பொது

சென்னையில் வீணை திருவிழா

சென்னை, செப்டம்பர் 15, 2010

veena

நவராத்திரியை முன்னிட்டு சென்னையில் 2010 செப்டம்பர் 17ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு வீணை திருவிழா நடைபெறவுள்ளது. இந்த நவராத்திரி வீணை திருவிழாவை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தொடக்கி வைக்கவுள்ளார். இவ்விழாவினை இந்திரா காந்தி தேசிய கலை மையமும் வீணை அறக்கட்டளையும் இணைந்து நடத்துகின்றன.

மிகப் பெரும் பழைமை வாய்ந்த வீணை இசை நிகழ்ச்சி, 2010 நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் இசைக்கப்பட உள்ளது. விஷ்வ வீணை நவராத்திரி திருவிழா என அழைக்கப்படும் இந்த இசை நிகழ்ச்சி, 2010 செப். 17்ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் நடைபெறவுள்ளது. மனித நேயத்தை உலக மக்களிடையே உருவாக்கும் சக்தி, வீணை இசைக்கு உள்ளது. எனவே, மனித நேயத்தை உருவாக்க உலகம் முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான இசை மேதைகள் முதல் மாணவர்கள் வரை இதில் பங்கேற்க உள்ளனர்.

இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் நிகழ்ச்சிகளில் வீணை திருவிழாவும் ஒன்றாகும். வீணையின் பெருமையையும் இதன் நாதத்தையும் உலக மக்களுக்குத் தெரிவிக்கவும் இதன் பெருமையை எடுத்துக் காட்டவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த மாபெரும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வீணை இசையில் புகழ் பெற்றவர்களும் மாணவர்களும் கலந்துகொள்ளும் நவராத்திரி வீணை திருவிழா, நிறைவு விழாவில் 24 மணி நேரமும் வீணையின் நாதம் ஒலித்துக்கொண்டே இருக்கும். ஆஸ்திரேலியாவில் தொடங்கி ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ போர்ட்லேண்ட் ஆகிய நகரங்களில் தொடர் நிகழ்ச்சியாக நடைபெறும்.

வீணை இசைக் கருவி மிகவும் பழமையான இசைக் கருவியாகும். வேத காலத்திலேயே வீணை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இந்தியாவின் இதிகாசங்களான ராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் வீணை பற்றிய குறிப்புகள் உள்ளன. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரம், பல்வேறு புத்தமத நூல்கள உள்பட பல்வேறு நூல்களில் வீணை பற்றியும் அதன் முக்கியத்துவமும் தெரிவிக்கப்படுகின்றன.

பாரம்பரியப் பெருமையும் புராதனச் சிறப்பும் கொண்ட வீணையின் நாதம், இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கும் கேட்கிறது. இசையின் ஒலி வடிவங்களைத் தொகுத்தளிக்கும் ஒலி அறிவியல் மற்றும் சங்கீதம் மூலமாகத் தேசிய நல்லிணக்கத்தையும் மக்கள் மத்தியில் அமைதியையும் ஏற்படுத்தும் சமாதானத் தத்துவம் என்ற இரண்டையும் உள்ளடக்கிய வீணையைப் போற்றும் வகையில் வீணை நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

சென்னை மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி தலைமையில் சென்னையில் நடக்கும் விழாவில் மத்திய அரசு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுவார்.

இங்கு விழா நடக்கும் அதே நேரத்தில் இமாசலப் பிரதேச மாநிலம் சோனாபானியில் உஸ்தூத் பாகவுதீன் தாகர், ருத்ர வீணை இசை வழங்குகிறார். ஐதராபாத், கோவை, திருவனந்தபுரம், மெல்பர்ன் (ஆஸ்திரேலியா), டோக்கியோ (ஜப்பான்), லண்டன் (இங்கிலாந்து) மற்றும் அமெரிக்க நகரங்கள் பலவற்றில் வீணை நவராத்திரி விழா நடைபெறும்.

படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க