வந்துவிட்டது புரட்டாசி மாதம்

0

விசாலம்

Vishalam

வந்துவிட்டது புரட்டாசி மாதம். எங்கும் கோவிந்தா என்ற ஒலி முழங்கும். அதுவும் இந்த மாதத்தின் சனிக்கிழமை, மிகவும் விசேஷம். நான் திருப்பதி போனபோது, அந்த கோவிந்தாவின் தரிசனம் சரியாகக் கிடைக்கவில்லை.

அப்போது அவரிடம் மனதுக்குள் பாடிய பாட்டு இது

உன் கமலக் கண்களைப்
பார்க்க வந்த எனக்குtirupathy
பெரிய நாமத்தைப் போட்டு
ஏன் மறைத்திருக்கிறாய்?
ஆவலுடன் தரிசிக்க வந்த என்னை
“சருகண்டி, சருகண்டி” என்று
ஏன் தள்ள வைக்கிறாய்?
உன்னையே பார்க்க
ஒரு வழி தேடிவிட்டேன்
உன் அருகில் எரியும் குத்துவிளக்காய்
என்னைப் படைக்குமப்பா
உன்னையே கண்டு களிக்கும்
அருள் கொடுத்தருளப்பா……….

திருப்பதியில் ’ஏழுகொண்டலவாடா கோவிந்தா வெங்கட்ரமணா’ என்று பலவிதமான பக்தி ஒலி கிளம்ப, நம்முள் ஒரு மினசாரம் சர்ரென்று உடலுக்குள் புகுந்து நாமும் ’கோவிந்தா’ முழக்கத்தில் நம்மையுமறியாமல் சேர்ந்துகொள்கிறோம்.

உடல் சிலிர்க்கிறது. கண்களிலிருந்து கண்ணீர் தன்னையும் அறியாமல் வருகிறது. எல்லா இடங்களிலும் நவராத்திரியின் போது அம்பாளுக்கு விசேஷமாகப் பூஜை நடக்கும். ஆனால் திருப்பதியில் பெருமாளுக்குத்தான் பூஜை, திருவிழா. ஏனென்றால் தன் மனைவி மஹாலட்சுமியைத் தன் மார்பிலேயே வைத்துக்கொண்டிருப்பவர் அல்லவோ எம்பெருமான்.

ஸ்ரீனிவாசா, கோவிந்தா, ஸ்ரீ வெங்கடேசா,
கோவிந்தா, புராண்புருஷா கோவிந்தா……. என்ற பாட்டு நம்மை ஈர்க்கிறது.

பாலாஜியைக் குலதெய்வமாக வைத்திருக்கும் அனைவரும் இந்தப் புரட்டாசி சனிக்கிழமையன்று சமாரார்தனை என்று பெருமாளுக்கு மாவிளக்குப் போட்டு பூசை செய்வது வழக்கம்.

என் பெற்றோர்களுக்கு அருள்மிகு வெங்கடாசலபதியே குல தெய்வம் ஆனதால் அந்தச் சூழ்நிலையிலேயே நானும் வளர்க்கப்பட்டேன். ஆகையால் மிகுந்த ஈடுபாடு உண்டு. வெங்கடாசலபதியின் படத்தை வைத்து அலங்கரித்து, ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து, மாவிளக்கும் ஏற்றி, எள்ளு அன்னம் பிரசாதம் வைத்து, பின், கற்பூர ஆரத்தியுடன் பூஜை முடிவடையும்.

இங்கு ஒரு சின்ன சம்பவம், என்  நினைவுக்கு வருகிறது. என் பெரியப்பா சமாரார்தனையின் போது, சமைக்கும் அரிசியில் கொஞ்சம் உஞ்சுவிருத்தி அதாவது வெளி மனிதர்களிடம் பிச்சை ஏந்தி, அரிசியைக் கொண்டு வருவார்.

காலையில் குளித்துப் பின் வெளியே சென்று, தோளில் இருக்கும் அங்கவஸ்திரத்தில் அரிசியைச் சேகரித்துப்பின் வீட்டிற்கு வருவார். அகத்தில் இருக்கும் அரிசியையும் சேர்த்து, பிரசாதம் செய்ய வேண்டும். நாங்கள் முதல் நாளே இவர் வரப் போவதைச் சில குடித்தனக்காரர்களுக்கு அறிவித்து விடுவோம். அதனால் ஒரு பிரச்சினையும் இல்லாமல் அரிசி கிடைத்துவிடும். பின் வீட்டில் இருக்கும் பெண்மணிகள் அகத் தூய்மை,
புறத் தூய்மையுடன் பிரசாதம் செய்வார்கள். என் பெரியப்பா குளித்து, மஞ்சள் நனைத்த வேஷ்டியுடன்தான் யாசிக்கப் போவார். வீடே பக்தி,  தூய்மை, சுத்தம் என்று விளங்கும்.

ஒரு தடவை நடந்த சம்பவம், ஞாபகத்தில் வருகிறது.

எப்போதும் அரிசி கொடுப்பவர்கள் ஊருக்குப் போய் விட்டதாலும் என் பெரியப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததாலும் பிச்சை கேட்காமலே  சமைத்துவிட்டார்கள். பூஜை ஆரம்பித்து, கற்பூரம் காட்டும் நேரம் வந்தது. பூஜையைப் பார்க்க வந்த ஒருவர் பெரிதாக, “கோவிந்தா” என்று கத்தினார்.  திடீரென்று அவர் மேல் அருள் வந்துவிட்டது. “எங்கேப்பா என் பிச்சை அரிசி? அதில்லாமல் சமைத்து விட்டாயா?” என்று கேட்க எல்லோரும்   விக்கித்து நின்றோம்.

அந்த மனிதரோ, புதியவர். அவருக்கு வீட்டில் நடந்த விஷயம் ஒன்றும் தெரியாது. அப்படி இருக்க, எப்படி அவர் இதைச் சொல்லுகிறார்? எந்தச் சக்தி அவரை இப்படிச் சொல்ல வைத்தது? அந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. எத்தனை புரட்டாசி சனிக்கிழமை வந்தாலும் என் கண்முன் இந்தச் சம்பவம் வந்துவிடும். எல்லோரும் “கோவிந்தா, கோவிந்தா” என்று சொல்லியபடியே மன்னிப்பும் கேட்டுக்கொண்டோம். பூஜை மேலே தொடர்ந்தது.

மறு சனிக்கிழமை திரும்பவும் இந்தப் பூஜை ஒன்றுவிடாமல் பிச்சை வாங்கி நடைபெற்றது.

அந்த இறைச் சக்தியை நான் பல தடவைகள் உணருகின்றேன்.

ஒம் நமோ நாராயணாய!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *