இனிக்கும் பொய்கள்!
பாகம்பிரியாள்
அன்பே கோபமாயினும் சரி,
குழைந்து பேசினாலும் சரி,
நினைவுகளைப் பார்த்து வீசு.
கசங்கிக் கிடக்கும் கைக்குட்டைப் போல்
குப்பலாய்ச் சில கொட்டிக் கிடக்கும்.
நாய்க்குட்டியின் மடங்கிய காது போல்
சில நினைவுகள் கவிழ்ந்து கிடக்கும்.
இன்னும் சிலவோ மீன் போல்
நீந்தி நீந்தி நெளிந்து சென்று விடும்.
கற்கண்டு கரைவது போல் ஓரிரண்டு
கண் பட்டதும் மனத்தில் கரைந்து விடும்.
ஆனாலும் எனக்கு பயம் தான்.
கோபமும் குழைதலும் சமனான பின்
கொட்டிய நினைவுகள் ஒன்று விடாமல்
கொண்டு வா என்னும் போது தான்!
கைக்கு அகப்பட்டதைக் கொண்டு வரலாம்.
கரைந்ததையும் நீந்தியதையும் என்ன செய்ய?