தவறின்றித் தமிழ் எழுதுவோமே!(பகுதி 5-அ)

பேரா.பெஞ்சமின் லெபோ

ஒரு? ஓர்? மயக்கமா? தயக்கமா ? மனத்திலே குழப்பமா?

‘ஒரு ஊரில் ஒரு நாள் ஒரு வண்ணான்  ஒரு கழுதை பொதியைக் கொண்டு வந்து ஒரு  குளக்கரையின் ஒரு ஓரத்தில் உள்ள ஒரு கல்லின்  மீது  அடித்து துவைத்தான்’.

எங்கோ எப்போதோ படித்த வரி. ஒரு வரிதான். அதற்குள் வருவதோ பல ‘ஒரு’க்கள்! எதனால் இப்படி? மயக்கமா? தயக்கமா? மனத்திலே குழப்பமா? மூன்றுமேதாம்! ‘ஒரு’ போடலாமா? ‘ஓர்’ தான் போடவேண்டுமா?புரியாத மயக்கம். இது போட்டால் சரியா? அது போட்டால் தவறாகி விடுமா? – ஒரே தயக்கம்.

இவற்றால் விளைவது குழப்பம். இப்படிக் குழம்புவதே இக்காலத் தமிழர்  பலரின்  வழக்கம். இந்த நிலையில் என்ன செய்வது? இதோ எளிய வழி : மேலே உள்ள வாக்கியத்தில் ஒவ்வொரு இல்லை இல்லை, ஒவ்வோர்  ‘ஒரு’  வாக உருவிப் பாருங்கள். ஒருமுறை உருவிய பின் வாக்கியத்தைப் படிக்கவும். பொருள் மாறாமல் இருக்கிறதா? உருவிய ‘ஒரு’வை  அதே இடத்தில் வைக்காமல் அடுத்த ‘ஒரு’வைக் களைக. (பொருள் மாறுவதாகத்  தெரிந்தால் மறுபடி ‘ஒரு’ வை  அங்கேயே போட்டு விடலாம்).

இப்போது, எல்லா ‘ஒரு’வையும்  உருவிய நிலையில் அந்த வாக்கியம்  இப்படிக் காட்சி அளிக்கும் :

‘ஊரில் நாள்  வண்ணான்  கழுதை பொதியைக் கொண்டு வந்து   குளக்கரையில்  ஓரத்தின்  உள்ள கல்லின்  மீது  அடித்து துவைத்தான்’

முதல் இரண்டு சொற்களைத் தவிர  ஏனையவை பொருளோடு உள்ளன. அதாவது பொருள் மயக்கம் இல்லை. எனவே அங்கங்கே எடுத்த ‘ஒரு‘க்களை அங்கங்கே போடவேண்டா. அதாவது  அத்தனை  ‘ஒரு’க்களும் மிகையானவை. (superflouos). எடுத்து விடலாம். மறுபடி படிக்கவும். முதல் இரண்டு சொற்களுக்கும் மற்றவற்றுக்கும் தொடர்பு இல்லாமல் இல்லையா?.

இப்போது, ‘ஊரில்’ என்ற சொல்லுக்கு முன் ‘ஒரு ‘ போடுவோம்.

ஒரு ஊரில் நாள்  வண்ணான்  கழுதை பொதியைக் கொண்டு வந்து   குளக்கரையில்   ஓரத்தின்  உள்ள கல்லின்  மீது  அடித்து துவைத்தான்’

இப்போது ‘நாள்’ என்ற சொல் மட்டும் மற்றவற்றோடு தொடர்பு இல்லாமல் தனித்து நிற்கிறது! எனவே அங்கே ‘ஒரு‘ போடுவோம்.

ஒரு ஊரில்  ஒரு நாள்  வண்ணான்  கழுதை பொதியைக் கொண்டு வந்து   குளக்கரையில் ஓரத்தின்  உள்ள கல்லின்  மீது  அடித்து துவைத்தான்’

அடடா, அந்த வாக்கியம்  இப்போது அழகோடு பொருளும் பெற்றுத் தெளிவாக  விளங்குகின்றதே! இதனை மேலும் செப்பனிட்டால்?

