அமெரிக்காவில் தேர்தல்கள்
நாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்கா இரண்டு நாடுகளில் யுத்தம் புரிந்துகொண்டிருந்தது. இப்போது ஈராக்கில் 50,000 துருப்புகளை மட்டும் விட்டுவிட்டு மீதித் துருப்புகளைத் தாய்நாட்டிற்கு அழைத்துக்கொண்டிருக்கிறது. ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு வரும் தாலிபானோடு இன்னும் மும்முரமாகச் சண்டை போட்டுக்கொண்டிருக்கிறது. இதையும் சீக்கிரமே முடித்து அமெரிக்கத் துருப்புகளை தாய்நாட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்துவிடுவோம் என்று ஒபாமா வாக்குறுதி அளித்தாலும் இரண்டு யுத்தங்களினால் ஏற்பட்ட பொருள் நஷ்டத்தாலும் மனித இழப்பாலும் அமெரிக்க மக்கள் மிகவும் துவண்டு போயிருக்கிறார்கள். இதற்கு மேல் உள்நாட்டில் பொருளாதாரத் தேக்கம் வேறு. இவையெல்லாம் மக்களுக்கு மத்திய அரசின் மேல் பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்திருகிறது.
ஒபாமாவின் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர்கள் கூட இப்போது அவர் மீது அதிருப்தியுற்றிருக்கிறார்கள். அவர் வெகு பாடுபட்டுக் கொண்டுவந்த மருத்துவச் சீர்திருத்தச் சட்டம் (Health Care Reformation Bill) கூட பலருக்குக் கோபத்தை உண்டாக்கியிருக்கிறது. மருத்துவ இன்சூரன்ஸ் இல்லாத சுமார் முப்பது லட்சம் பேர்களுக்கு இன்சூரன்ஸ் கொடுக்க முயன்றதன் விளைவாகச் சிலரின் பிரீமியம் கூடியிருக்கிறது. சிலருக்குக் கூடப் போகிறது. அந்தச் சட்டம் அமலுக்கு வந்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் அந்தச் சட்டத்தின் எல்லா அம்சங்களும் நடைமுறைக்கு வரப் போகின்றன. இதனால் சிலரின் மருத்துவ இன்சூரன்ஸில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.
ஒபாமா கொண்டுவந்த பொருளாதாரச் சீரமைப்புச் சட்டமும் (Financial Regulatory Bill) பெரிய வணிக நிறுவனங்களை அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கினறன. இவர்கள் வாடிக்கையாளர்களை எப்படியும் ஏமாற்றலாம், எந்த வட்டி விகிதப்படியும் கொடுத்த கடனைத் திரும்பப் பெறலாம் என்பது போன்ற சட்டங்களைச் சீர்திருத்திப் புதிதாகக் கொண்டுவந்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் எப்படியாவது இந்தச் சட்டங்களை வாபஸ் வாங்குவதற்கோ அல்லது திருத்தி அமைப்பதற்கோ ஒரு வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார்கள்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் எதிர்பார்த்த அளவு முன்னேறவில்லை. வேலையில்லாதோர் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. இதனால் சாதாரண மக்களுக்கும் ஒபாமாவின் மேல் மிகுந்த அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது.
மக்களின் இந்த அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்டு குடியரசுக் கட்சி இந்த நவம்பரில் நடக்கவிருக்கும் இடைத் தேர்தலில் செனட்டிலும் மக்களவையிலும் பெரும்பான்மை கிடைக்கப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் எனப்படும் அமெரிக்க பார்லிமெண்டில் மேலவை (Senate), கீழவை (House of Representatives) என்று இரண்டு அவைகள் உள்ளன. ஒவ்வொரு மாநிலமும் இரண்டு அங்கத்தினர்களைச் செனட்டிற்கு அனுப்புகிறது. மக்கள் பிரதிநிதிகளின் அவையான கீழவைக்கு அந்தந்த மாநிலங்களின் மக்கள் எண்ணிக்கையைப் பொறுத்து அங்கத்தினர்கள் தேர்தெடுக்கப்படுவார்கள். செனட்டிற்கு மக்களவையை விட அதிக அதிகாரம் இருக்கிறது என்று சொல்லலாம். ஜனாதிபதி, மந்திரி பதவிக்கோ அல்லது நீதித் துறையில் நீதிபதிகளை நியமிக்கும்போதோ செனட்டின் அனுமதி வேண்டும். மக்களவையின் அனுமதி தேவை இல்லை. ஆனால் மக்களவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவர்தான் ஜனாதிபதி இறந்துவிட்டாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தால் பதவியை இழந்துவிட்டாலோ உதவி ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் ஆகியவர்களுக்குப் பிறகு ஜனாதிபதி பதவியைப் பெறும் தகுதி பெறுகிறார். இப்போது செனட்டிலும் மக்களவையிலும் ஜனநாயகக் கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கிறது.
