தேசிய விருதுகளை அள்ளிய ’பசங்க’
திரைப்படத் துறைக்கான 57ஆவது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருதைப் ’பசங்க’ படம் பெறுகிறது. இது, ரூ.1 இலட்சத்தைப் பரிசாகப் பெறுகிறது. இயக்குநர் எம்.சசிகுமார், இதனைத் தயாரித்துள்ளார்.
’பசங்க’ படத்தை இயக்கிய பாண்டிராஜ், சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளார். இவர், ரூ.50 ஆயிரம் பரிசினைப் பெறுகிறார்.
’பசங்க’ படத்தில் நடித்த ஸ்ரீராம், கிஷோர் ஆகியோருக்குச் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருதுக்குத் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களும் ரூ.50 ஆயிரம் பரிசினைப் பெறுகிறார்கள்.
மம்மூட்டி நடித்த மலையாள படமான ’கேரளவர்மன் பழசிராஜா’ படத்துக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு சிறந்த இசையமைளப்பாருக்கான விருது அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர, பா எனும் இந்தி திரைப்படத்தில் நடித்த அமிதாபுக்கு, சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான விருதினை, அமீர் கான் தயாரிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் படம் பெறுகிறது. சியாம் பெனாகல் இயக்கத்தில் வெளியான வெல் டன் அபா படம், சமூக அக்கறையைப் பிரதிபலிக்கும் திரைப்படமாகத் தேர்வாகியுள்ளது. மேலும் பல படங்களுக்கும் கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பெற்றுள்ளன.
விருது பெறும் அனைவருக்கும் நம் வாழ்த்துகள்.