‘ஒரு’ வில் உள்ள ‘உ’வும் ‘ஊரில்’ உள்ள ஊவும் ஈருயிர்கள். ஈருயிர்கள் இணையா! (ஐ, ஒள – பற்றிப்  பிறகு பார்க்கலாம்). உயிர் கிடக்க  அதன் மேல் உயிர் வந்து  ஒன்றுவது இயல்புதானே! எனவே ‘ஒரு’ என்பது ‘ஓர்’ ஆனால்? இந்த ‘ர்’ மீது ‘ஊ’ வந்து சேர ஒலிப்பதற்கு எளிதாகும் அல்லவா?

ஆகவே,  இங்கே ‘ஒரு’  என்பதற்குப் பகரமாக ‘ஓர்’ போட்டால் ஓசை தடைப் படாமல் ஓடும். எனவே ‘ஓர்‘ போடுவோம். இப்போது முழு வாக்கியம் :

ஓர் ஊரில்  ஒரு நாள்  வண்ணான்  கழுதை பொதியைக் கொண்டு வந்து   குளக்கரையில்
ஓரத்தின்  உள்ள கல்லின்  மீது  அடித்து துவைத்தான்’
.

இப்படி எந்த வாக்கியத்திலும் நிறைய ‘ஒரு’ வர வாய்ப்பு இல்லை. எனவே இந்தச் சோதனையை எளிதாகச் செய்து பார்க்கலாம். செய்துதான் பாருங்களேன்.

மேலே காட்டிய முதல் வாக்கியத்தில் ‘ஒரு’ என்ற சொல் பல இடங்களில் வருகின்றது . இப்படி ஒரு சொல் பல இடங்களில் பயின்று வருவதை அணி இலக்கணம் ‘மடக்கணி‘ என்று அழைக்கும். (காண்க: தண்டியலங்காரம்-92). ஆனால், அச்சொல் இடம் பெறும் ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு பொருளைத் தர வேண்டும்.இல்லெனின் அச்சொல் மிகைச் சொல்லாகும்.

இவை பதடிச்  சொற்கள்.  இவற்றால்  பயன் இல்லை, இவற்றை நீக்கினாலும் பொருளில் மாறுதல் இராது. இவை களையப்பட வேண்டியவை. எனவேதான் மேற்சொன்ன சோதனையில்  இவற்றை நீக்கினோம். ஆங்கிலத்தில் இத்தகைய சொற்களை ‘redundant words ‘ என்பர். ஆங்கில அகரமுதலியும் இத்தகைய சொற்கள்  ‘ no longer needed or useful; superfluous ; able to be omitted without loss of meaning or function’. என வரையறை செய்கிறது.(http://www.wordreference.com/definition/redundancy.)

ஓர் ‘ஊரில்  ‘ஒரு’ நாள் .. என்னும்  சொற்றொடரில்  இருந்து என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? இரண்டு செய்திகள் இதில் உள :

1. வரும் எழுத்தின் முதல் எழுத்து உயிராக இருந்தால், ‘ஓர்’ போடவேண்டும்.

2. வரும் எழுத்தின் முதல் எழுத்து உயிர்மெய்யாக அமைந்தால் ‘ஒரு’ போடவேண்டும்.

இச் செய்திகளைப்  பெரும்பாலோர்  அறிவர். இணையதளத்தில் ‘ஒரு’, ‘ஓர்’ பற்றி எழுதிய அனைவரும் இச் செய்தியை மறவாமல் குறிப்பிட்டு உள்ளனர்.

ஆனால் இலக்கண விதியாக இது எங்கேயும் குறிப்பிடப் படவில்லை. காலச்சுவட்டி’ல்  எழுதும் நாமக்கல் முதுகலைத் தமிழாசிரியர் திரு சி.சந்திரன் அவர்கள் குறிப்பிடுவது மிகச் சரியே :

‘ஒரு, ஓர் இவற்றின் பயன்பாடு பற்றிய கறாரான இலக்கண விதி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை’. (http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/fc5dd7a50d12888d?pli=1).

ஆனாலும் எழுதா விதியாகவே நம் முன்னோர் இதனைக் கருதி இருக்க வேண்டும். அதனால்தான், தொல்காப்பியர், ‘புல்லும் மரனும் ஒரறிவினவே’ (தொல்கா. மரபியல் 28 – ஆம் நூற்பா) என்றும் ‘ஒரு சொல் பலபொருட்கு உரிமை தோன்றினும்’ (தொல்கா. சொல்லதிகாரம்) என்றும் எழுதிச் சென்றார்.

அவரைப் பின் தொடர்ந்த நன்னூலாரும், ‘புல்மரம் முதலஉற் றறியும்ஓர் அறிவுயிர்” என்கிறார். (நன்.சொல்லதிகாரம் உரியியல் நூற்பா 445 ). திருவள்ளுவரும்,

‘உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து’என எழுதினார். இவர்களுக்குப் பிற்காலத்தவராகிய மாணிக்கவாசகரும்,

ஒரு நாமம் ஓர் உருவம்  ஒன்றும் இலார்க்கு ஆயிரம்

திருநாமம் படித் தெள்ளேணம்  கொட்டோமோ’  (திருவாசகம்-திருத்தெள்ளேணம் – 235) … என ‘ஒரு’, ‘ஓர்’ இரண்டையும் பயன்படுத்தி இருக்கிறார்.

எழுதா விதி எல்லாம் மரபாகும். மரபு மீறுதல் வழுவாகும்.

இதனால்தான்,தொல்காப்பியர் ‘மரபுநிலை திரியின் பிறிது பிறிது ஆகும்.(தொல்கா.பொருளதிகாரம்_மரபியல் நூற்பா  93) என்கிறார். அதாவது மரபைப் பின் பற்றாவிடத்து மொழி திரியும். எனவேதான்,

இந்த ‘ஒரு‘  ‘ஓர்‘ -உக்கு உரிய மரபைக் காத்து வருதல், தமிழ் மொழி நலம் காக்க விழைவோர்க்குக் கடன். இப்படி இருப்பதால், நாமக்கல் முதுகலைத் தமிழாசிரியர் திரு சி.சந்திரன் அவர்கள் கூற்றை  மறுக்க வேண்டி உள்ளது :

‘இன்று தமிழ்மொழியின் பயன்பாட்டில் எத்தனையோ மாற்றங்கள். செய்யுள் நடைக்கு எழுதப்பட்ட இலக்கண விதிகள் இன்றைய உரைநடைக்குப் பொருந்தாமல் போய்விட்ட இடங்கள் பல. அதனால் அந்த விதிகளைச் சொல்லி இன்றைய உரைநடையைப் பிழை,குறை என்றெல்லாம் குறிப்பிடுவது பொருத்தமல்ல’ http://groups.google.com/group/mintamil/browse_thread/thread/fc5dd7a50d12888d?li=1)

மறுப்பு: செய்யுள் நடைக்கு எழுதப்பட்ட இலக்கண விதிகள் யாப்பினுள் அடங்கும். மாறாக, எழுத்து, சொல்லதிகார இலக்கண  விதிகள் மொழிக்குப் பொதுவானவை. ஆகவே அவை இன்றைய உரைநடைக்கும் பொருந்தும். அதனால் அந்த விதிகளைச் சொல்லி இன்றைய உரைநடையைப் பிழை, குறை என்றெல்லாம் குறிப்பிடுவது  மிகப்  பொருத்தமே.

அவரின்அடுத்த கருத்தும் மறுப்புக்கு உரியதே:

‘நாட்டுப்புறக் கதைகள் ‘ஒரு ஊர்ல  ஒரு ராஜா’, ‘ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா‘ என்னும் வகையில் தொடங்குகின்றன. ஜெயகாந்தன் எழுதிய நாவல் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்‘. ‘அவளுக்கென்று ஓர் மனம்‘, ‘தங்கைக்கோர் கீதம்’ என்பன திரைப்படத் தலைப்புகள். இவற்றைப் பிழை என்று நிராகரித்து விடலாமா?

மறுப்பு : நாட்டுப்புறக் கதைகள் ‘ஒரு ஊர்ல  ஒரு ராஜா’, ‘ஒரே ஒரு ஊர்ல ஒரே ஒரு ராஜா’ என்னும் வகையில் தொடங்குவதால் செந்தமிழிலும் அப்படியே எழுதலாம் என்பது பிழையே!அவை ஊருக்கு ஊர், வட்டத்துக்கு வட்டம் மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபடும். இதனை ஏற்பது எப்படி?