ஒரு செனட் அங்கத்தினர் ஆறு ஆண்டுகளுக்குத் தன் பதவியை வகிக்கலாம். ஆறு ஆண்டுகள் முடிந்த பிறகு மறுபடி தேர்தலில் நின்று ஜெயித்து மறுபடி செனட்டர் ஆக வேண்டும். மக்களவைப் பிரதிநிதி இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே தன் பதவியை வகிக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டும். அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஜனாதிபதி தேர்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தால் ஜனாதிபதி தேர்தல் நடக்கும். தங்கள் பதவிக் காலம் முடிந்த செனட் அங்கத்தினர்களும் அவர்களை எதிர்த்து அந்த இடத்திற்குப் போட்டியிடுபவர்களும் தேர்தலில் கலந்துகொள்வார்கள். தங்கள் பதவிக் காலம் முடிந்துவிட்ட மக்களவைப் பிரதிநிதிகளும் அவர்களை எதிர்த்துப் போட்டியிடுபவர்களும் தேர்தலில் கலந்துகொள்வார்கள். ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கும் இடையே நடக்கும் இந்தத் தேர்தல்கள் நவம்பர் மாதம் முதல் செவ்வாய்க்கிழமை நடைபெறும். இந்தியாவில் போல் அங்கத்தினர் ஒருவர் இறந்துவிட்டால் அதன் பிறகு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்துவதில்லை. அங்கத்தினர் யாராவது இறந்துவிட்டாலோ அல்லது ஏதாவது ஒரு காரணத்திற்காகப் பதவியை இழந்தாலோ அல்லது விட்டுவிட்டாலோ அந்த மாநில ஆளுநர் அவருடைய இடத்திற்கு இன்னொருவரை நியமிப்பார். அடுத்த முறை தேர்தல் வரும்வரை அவர் அந்தப் பதவியில் இருப்பார். பின் தேர்தலில் நின்று ஜெயிக்க வேண்டும் அல்லது பதவியை இழக்க வேண்டும்.
வரும் நவம்பர் இரண்டாம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களில் சிலர் மிகத் தீவிர வலதுசாரிக் கொள்கைகளைப் பின்பற்றி வரும் டீ பார்ட்டி (Tea Party) அங்கத்தினர்களை ஆதரிக்கிறார்கள். அவர்களால் ஆதரிக்கப்பட்டவர்கள் பலர் இப்போது முதல்நிலைத் தேர்தலில் (primaries) வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய எந்தப் பதவிக்கும் (elected office) வேட்பாளர்கள் முதலில் மக்களிடையே பெரும்பான்மை வாக்குகள் பெற வேண்டும். அதற்கும் தேர்தல் நடைபெறும். இவற்றைத்தான் முதல்நிலைத் தேர்தல்கள் என்கிறார்கள். 2010ஆம் ஆண்டை இடைத்தேர்தல் ஆண்டு என்று குறிப்பிடுகிறார்கள். அடுத்த தேர்தல் ஆண்டு 2012. அப்போது செனட், மக்களவைகளோடு ஜனாதிபதித் தேர்தலும் நடைபெறும்.
முதல்நிலைத் தேர்தலில் மிகத் தீவிர வலதுசாரிக் கொள்கைகளை ஆதரிக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டீ பார்ட்டியாளர்கள் பலர் வெற்றி பெற்றிருப்பது பலருக்கு அதிர்ச்சியைத் தந்தாலும் இன்னும் ஆறே வாரங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி அங்கத்தினர்கள் – இவர்கள் பொதுவாக மிதவாதக் கொள்கையை உடையவர்கள் – இவர்களை எளிதாக வென்றுவிடலாம் என்று ஜனநாயகக் கட்சி நம்புகிறது. டீ பார்ட்டியாளர்கள் ஜனாதிபதி ஒபாமாவை ஒரு அமெரிக்கரே இல்லை என்றும் இவர் கென்யாவைச் சேர்ந்த ஒரு முஸ்லீம் என்றும் கூறிவருகிறார்கள். இவர்களை நம்புபவர்கள் மக்கள் மத்தியில் நிறையப் பேர் இல்லை என்றும் இவர்களை எளிதாக வென்றுவிடலாம் என்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் நினைக்கிறார்கள். மேலும் மிகத் தீவிர வலதுசாரிக் கொள்கைகளை ஆதரிக்கும் குடியரசுக் கட்சி அங்கத்தினர்களுக்கும் வலதுசாரிக் கொள்கைகளை ஆதரிக்கும் குடியரசுக் கட்சி அங்கத்தினர்களுக்கும் இடையே இப்போது பிளவு ஏற்பட்டிருப்பதால் குடியரசுக் கட்சி அங்கத்தினர்கள் ஜெயிக்கும் வாய்ப்பு அதிகம் இல்லை என்றும் இவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் இவர்கள் எதிர்பார்ப்பு பொய்த்துப் போய் செனட்டிலும் மக்களவையிலும் இவர்கள் பெரும்பான்மை பெற்றுவிட்டால் மருத்துவச் சீரமைப்புச் சட்டத்தையும் பொருளாதாரச் சீரமைப்புச் சட்டத்தையும் இவர்கள் திருத்தவோ, ரத்து செய்யவோ முயன்றாலும் ஜனாதிபதி தன்னுடைய தனி அதிகாரத்தைப் (veto power) பயன்படுத்தி அந்த முயற்சிகளை முறியடித்துவிடலாம் என்று சில அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், ஒபாமாவைச் செயலிழக்கச் செய்வதே குடியரசுக் கட்சியின் நோக்கம் என்பதை நினைக்கும்போது தேர்தல் முடிவுகளை ஒருவித பயத்தோடுதான் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை இருக்கும்போதே சாதாரண மக்களுக்குப் பயன் அளிக்கும் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒபாமா திணற வேண்டியிருக்கிறது. ஒருவேளை பெரும்பான்மை இழந்துவிட்டால் என்ன ஆகும் என்று நினைக்கவே மிகவும் பயமாக இருக்கிறது.
===========================
ஒபாமா படத்திற்கு நன்றி – விக்கிப்பீடியா