தமிழ்த்தேனீ

Tamil theneeமுப்பத்து முக்கோடி தேவர்களும் இமை மூடாமல் உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தனர்.  யாராலும் நிறுத்த முடியாத அளவுக்கு உறுதி பூண்ட அந்த உக்கிரமான தவம், கோரத் தவம், அகோரத் தவம், பிரபஞ்சமே  ஸ்தம்பித்துப் போகுமளவுக்கு, உக்கிரமான தவம், கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்த தவம், தவத்தின் உச்சகட்டம், இதுவரை யாருமே செய்யமுடியாத அளவுக்கு எல்லையைக் கடந்த தவம் எல்லோருடைய முயற்சியும் பலனற்றுப் போயின.

ஒரு நெடிய உருவம், உடல் வற்றிப் போய் இருந்தாலும் உள்ளத்தின் வலிமையினால், ஆடாமல் அசங்காமல் அப்படியே கல்லாய் உறைந்து நடத்தும் கடுந்தவம். சூறைக் காற்றும் பெருமழையும் இடியும் மின்னலும் எதாலும் கலைக்க முடியாத கொடுந்தவம். சடா முடியும் உடலெங்கும் புழுதியும் ஏகச் சிந்தையுமாக, இடைவிடாது இயற்றும் தவம்.

ஒவ்வொரு யுகத்திலும் காலம் மாறுகிறது. ஆயிரம் வருடங்கள் தவம் செய்தோரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். நூறு வருடங்கள் தவம் இயற்றியோரைப் பற்றிப் படித்திருக்கிறோம். கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கலியுகத்தில் மனப்பூர்வமாக ஒரு கணம் நினைத்தாலே அது ஆயிரம் வருடங்கள் தவம் செய்வதற்குச் சமானம் என்று வேதங்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட இந்தக் காலத்தில் இப்படி ஒரு தவத்தைக் கண்டதில்லை யாரும்… அப்படிப்பட்ட தவம்.

இதோ இன்னும் சில வினாடிகளில் முடியப் போகிறது. ஆயிற்று, இன்னும் சில வினாடிகள். அதன் பிறகு விளையப் போகும் விளைவு? ஆம், பல இடையூறுகளைக் கடந்து முன்னேறி, வெற்றியைக் காணப் போகும் தவத்தின் மேன்மை, தவத்தின் பலனை அடையும் வேளை கைகூடிவிட்டது.

இதோ பரம்பொருள் நேரே காட்சி தந்து வரமளிக்கப் போகிறது. அப்படி வரமளித்து விட்டால் அதன் விளைவு என்ன ஆகும்? நினைக்கவே  பயமாயிருக்கிறது!

அப்படிப்பட்ட மிக நுணுக்கமான வேளையில் தன்னுடைய தவத்தைக் கலைக்க யாரோ முற்படுவதை உணர்ந்து, இன்னும் தீவிரமாக மனத்தைக் கட்டுப்படுத்தித் தவத்தில் ஆழ்ந்தார் அந்தத் தவசீலர்.

ஆயினும் இடைவிடாமல் அவருடைய தவத்தை யாரோ கலைக்கின்றனர்.

பொறுமை, பொறுமை வெண்ணெய் திரளும் நேரத்தில் தாழியை உடைப்பது போல் ஆகக் கூடாது. எவ்வளவோ சக்தியுடன் தவம் செய்தும்  அவரைக் கோபப்படுத்தி, அவருடைய தவத்தைக் கலைத்து, அதன் விளைவாக அவர் பெற்ற சக்திகளையெல்லாம் வலுவிழக்கச் செய்தும், மீண்டும் தளராமல் பெரு முயற்சி செய்து, பிரும்ம ரிஷி பட்டம் வாங்கிய ராஜரிஷி விஸ்வாமித்ரரின் வாழ்க்கை ஒரு பாடமாக அமைய வேண்டும். நம் தவத்தைக் கலைக்க முயலுபவர்களின் முயற்சி தோற்கவேண்டும் என்னும் வெறியோடு மீண்டும் தன்னுடைய தவத்தில் ஆழ்ந்து மூழ்கினார், அந்த தவசி.

விதி யாரை விட்டது..? விதி வலியது. அதன் கைகளில் யாருடைய சக்தியும் செல்லுபடியாகாது! அந்த விதி இவரையும் சீண்டிற்று. மீண்டும் மீண்டும் இவரது தவத்தைக் கலைக்கச் செய்யும் முயற்சியால் ஒரு கணம் தன்னை மறந்து, தவத்தை மறந்து, நிஷ்டை கலைந்து அதன் விளைவாக எழுந்த ஆத்திரத்தின் விளைவாக உடல் நடுங்கக் கண் திறந்தார். சிவந்த தன் கண்களால் ஏறிட்டார். மசமசப்பாக எதிரே ஒரு உருவம் தெரிந்தது. அவர் கைகள் தானாக உயர்ந்தன.

எதிரே இருந்தவர் அப்படியே முன் வந்து இதமாக, ”மிஸ்டர் ராமநாதன், எழுந்திருங்கோ” என்றபடி, கையைப் பிடித்து, அப்படியே நிதானமாக  அவரை  எழுப்பி நிற்கவைத்து, ”என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள். முதலில் நிதானப்படுத்திக் கொள்ளுங்கள். கொஞ்ச நேரத்துக்குக் கண் கூசும். அதுனாலே மெதுவாக நடந்து  வாங்க. இதோ பத்தடி தூரம்தான். அந்த அறைக்குள் சென்று உட்கார்ந்துகொள்ளுங்கள். இன்னும் பத்து நிமிடங்களில் உங்களுக்கு வைத்தியம் முடிந்துவிடும். கண்களில் மருந்தை ஊற்றி ஒரு மணி நேரமாகிறது. நான் கூறியபடியே கண்களைத் திறக்காமல் அப்படியே இருந்தீர்கள்” என்றார் பிரபல கண் மருத்துவர் சூரியப்ரகாஷின் உதவி மருத்துவர்.

”ரொம்ப நன்றி டாக்டர். என் பையன் இப்போ வந்துடுவான், என்னை அழைத்துப் போக” என்றார் ராமநாதன்.

சூரியப்ரகாஷ் உள்ளே நுழைந்து, ”வாங்க ராமநாதன், இந்த இடத்திலே உங்க முகவாய்க் கட்டையை வைத்துக்கொண்டு உங்க வலது கண்ணாலே  என் இடது காதைப் பாருங்க. ஹும் அப்பிடியே இடது கண்ணாலே என் வலது காதைப் பாருங்க” என்றார். அப்பிடியே ”கீழே பாருங்க” என்று தன் மருத்துவத்தைத் தொடங்கினார். ”டாக்டர், என்னாலே கண்ணாடி இல்லாம எதையும் பாக்க முடியாது” என்றார் ராமநாதன்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நெற்றிக்கண்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.