விசாலம்

Vishalam“என்ன? இன்னும் ஆபீஸ் கிளம்பலயா குமார்?” நாற்காலியில் அமர்ந்தபடியே சங்கர் கேட்டார்.

“இதோ கிளம்பறேனப்பா,,,,,,” என்றபடி குமார் அவசரமாக தன் டைரியை எடுத்தான்.

அதிலிருந்து ஒரு போட்டோ பறந்து சங்கர் அருகில் விழுந்தது. சஙகர் அதைக் கையில் எடுத்தார். அது ஒரு அழகான பெண்ணின் போட்டோ. அதைப் புன்னகையுடன் பார்த்துவிட்டு குமாரின் முகத்தையும் பார்த்தார். பின் புன்னகையுடன் மனம் மலர்ந்தார்.

“என்ன காதலா?”

“ஆமாம் அப்பா, இரண்டு மாசத்திற்கு முன் என் கம்பெனியில் புரோக்ராம் அனலிஸ்ட் ஆக சேர்ந்தாள். நான் அவளுக்கு நிறைய சொல்லிக் கொடுக்கும்படியாக இருந்தது. அத்தோடு எங்கள் மனசும் ஒத்துப் போயிடுத்து”

செல்லமாக அவன் தோளைத் தட்டி, “அப்ப மேலே கவனிக்க வேண்டியது தான்” என்றபடி அவனை அணைத்துக்கொண்டார்.

இந்த அப்பா – பிள்ளையின் நடுவே ஒரு ஒளிவு மறைவுமில்லை. நண்பர்கள் போல் பேசிக்கொள்வார்கள்.

“அவள் பேரென்ன?”

“சோபனா அப்பா”

“ஓ நல்ல பேரு. நம்ம வீட்டிற்கு வந்தாக்க வீடே சோபிக்கும் இல்லையா?”

ஏதோ ஜோக்கு சொன்னாற்போல் சிரித்தார். அவனும் சிரிப்பில் சேர்ந்துகொண்டான்.

“சரி ஆபீஸில் லீவு சொல்லிவிட்டு வா. அவளைப் போய் பாத்துட்டு, நிச்சயம் செஞ்சிண்டு வரலாம். ஆமா, அவ அப்பா அம்மா எங்கே இருக்கா? எங்கே போகணும்?”

“திருவண்ணமலைக்கு… அங்குதான் சோபனாவோட அப்பா இருக்கா. கூட அவள் அத்தையும் இருக்கா.”

“அப்படியா, அவள் அத்தைக்குக் கல்யாணம் ஆகலையா?”

“அதைப் பத்தி நான் கேட்கலைப்பா, எனக்குத் தெரியாது.”

“சரி சரி, ஆபீஸுக்குக் கிளம்பு. இந்த சனி ஞாயிறில் அங்க போய்ட்டு வந்துடலாம்.”

குமார் நேரே காருக்குச் சென்றான். அவன் மனம் குதூகலித்தது.

ன்று வெள்ளிக்கிழமை. குமார், திருவண்ணாமலை போய்ச் சேர்ந்து, போன் அடித்தான்.

“டிரீங் டிரீங்…..”

“ஹலோ ஐ ம் குமார் ஹியர்”

“ஹலோ, யாரு, ஓ குமாரா…. ஐ ம் சோபனாஸ் பாதர் சுந்தரம்….. வாங்கோ வாங்கோ நாங்களும் உங்க எல்லோரையும் எதிர்ப்பார்த்துண்டு தான்
இருக்கோம். இதோ என் பக்கதிலே சோபனா….. ஐயோ வெட்கத்தைப் பாரு. உள்ளே ஒடிட்டாள்”

“சரி அங்கிள், இன்னும் ஐந்து நிமிடத்தில் அங்கு வரோம்”

“வெல்கம்”

சோபனாவுடன் இரண்டு மாதங்களாக பழகியிருந்தாலும் பெண் பார்க்கும் படலம் ஒரு திரில் தான் அவனுக்கு. இருவரும் அலுவலகத்தில் பழகியிருந்தாலும் காதலித்தாலும் வரம்பு மீறினது இல்லை.

