கேரளத்தின் ’குட் பை’ நாயகன்

குமரி சு. நீலகண்டன்

sreekandan_nairகேரளத்தில் சமீபத்தில் ஒரு பரபரப்பான செய்தி…. கேரளத்தின் மிகப் பெரிய தொலைக்காட்சி அலைவரிசையான ஏசியாநெட்டின் முதுநிலை துணைத் தலைவர் ஸ்ரீகண்டன் நாயர், ஏசியாநெட் தொலைக்காட்சியை விட்டு ராஜினாமா செய்ததுதான்.

சாதாரணமாக ஒரு தொலைக்காட்சியின் நிர்வாகத்தின் மிக முக்கியப் பொறுப்பில் இருப்பவர், அந்த பதவியை ராஜினாமா செய்வதென்பது மக்களுக்கு ஒரு பெரிய பரபரப்புச் செய்தி அல்ல. ஆனால் கேரள மக்களுக்கு ஸ்ரீகண்டன் நாயரின் ராஜினாமா அதிர்ச்சி அளித்ததற்குக் காரணம், அவர் கேரள மக்களிடையே மக்கள் நாயகனாக விளங்கினார்.
இன்னும் அந்த அலைவரிசையின் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்துகொண்டே ”நம்மள் தம்மில்” என்ற மக்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏஷியாநெட் அலைவரிசை தொடங்கியதிலிருந்தே நடத்தி வந்தவர். அந்த நிகழ்ச்சி, கேரள மக்களிடையே மிகவும் பிரபலமானது. கேரள அமைச்சர் சகாக்களிலிருந்து திரைப்பட பிரபலங்கள் உட்பட அனைத்துப் பிரபல பிரமுகர்களையும் பங்கேற்க வைத்து, சர்ச்சைக்குரிய விஷயங்களை மிகத் துல்லியமாக விவாதித்து, மக்களுக்குக் கொண்டு போகும் நிகழ்ச்சி, அது. தமிழில் விஜய் டி.வி.யின் ’நீயா நானா’ நிகழ்ச்சி கூட இந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தழுவி வந்ததுதான்.

sreekandan_nairஅவர் மீண்டும் ’நம்மள் தம்மில்’ நிகழ்ச்சியை நடத்தாவிடில் அவர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று அவரின் ரசிகர்கள் மிரட்டுகிறார்கள். வீடியோ திருட்டு, மற்ற மொழி பேசுபவர்களை மதித்தல், கேரள சினிமா ஒன்றிய பிரச்சினை, கள்ளச் சாராயம், இரட்டைக் குழந்தைகள், ஜோதிடம், மரணத்திற்குப் பிந்தைய வாழ்வு, மருத்துவம், இசை, பெண்ணடிமை, வன்முறை, தீவிரவாதம், வாக்களித்தல்… என அவருடைய விவாதத் தலைப்புகள் ஏராளம். அந்த விவாதத்தின் கருத்துகளை நகைச்சுவை இழையோடத் துல்லியமாக விவாதித்து விடையளிப்பதுதான் அந்த நிகழ்ச்சியின் வெற்றியே. உலகிலுள்ள எல்லாக் கேரள மக்களையும் கவர்ந்த அந்த நிகழ்ச்சியினைத் தற்போது கேரள நகைச்சுவை நடிகர் ஜெகதீஷ் நடத்துகிறார்.

இன்னும் ரியாலிட்டி ஷோக்களைத் தென் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்திய பெருமை, ஸ்ரீகண்டன் நாயரையே சாரும். பல ஆண்டுகளுக்கு முன்பே முதன் முதலாக ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக ஏசியாநெட் அலைவரிசையில் அறிமுகப்படுத்தி, அது ஒளிபரப்பாகும் நேரத்தில் கேரள மக்களை முடக்கிப் போட்ட பெருமை, அவருக்குண்டு. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்குப் பின்னரே அதன் தழுவலாக மற்ற மொழிகளில் ரியாலிட்டி ஷோக்கள் வரத் தொடங்கின. ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பாகப் பாடிய பார்வையற்ற ஒருவருக்குப் பார்வை பெற்றுத் தந்த பெருமையும் இவரது நிகழ்ச்சிக்கு உண்டு. ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சியின் 25ஆவது, 50ஆவது சிறப்பு நிகழ்ச்சிகளைப் புற்று நோய் மருத்துவமனையில் எளிமையாக நடத்தி வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியின் எதார்த்தத்தை மக்களுக்கு உணர்த்திய பெருமை இவருக்கு உண்டு.

கலையையும் செய்திகளையும் முக்கிய நோக்கில் கொண்டு, மக்கள் விரும்பும் விதமாக, மிகத் தரமாக நிகழ்ச்சிகளைப் புதுமையான முறையில் வடிவமைத்து, ஏஷியாநெட் அலைவரிசையைக் கேரள மக்கள் விரும்பும் முதல் தொலைக்காட்சி அலைவரிசையாகக் கொண்டு வந்த பெருமைக்கு உரியவர், அவர். ஒரு மக்கள் ஊடகம் எவ்வாறு இருக்க வேண்டுமென்று ஒரு மாதிரி ஊடகமாக ஏசியா நெட்டை மாற்றிய பெருமை அவருக்குண்டு. கேரளத்தின் பிரபலமான இதழான மலையாள மனோரமா, தனது புதிய தொலைக்காட்சி அலைவரிசையின் தலைமைப் பொறுப்பிற்கு அழைக்க, அவர் அதை மறுத்து, நிகழ்ச்சி ஆலோசகராகப் பொறுப்பேற்கச் சம்மதித்துள்ளார். தற்போது அவர் தனது சொந்த நிறுவனமான மேஜிக் மீடியா மூலம் நிகழ்ச்சிகள் வழங்க முடிவு செய்துள்ளார்.

srikandan_mohanlalகேரளத்தில் ’குட் பை’ என்ற வார்த்தையைச் சொன்னாலே எல்லோருக்கும் நினைவில் வருபவர், ஸ்ரீகண்டன் நாயர் என்ற அந்த ஒளிபரப்புக் கலைஞன்தான். ஆண்டுகள் பலவாய் அந்த சானலில் ஒலிபரப்பான ’நம்மள் தம்மில்’ நிகழ்ச்சியை அவர் தனக்கே உரிய ஸ்டைலில் ’குட் பை’ என்று சொல்லி முடிப்பார். அப்படி அந்த வார்த்தை அவரின் அடையாளமாக ஆகிவிட்டது. இதுவரை அவரின் ’குட் பை’யைக் கேட்டு அடுத்த வாரத்திற்காக காத்திருந்தவர்கள் தற்போது ஏசியாநெட் சானலுக்கே அவர் ’குட் பை’ சொன்ன போது அதிர்ச்சியில் வருத்தப்பட்டுப் போயிருக்கிறார்கள். தரமான நிகழ்ச்சியை உருவாக்குவதன் மூலம் மக்களின் நாயகனாக விளங்க முடியும் என்பதற்கு ஸ்ரீகண்டன் நாயர் ஓர் உன்னத உதாரணம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.