப்பில் மிகச்சட்டென்று வளர்ந்துவிடுவன – ஏனெனில் பெண்ணின் மறையுறுப்பு ஒரு விளைநிலம்போன்றது. ஈரப்பதமும், உப்பும், வெப்பமும், இறுக்கமும், இருட்டும், இன்னபிற எருக்களுமாக அங்கே தீமை நுண்ணுயிர்களுக்கும் காளான்களுக்கும் போஷாக்கான சூழல். ஆனால், அவற்றிற்குக் காற்று எமன். ஆகவே, பெண்ணின் மறையுறுப்பு காற்றை சுவாசிக்கவில்லையென்றால் – அதற்கு நாம் காற்றை ஊட்டவில்லயென்றால் – மானுடத்தின் அழிவு அங்கேயே துவங்கத் தடையேதுமில்லை என்றேன்.

நீங்கள் சொல்வது உண்மையா ? இங்கே எங்கள் பெண்கள் பெரும்பாலும் இறுக்க உடைகளைத் தானே அணிகிறார்கள் . அப்படியென்றால் எங்கள் பெண்களின் உடல் நிலை ஆரோக்கியமாய் இல்லை என்கிறீர்களா என்றார் .

உங்கள் பெண்கள் மட்டுமல்ல எங்கள் பெண்களும் கூட இறுக்க உடைகள் உடுத்தத் தொடங்கி யாயிற்று . 1993யிலேயே உங்கள் நாட்டில் இறுக்க உடைகளால் உடல்நலக்கோளாறு விளைவதை மருத்துவ உலகம் வெளியிட்டது. அதற்கு , “Tight Pant Syndrome” என்று பெயர் வைத்தது. மறையுறுப்பு சம்பந்தமான பிரச்சனைகளோடு மருத்துவரிடம் வரும் பெண்களின் எண்ணிக்கை உங்கள் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் மிக அதிகமாக அதிகரித்திருக்கிறது. எங்கள் நாட்டில் அது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலோர் இளம்பெண்களே. மறையுறுப்பு சம்பந்தமான பிரச்சனைகளோடு வரும் பெண்களில் இன்று 96% வெள்ளைப் படுதலுடன் வருகிறார்கள் (முன்பெல்லாம் வெள்ளைப்படுதல் என்று அழைத்தது இப்போது மஞ்சள் படுதல் பச்சைப்படுதல் என்று சொல்லுமளவுக்கு , கொஞ்சம் காட்டமான தொற்று காணப்படுவதாக அறிகிறோம்); இவர்களில் 17% பெண்களுக்கு மறையுறுப்பில் நமைச்சலும் எரிச்சலும் உள்ளது; இவர்களில் 5% பெண்கள் மிகுந்த துர்வாடையோடு வருகிறார்கள்; 3% பெண்கள் அடிவயிற்றில் வலியோடு வருகிறார்கள் ; 2% பெண்கள் சிறுநீர் கழிக்கும்போது தாங்கொணா வலியோடு வருகிறார்கள் எனப்பார்க்கிறோம் . மேலும் கருத்தரிக்க இயலாத பிரச்சனை இன்று உலக அளவில் அதிகரித்து வருகிறது.

அவருடன் நான் தொடர்ந்து பேசியது பற்றி மேலும் பேசுவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.