இரு மனங்களின் சேர்வே அவர்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுத்தது.

அந்த வீடு, பழைய கால வீடு. திண்ணை, முற்றம், தாழ்வாரம் என்று அந்தக் கால வீடு. ஒன்றும் மாறாமல் இருந்தது. குமார் வீட்டை நோட்டம் இட்டதைப் பார்த்த சுந்தரம், “இது என் தாத்தா வீடு. அவர் இதை ஒரு காரணத்துக்கும் விக்கக் கூடாதுன்னு என் அப்பாட்ட சொல்லிட்டு இறந்தாராம். அதுதான் அப்படியே வச்சுருக்கோம். டாய்லெட் பாத்ரூம் மட்டும் மாடார்னாக மாத்திக் கட்டியிருக்கோம்”

“கவலைபடாதேங்கோ. இதுதான் எனக்கும் பிடிச்சுருக்கு. ஹாய்யாக ஒரு பாயைப் போட்டு படுத்தாலோ, ஊஞ்சல்ல ஆடினாலோ, அப்பப்பா அதன் சுகமே தனிதான். சரி பொண்ண வரச் சொல்லுங்கோ. எங்கே எங்க சோபனா” என்றார் சங்கர்.

சோபனா வந்தாள். ’பட்டுக் கருநீலப் புடவை, பதித்த நல்வயிரம்’ என்ற பாரதியாரின் பாட்டு, குமாருக்கு ஞாபகம் வந்தது. அவளையே வைத்த   கண் எடுக்காமல் பார்த்தான். அவளும்தான்.

“சோபனாவின் அம்மா போய், பத்து வருஷமாச்சு அவளை வளர்த்தது எல்லாம் அவள் அத்தை கமலிதான்”

“கமலியா, இப்போ எங்கே அவர்?”

“அவள் கோயிலுக்கு போயிருக்கா. நாமும் அங்கேதான் போகப் போறோம். அங்கேயே நிச்சயம் செய்யலாம்னு அவ அத்தை சொன்னா. சரி சோபனா, டிபன் – காபி கொண்டுவா…”

“அதுவும் நல்லதுதான்.”

சோபனா, பஜ்ஜி கேசரியுடன் வர, குமார் அவள் அழகில் மயங்கினான். காபியும் வந்தது. ஆனால் அவன் மனம் கல்யாண மண்டபத்தில் இருந்தது.

எல்லோரும் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள். கோயில் வாசலில் கமலி அத்தை நின்றுகொண்டிருந்தாள்.

“வாங்கோ வாங்கோ, நான் இங்கு எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டேன்” எனக் கூறி சங்கரைப் பார்த்தாள். அப்படியே திகைத்துப்போய் நின்றாள். சங்கரும்தான். அந்த அத்தை கமலி, அவன் காதலி ஆயிற்றே!

கமலி இளைத்து முகத்தில் சுருக்கங்களுடன் இருந்தாள். ஆனாலும் தனிக் கவர்ச்சியும் களையும் முகத்தில் இருந்தது. குமாரும் சோபனாவும் கோயிலைச் சுற்றி வரச் சென்றுவிட்டனர். சுந்தரம் குருக்களைக் கூப்பிட்டு வரச் சென்றார். இங்கு சங்கரும் கமலியும் தனித்து விடப்பட்டனர். அங்கு மௌனம் நிலவியது. மௌனத்தைக் கிழித்தார் சங்கர்.

“என்ன கமலி, உனக்குக் கல்யாணம் ஆயிடுத்தா? உன் கணவர் எங்கே?”

“ஓ ஆச்சே. அன்னிகே சங்கர்னு ஒத்தரைக் காதலித்து மனசாலேயே கல்யாணம் செஞ்சுட்டேனே!” அவள் கண்கள் கலங்கின.

“என் அண்ணா ஆன மட்டும் எனக்குக் கல்யாணம் செய்யப் பாத்தார். ஆனால், நான் மசிஞ்சு கொடுக்கலை. ஆமா என்னைக் கேக்கறேளே, உங்க மனைவி எங்கே?”

“என்ன கமலி அப்படி கேட்டுட்டே. நீ தவம் இருக்கலாம், நான் இருக்க மாட்டேனா? நானும் கல்யாணம் செஞ்சுக்கலை. உன் ஞாபகத்திலேயே இருக்கேன்”

“பின்ன அந்தப் பிள்ளை?”

“ஓ குமாரா, அது என் நண்பனோட பிள்ளை. ஆக்சிடண்டுலே அவன் அம்மா, அப்பா இரண்டு பேரும் செத்துட்டா. சாகும் போது அந்த ஐந்து மாசக் குழந்தையை எங்கிட்ட ஒப்படைச்சுட்டா. ’நீதான் அவன் அப்பா’னுட்டு.”

“குமாருக்குத் தெரியுமா இது?”

“தெரியும் கமலி. நான் ஒண்ணுமே மறைச்சதில்ல. எல்லாம் சொல்லிட்டேன்.”

கமலி மனம் நெகிழ்ந்து போய் கண்கலங்கினாள். இதற்குள் குமார் – சோபனா இருவரும் அங்கு வர, குருக்களுடன் சுந்தரும் வந்தார். நல்ல நேரத்தில் தட்டு மாற்றி நிச்சயம் செய்யப்பட்டது.

எல்லோரும் மன மகிழ்ச்சியுடன் புறப்பட ஆயத்தமானார்கள். கமலியின் ஏக்கப் பார்வை, சங்கரை என்னவோ செய்தது. அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

“கொஞ்சம் இருங்கோ. இன்னொரு விஷயமும் சொல்லணும். என் பிள்ளை குமார்னாலே நான் இத்தனை நாள் தவமிருந்த என் கமலி கிடைச்சுட்டா. வா கமலி. நீ தவமிருந்தது போரும்” என்று சொல்லி அவள் கையைப் பிடித்து அழைத்து வந்தார்.

“என் அம்மா, என் காதலை எதிர்த்ததால் நான் இந்த் ஊரை விட்டே போய்விட்டேன். என் அம்மா செத்துப் போகறச்ச மனசு மாறி “நீ நினைச்ச பெண்ணையே கல்யாணம் செஞ்சுக்கோன்னு அழுதாள். ஆனா அப்போ எனக்குக் கல்யாண வயசு தாண்டிப்போச்சு.”
.
“நாங்க மனசிலேயே கலயாணம் செஞ்சிண்டு, இதுநாள் வரை……..”

மேலே பேச முடியாமல் மனம் நெகிழ்ந்து போனார். எல்லோருமே வியப்பினால் வாயடைத்துப் போய் நின்றனர். அந்த மௌனத்தைக் கலைத்தபடி குமார், “அப்பா  ஐ ம் வெரி வெரி ஹாப்பி. எப்படி இந்தக் காதல் ஏற்பட்டு, நடக்க முடியாமல் போச்சு? அப்பா எத்தனை வருஷ தவம் இது?”

“குமார், நான் கமலியைக் காதலிச்சு அவளையே தான் கல்யாணம் செஞ்சுப்பேன் என்றேன். என் அம்மா ஜாதகம் பாத்து, ’இது நடக்காது.  பெண்ணுக்கு மூல நட்சத்திரம். மாமியார் மூலையிலேன்பா. நான் உன் அப்பாவை இழந்து, மூலைலே நிக்கணுமா? நான் உசுரோட இருக்கற மட்டும்  இது நடக்காதுன்னு சொல்லி, பிடிவாதாம் பிடிச்சா. எனக்கு கோவம் வந்து, ’நீ அப்பாக்கூட சந்தோஷமா இரு. நான் போறேன்’னு சொல்லிட்டு தில்லி வந்துட்டேன். என் நண்பன் ரகு, எனக்கு அடைக்கலம் தந்து, ஒரு நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்தான். அவனும் என்னை விட்டுப் போயிட்டான். எனக்கு நல்ல மகனைக் கொடுத்துட்டு… இதுதான் என் கதை.”

“ஆஹா, ஒரே முகூர்த்ததில் என் தங்கை கமலிக்கும் கல்யாணம் நடத்தி விடலாம்” என்றார் சம்பந்தி.

கமலியின் முகம், வெட்கத்தில் சிவந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *