-மேகலா இராமமூர்த்தி

வங்க தேசத்திலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வான்கூவர் நகரில் குடியேறிய திரு. ரக்பி சாலமன் என்பவர் 1998-இல், உலகில் பேசப்படும் பல்வேறு மொழிகளைப் போற்றும் வகையிலும், அவற்றை அழியாமல் பேணிக்காக்கும் வகையிலும் ’உலகத் தாய்மொழி நாள்’ என்றவொன்றைக் கொண்டாட வேண்டும் எனும் வேண்டுகோளை  ஐ.நா.வுக்கு விடுத்தார். அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு 1999 பிப்ரவரி 21-ஆம் நாளை உலகத் தாய்மொழி நாளாக  (International Mother Language Day) ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது. 2000-ஆவது ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதிமுதல் இந்நாள் அனைத்துல நாடுகளாலும் உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்பட்டுவருகின்றது.

ஒவ்வொருவருக்கும் அவரவருடைய தாய் எப்படி உயர்ந்தவளோ அதுபோலவே அவரவர் தாய்மொழியும் உயர்ந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவ்வகையில் தமிழரான நமக்கு நம் தாய்மொழியான தமிழ் மிகவும் உயர்வானது.

உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழின் தோற்றம் அறுதியிட்டுக் கூறவியலாத தொன்மை வாய்ந்தது. அதனால்தான்,

”தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
சூழ்கலை வாணர்களும் – இவள்
என்று பிறந்தவள் என்றுண ராத
இயல்பினாளாம் எங்கள் தாய்” என்றான் மகாகவி பாரதி.

தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்றொரு பொருளும் உண்டு! இதனைப் பண்டை இலக்கியங்களும் உறுதி செய்கின்றன.    

அழகிய பெண்களின் இனிய சாயலை,

தமிழ் தழீஇய சாயலவர் (சீவக சிந்தாமணி 2026) என்று புக(ல்)ழ்கின்றது சிந்தாமணி.

தாமரைகளின் மகரந்தத்தில் தங்கி ரீங்காரமிடும் வண்டுகளின் இன்னோசையைத் ’தமிழ்ப்பாட்டு’ என்கிறார் கம்பர். 

பொன்பால் பொருவும் விரை அல்லி
புல்லிப்
பொலிந்த பொலந் தாது
தன்பால் தழுவும் குழல் வண்டு,
தமிழ்ப்பாட் டிசைக்கும் தாமரையே….”  (கம்பன் – பம்பை வாவிப் படலம்)

20ஆம் நூற்றாண்டுக் கவிஞரான பாவேந்தரோ,

”தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று புகன்று, தமிழின் சிறப்பை மேலும் கூட்டுகின்றார்; சுவையூட்டுகின்றார்!

இத்துணை இனிமையும் தொன்மையும் உடைய தமிழ்த்தாயின் சிறப்பை இடையில் சிலகாலம் அவளின் தனயர்கள் மறந்திருந்தனர். காரணம் அக்காலகட்டத்தில் தமிழகம் ஆற்காட்டு நவாபுகளின் படையெடுப்பு, தெலுங்கு மற்றும் மராட்டிய மன்னர்களின் ஆட்சி என்று தமிழரல்லாதோரின் பிடியில் கட்டுண்டிருந்ததுவே எனலாம். அவற்றைத் தொடர்ந்து வந்ததோ ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அயலவரான வெள்ளைப் பரங்கியரின் நெடிய ஆட்சி. எனவே தமிழன்னை தன் சொந்தப் பிள்ளைகளுக்கே அந்நியமாகிப் போனாள்.

இவ்வாறு சிலகாலம் சென்றது.

19-ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலியிலுள்ள இடையன்குடி எனும் கிராமத்திற்குக் கிறித்தவ சமயத்தைப் பரப்பவந்த இராபர்ட் கால்டுவெல் (Bishop Robert Caldwell) எனும் மொழியியல் அறிஞர், தென்னிந்திய மொழிகளையும் வடமொழியான சமஸ்கிருதத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார்.

”ஆரிய மொழிகளின் இலக்கணம் வேறு; திராவிட மொழிகளின் இலக்கணம் வேறு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளுக்கும் அடிப்படை இலக்கணம் ஒன்றே; இவையனைத்தினும் மூத்தமொழி தமிழேஎன்பதையெல்லாம் தம் ஆராய்ச்சிகளின் பயனாய்க் கண்டுணர்ந்த அவர், அவற்றையெல்லாம் ’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) எனும் தன்னுடைய நூலில் விரிவாகவும் விளக்கமாகவும் பதிவுசெய்தார்.

அதுவரை, வடமொழியே தமிழுக்கு மூத்த மொழி; தமிழைத் தோற்றுவித்த மொழி என்று நம்பிக்கொண்டிருந்த/நம்பவைக்கப்பட்டிருந்த தமிழர் பலரின் அறிவுக்கண்களை அந்த ஆய்வுநூல் திறந்தது; அவர்கட்கு மொழிகள் குறித்த தெளிவு பிறந்தது.

நம் தாய்மொழியான தமிழே தென்னகத்தின் பிறமொழிகளைத் தோற்றுவித்த தாய் என்பதை ’மனோன்மணீயம்’ ஆசிரியரான சுந்தரம் பிள்ளை அவர்களும் தன்னுடைய ’தமிழ்த் தெய்வ வணக்கத்தில்’ உறுதிசெய்கின்றார்.

கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
(மனோன்மணீயம் – தமிழ்த்தெய்வ வணக்கம்)

சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த மதுரையில் தோன்றிய வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் எனும் தமிழறிஞர் தன் இயற்பெயரைத் தனித்தமிழ்மீது கொண்ட தணியாக் காதலால் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.

தனித்தமிழ் இயக்கத்துக்குத் தோற்றுவாய் செய்த மாமனிதரான அவர், ’தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி’ என்பதனைத் தன்னுடைய ’தமிழ் மொழியின் வரலாறு’ எனும் நூலில் சான்றுகளோடு மெய்ப்பித்திருக்கின்றார்.

உயர் தனிச் செம்மொழி எனும் தொடரிலுள்ள ஒவ்வொரு சொல்லையும் அவர் விளக்கி அதனைத் தமிழோடு பொருத்திக் காட்டியுள்ள பாங்கு வியந்துபோற்றத்தக்கது. அதனைக் காண்போம்.

உயர்மொழி என்பது யாது?

”தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள
 பலமொழிகளினும் தலைமையுடையதும்
அவற்றினும் மிக்க தகவுடையதுமான ஓர் மொழியே
உயர்மொழியாகும். இவ்விலக்கணங்கொண்டு
ஆராயுமிடத்து, தெலுங்கு உள்ளிட்ட
மொழிகளுக்கெல்லாம் தலைமையுடையதும்
அவற்றினும் மேதகவுடையதுமாகிய ’நந்தமிழ் ஓர்
உயர்மொழியாகும்” என்றார் அவர்.

தனிமொழிக்கான இலக்கணம் என்ன?

”தான் வழங்கும் நாட்டில் பயின்றுவரும்
பிறமொழிகளின் உதவியின்றித் தனித்தியங்கும்
தன்மையுடைய மொழியே தனிமொழி எனும்
தகுதியுடைத்து. தான் பிறமொழிகளுக்குச் செய்யும்
உதவி மிகுந்தும், தனக்குப் பிறமொழிகள் செய்யும்
உதவி குறைந்துமிருத்தலே வழக்காறு. அவ்வாறு நோக்கின், தமிழின்உதவியின்றித் தெலுங்கு முதலிய மொழிகள் இயங்கமாட்டா. ஆனால் அவற்றின் உதவியின்றித் தமிழ் தனித்தியங்கும் பெற்றியது. ஆதலின் நந்தமிழ் ஓர் தனிமொழியே!” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

இனிச் செம்மொழிக்கான தகுதி யாது?

”திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய
தூய்மொழி புகல் செம்மொழியாம்” என்பது இலக்கணம்.

இம்மொழிநூல் இலக்கணத்திற்குச்
சாலப் பொருத்தமுடையது தமிழ்மொழி. பிறமொழிச்
சொற்களன்றித் தன்மொழிச் சொற்கள்
மிகுந்திருத்தலே தூய்மொழியாகும். அவ்வகையில்
தமிழ் தூய்மொழியுமாகும். அவ்வாறே தமிழில்
ஆளப்படும் சொற்கள் நம் மக்களின் பண்பாலும்
நாகரிகத்தாலும் செழுமையுற்றவை. எனவே
தமிழ்மொழி ’செம்மொழி’என்பது திண்ணம்” என்றறைந்தார் அப்பெருமகனார்.

நம் தமிழுக்கான செம்மொழித் தகுதியைக் குன்றிலிட்ட விளக்காய் ஒளிரச்செய்பவை பண்டைத் தமிழிலக்கண இலக்கிய நூல்கள் அல்லவா?

உலகின் பிறமொழி இலக்கண நூல்களெல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் வகுத்துவிட்டு நின்றுவிட, ’பொருளதிகாரம்’ எனும் தலைப்பில் மக்களின் அகவாழ்வையும் புறவாழ்வையும் திணை, துறை வகுத்து விரித்தோதியது, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் எனும் தமிழிலக்கண நூலொன்றே!

நம் இலக்கியங்களோ,

யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலக சகோதரத்துவத்தையும்,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று உயிர்களின் சமத்துவத்தையும்,

”…ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” என்று மனமொத்த இல்லற வாழ்வின் பெற்றியையும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே உலகுக்கு உணர்த்திய உன்னத நூல்கள்!

இத்துணைச் சிறப்பு வாய்ந்த உயர்தனிச் செம்மொழியான தமிழைத் தாய்மொழியாகப் பெற்றநாம் பேறுபெற்றோர்!

ஆதலால், அமுதனைய தமிழைப் போற்றிக் கொண்டாடுவோம்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்!

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *