இன்னம்பூராருடன் ஒரு இ-நேர்காணல்(செல்வனின் கேள்விகளுடனான மறுபதிப்பு)
இன்னம்பூரானின் இயற்பெயர், சௌந்தரராஜன் ஸ்ரீனிவாஸா. இவர், இந்தியத் தணிக்கைத் துறையின் துணைத் தலைவராக, இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். எனவே, இன்னம்பூரான் என்ற புனைபெயருடன் இணையத்தில் எழுதி வருகிறார். தமிழின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல அரிய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளார். நவீன உத்திகள் மூலம் தமிழுலகத்திற்குத் தொண்டு செய்வதில், முனைந்துள்ளார்.
அவருடைய அனுபவங்களில் சில: ஆசிய தணிக்கைத் துறை இதழ் என்ற உலகளாவிய இதழின் ஆசிரியராகவும், இந்திய தணிக்கைத் துறையின் உலகளாவிய பயிற்சி மன்றத்தின் தலைவராகவும், அகில இந்திய ஐ.ஏ.எஸ். வகையறா உயர் அதிகாரிகளை நேர்காணல் கண்டு தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினராகவும், பணி புரிந்தவர். அரசு சார்ந்த ஸ்தாபனங்களுக்கு ஆலோசகராகவும்,விரிவுரையாளராகவும் பணி புரிந்தவர்.இங்கிலாந்தில்,ஐந்து வருடங்களுக்கு மேலாக, மக்கள் ஆலோசனை மையத்தில், ஆலோசகராக, தன்னார்வத் தொண்டு செய்தவர்.
பொருளியலிலும் (சென்னை), மக்கள் ஆலோசனை துறையிலும் (ஸ்டாஃபோர்ட்ஷையர்: இங்கிலாந்து)முதுகலைப் பட்டங்கள் பெற்றவர்.இந்தியாவிலும்/இங்கிலாந்திலும்/அமெரிக்காவிலும் வசிப்பவர்.எங்கிருந்தாலும்,தமிழ் இணையத்தில் ஆர்வத்துடன் இயங்குபவர்.
அன்னாரிடம் மின்னஞ்சல் மூலம் வல்லமை ஆசிரியரால் நடத்தப்பட்ட ஓர் சிறிய நேர்காணலின் சில துளிகள் உங்கள் பார்வைக்காக.
ஆசிரியர்: குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் பெற்றோர் என்ன செய்ய இயலும்?.. அவர்களின் பங்களிப்பு எவ்விதம் அமையலாம் என்பதைப் பற்றி தங்கள் ஆலோசனை என்ன?
இன்னம்பூரான்: கல்வியின் துவக்கம் தொட்டிலில், தாலாட்டுப் பாட்டில். சிவாஜி மன்னருக்கு அன்னை தான் எழுத்தறிவித்தத் தெய்வம். தந்தையின் ஆர்வம் அறிவைக் கூட்டும் என்பது கண்கூடு. சிறார்களின் கல்வியை மேற்பார்க்கும் பெற்றோர்களிடம், பள்ளி நிர்வாகமும், ஆசிரியர்களும் ஜாக்கிரதையாக இருப்பார்கள். படிப்பறிவு அதிகம் இல்லாத பெற்றோர்கள் பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் மூலமாக பயன் பெறலாம். அந்தச் சங்கங்கள் மாணவர்களின் பொது அறிவைப் பலப்படுத்துவதிலும், திட்டமிட்டு பள்ளிக்கு உறுதுணையாக இருப்பதிலும், முனைந்து செயல்படலாம். புரட்சி ஒன்று தேவை, இயலும். அடுத்த சுற்றில் அதைப் பார்க்கலாமா?
ஆசிரியர்: டாக்டரிடம் பேசுவது எப்படி?
இன்னம்பூரான்: ஒரு ஜோக். நிஜமாக நடந்தது.. போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு முழங்காலில் சிராய்த்து விட்டது. கிராம ஆஸ்பத்திரி டாக்டரிடம் டிங்க்சர் மருந்து தடவச் சொன்னார். எரிச்சல் தாங்காமல் அவர் முனக, டாக்டர், ‘இதற்கு இது தடவக் கூடாது; நீங்கள் சொன்னதால் தடவினேன்!’ என்றார். டாக்டர்கள் நோயாளியின் ஆலோசனையை விரும்பதில்லை. இது முதல் பாயிண்ட். மற்ற பாயிண்ட்கள்: (2) டாக்டர்கள் நாம் சொல்வதைக் கேட்டு மருத்துவம் அளிக்கிறார்கள்; மிகைப் படுத்தவும் கூடாது; குறைத்தும் சொல்லலாகாது; மறைத்தால், நமக்குத் தான் நஷ்டம். (3) குறிப்புக்கள் எழுதி வைத்துக் கொள்வது நலம். (4) அநேக டாக்டர்கள் பிகு செய்து கொள்வார்கள். நான் இயன்றவரை அவர்களை தவிர்த்து வருகிறேன். (5) இங்கும் ஒரு சின்ன புரட்சி உதவும். மருத்துவம் நாடுவோர் கேள்வி கேட்க முடிய வேண்டும். (6) மருத்துவ உலகில் பணப்பேய் உலவுகிறாள். முன் சாக்கிரதை உதவலாம்.
ஆசிரியர்: ஆங்கிலம் படித்துத்தான் ஆக வேண்டுமா?
இன்னம்பூரான்: இன்றைய உலகில் ஸ்பானிஷ் கூட படிப்பது நலமே. தமிழ் மொழிப் புலவர்களில் பலர் பல மொழிகளில் ஆற்றலும், திறனும் படைத்தவர்கள் தான். ‘எம்மொழிச் சொற்களும் நல்வரவே’ என்று தமிழிலிருந்து ‘மிளகு தண்ணி ரசத்தை’நூறு வருடங்களுக்கு முன் இரவல் வாங்கிய ஆங்கிலம், உலக மொழி, உலகத்தை நடத்தும் மொழி, விஞ்ஞானத்தின் மொழி, விமானம், கப்பல் போன்ற அகில உலக போக்குவரத்து சேவைகளின் அதிகார பூர்வமான நடை மொழி. அறிவுக் களஞ்சியங்களில் பல, ஆங்கிலத்தில் இருக்கின்றன. எனவே, ஆங்கிலம் படிப்பது விவேகம்.
நன்று இன்னம்பூராரே.. உங்களிடம் உரையாடியதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
வாசகர்களே.. திரு. இன்னம்பூரான் அவர்களிடம் தங்களது கேள்விகளை எழுப்பலாம். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி vallamaieditor@gmail.com. தக்க கேள்விகளுக்கு பதிலளிக்க இன்னம்பூரார் தயாராக உள்ளார்.
இந்த இடுகையை வாசித்ததும் திரு. செல்வன் அவர்கள் வினாக்களை அனுப்பியிருந்தார்.
இனி திரு. செல்வனின் கேள்விகளும் இன்னம்பூராரின் பதில்களும்.
பொது:
திரு.செல்வன் சிந்தித்து, சிந்தித்துச் சொல்ல வேண்டிய வினாக்களை எழுப்பியிருக்கிறார்;
முழுமையான பதில் எழுத, புத்தகங்களே எழுத வேண்டும். எழுதப்பட்டுள்ளன. என் கருத்துக்களை விட, வரலாற்று நோக்கும், வாழ்வியல் நடைமுறையும், சமுதாய விழிப்புணர்வும் முக்கியம் என்ற வகையில் விடைகள், சுருக்கமாக, அளிக்கப்படுகின்றன. வரிசையை மாற்றி அமைப்பதும் உகந்த வழி எனக்கு.
செல்வன்: இந்தியாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
இன்னம்பூரான்: இந்தியாவின் எதிர்காலம் மக்களின் விழிப்புணர்ச்சியைப் பொறுத்து அமையும். இன்று அதர்மம் மிகுந்த நாடு, இந்தியா. இருந்தும், நாட்டின் செல்வ நிலைக்குக் குறைவிருக்காது, அதர்மம் நீடித்தாலும். மக்களின் வறுமை கொடுமையாக இருப்பதால், அதர்மம் அவர்களை மேலும் துன்புறுத்தும். ஒரு புரட்சி எழும். இன்னல்கள் பலவற்றை கடந்த பின் தான், அந்த புரட்சி தணியும். அதனுடைய விலை அதிகம். நாட்டின் செல்வ நிலை குலைந்து போகும். எனவே, புரட்சி வருமுன் ஒரு சீர்திருத்தக் காலகட்டம் வந்தால் நல்லது. விழிப்புணர்ச்சியும், அதன் பயனாக அடிப்படை சீர்திருத்தங்களும் வரும் என்று நம்ப விழைகிறேன். ஐக்கிய அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டீஷ் சமுதாயங்கள் நமக்கு படிப்பினைகள் பல வைத்துள்ளன.
செல்வன்: இனி நிஜமாகவே கம்யூனிசம் உலகை என்றாவது ஆளும் என எதிர்பார்க்கிறீர்களா?
இன்னம்பூரான்: கம்யூனிசம் ஒரு ரிஷிகர்ப்பமாகவும், அசுரப்பிறவியாகவும், கூளி ஆளுமையாகவும் அமைந்தது ஒரு துரதிர்ஷ்டம். இனி அது உலகை ஆளாது; ஆளக்கூடாது. கம்யூனிசத்தின் விதையை தர்மசாஸ்திரங்களில் கண்டெடுக்க முடியும் என்றாலும், நல்லதொரு கோட்பாடாக, அதை அமைத்தவர், கார்ல் மார்க்ஸ். எந்தவொரு சமுதாய அமைப்பிலும், கம்யூனிசம் தந்த அளவு தன்னலமற்றவர்களை காண இயலாது. அந்த நன்னெறி கருவிலே இருக்கும் வரை மட்டுமே என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. கருவை கலைத்தது முதலாளித்துவமா? என்ற வினாவும் எழுகிறது.
செல்வன்: 1989ல் கம்யூனிசம் கிழக்கு ஐரோப்பாவில் வீழக் காரணம் என்ன?
இன்னம்பூரான்: 1989-ல் கம்யூனிசம் கிழக்கு ஐரோப்பாவில் வீழக் காரணம், அது முதலாளித்துவத்தின் பொல்லாத நடைமுறைகளை மட்டும் இரவல் வாங்கியதும், 1917-லியே கொடுங்கோலாட்சியை தொடங்கிய சோவியட் ரஷ்யாவின் அநாகரீக ஆளுமையும், மக்களின் விழிப்புணர்ச்சியும் எனலாம், ஒரு சுருக்கமான பதிலில். ஆனால், கிழக்கு ஜெர்மனி, யூகோஸ்லாவியா, போலந்து, செக்கோஸ்லோவக்கியா, உக்ரேன், ஜார்ஜியா போன்ற தேசாபிமானங்கள் (நேஷானிலிட்டி), இனப்பற்றுக்கள் (எத்னிசிடி) தனித்துவம் படைத்தவை. ஆங்காங்கே கூலி ஆளுமை செய்த முதலாளித்துவத்திற்கும் இதில் பங்கு உண்டு.
இன்னம்பூராரின் பின்குறிப்பு: சிந்தனையை தூண்டும் இந்த வினாக்களுக்கு நன்றி. விடைகளின் விஸ்தீரணம் போறாது. ஏனெனில், ஒவ்வொன்றுக்கும், கிளை வினாக்கள் கிளை விட்டால், மற்றவர்களின் வினா எழுப்பும் ஆர்வம் குறையலாம்.