அது போலவே செயகாந்தனையும் தமிழ்த் திரை உலகையும் முன்னிலைப் படுத்துவதும் பொருந்தா! சென்னைத் தமிழிலேயே முழு நாவலையும் எழுதினார் அவர். ஆனால் அது படு தோல்வி கண்டது. அதனைச்   சோதனைக்காகவே  தாம் எழுதியதாகக் கூறி அதன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

தமிழ்த் திரை உலகுக்கும் தமிழுக்கும் எவ்வளவு தொலைவு என்பதை யாவரும் அறிவர். தமிழில் ஒழுங்காகப் பெயர் கூட வைக்கத் தெரியாத திரை உலகைத்  தமிழுலகம் பின் பற்ற வேண்டும் என்றால் ‘தமிழினி மெல்லச் சாகும் ‘ என்று சொன்னவன் மேதையாகத் தான் இருப்பான்.

அதனால், இவற்றைப் பிழை என்று களைய வேண்டியது முறையே! களைகளைக் களையாவிடில் விளை நிலமே பாழாகும்.

மறுபடி முதல் பத்தியைப்  போல் இன்னொரு காட்டு பாருங்கள்: தமிழ்ப்  பட்டப் படிப்புக்கு உள்ள பாடத்தில் இருந்து,

தூது இலக்கியம்

1) தூது அனுப்புவோர் ஓர் ஆணாக அல்லது பெண்ணாக இருக்கலாம்.

2)தூது பெறுவோரும் ஓர் ஆண் அல்லது பெண்ணாக இருக்கலாம். (http://www.tamilvu.org/courses/degree/c012/c0123/html/c01232l1.htm)

இதில்  உள்ள  ‘ஓர்‘ நீக்கி விட்டுப்  பார்த்தாலும்  பொருள்  கெடவில்லை. எனவே, இவற்றில் ‘ஓர்‘ தேவை இல்லை.

இன்னோர் எடுத்துக் காட்டு பாருங்கள்: இன்றைய உயிரியலில் ஓர் ஆக்கம்? இன்றையப் பொருளியலில் ஓர் ஆக்கம்? இன்றையப் பூதவியலில் ஓர் ஆக்கம்? இன்றைய ஓவியம் பற்றி ஓர் ஆக்கம்? இன்றைய மாந்தவியல் பற்றி ஓர் ஆக்கம்? இன்றையச் சட்டத்துறை பற்றி ஓர் ஆக்கம்? இன்றைய மின்னியல் பற்றி ஓர் ஆக்கம்? உடற்கூறு பற்றி இன்று வந்த ஓர் ஆக்கம்? இவை எல்லாம் மேலே சொன்ன வடிவங்களில் வரட்டுமே?’

இதனை எழுதியவர் தமிழறிவு உள்ளவர்; சொல்லாய்வில் வல்லவர்.; பொறிஞர் இராம.கி அவர்கள்.  இவர்,  இப்படி பல இடங்களில் ‘ஓர் ‘ பெய்திருப்பது சரியா? முறையா?  கேள்விகள் எழக் கூடும். இவர் எழுதி இருப்பது சரியே! முறையே! கரணியங்கள் பல :

1. ஒரே வரியில் இத்தனை ‘ஓர்’ வரவில்லை.  ஒவ்வொரு  வரியிலும் ஒரே ஒருமுறை மட்டுமே ‘ஓர்’ இடம்பெற்றுள்ளது. எனவே இது மிகை ஆகாது. (not superflouos and hence not redundant and so need not be deleted).

2. உயிர்  எழுத்தாகிய ‘ஆ’காரத்துக்கு  முனனால் முறையாக வரவேண்டிய ‘ஓர்’ வந்துள்ளது.

3.  கருத்தை வலியுறுத்த இப்படி எழுதுவது    ஓர் உத்தி.

4 இத்தனை இயல்களுள்  ஒன்றில்  கூடத் தமிழில் ஓர் ஆக்கம் வரவில்லையே என்ற ஏக்கம் நன்கு வெளிப்படுகிறது.

இந்தப் பகுதியில் நாம் பார்த்தவற்றைச்  சுருக்கிச் சொன்னால், ‘ஒரு’, ‘ஓர்’ பற்றிய இலக்கண விதிகள் ஏதும் இல்லை என்றாலும்  எழுதா  விதியாக உயர்மெய் எழுத்துக்கு முன் ‘ஒரு’ , உயிர் எழுத்துக்கு முன் ‘ஓர்’ வருதலே முறை. இந்த முறைமை தமிழ் முறைமை. இதன் பயன்பாடு வேறு, இது போலவே வரும்  ஆங்கில முறைமையின் பயன்பாடு வேறு.

எப்படி என்பதை அடுத்த பகுதியில் காண்போம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *