பெருமழைப் புலவர் குடும்பத்திற்கு ரூ.10 இலட்சம் நிதியுதவி!

Perumazhai Pulavarபெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் அவர்கள் திருவாரூர் மாவட்டம் மேலப்பெருமழை கிராமத்தில் 1909ஆம் ஆண்டில் பிறந்தவர். அவர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார், விபுலானந்த அடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற தமிழ் அறிஞர்களிடம் பயின்று, ஆழ்ந்த தமிழ்ப் புலமை பெற்று, திருவாசகம், நற்றிணை, அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி போன்ற 21 நூல்களுக்கு உரை எழுதியதுடன், செங்கோல், மானனீகை முதலிய நாடக நூல்களையும் இயற்றிய தமிழறிஞர்.

அவரது நூல்கள் பல்கலைக்கழகங்களில் பாடமாகக் கற்பிக்கப்படும் சிறப்பினையும் பெற்றுள்ளன. இத்தகைய சிறப்புகள் பலவற்றைக் கொண்டு, தமிழ்த் தொண்டாற்றிய திருமகன் பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார், 1972இல் இயற்கை எய்தினார்.

அவரது மறைவுக்குப் பிறகு, அவரது குடும்பம் சிரமங்களுக்கு ஆளாகி, தற்போது அவருடைய வாரிசுசுள் வறுமையில் வாடுவதாகப் பத்திரிகைகள் வாயிலாக முதலமைச்சர் கலைஞர் அவர்களின் கவனத்திற்குச் செய்திகள் வந்துள்ளன.

இச்செய்திகள் குறித்து, மிகுந்த பரிவோடு பரிசீலனை செய்து, இவரது நூல்களை அரசுடைமையாக்குவதில் பிரச்சினைகள் இருப்பதால்; தற்போதுள்ள சூழலில் இவரது குடும்ப நிலை கருதி; அதற்காக உதவி புரியும் நோக்குடன் இவர் குடும்பத்திற்கு உதவி நிதியாக பத்து இலட்சம் ரூபாய் அரசின் சார்பில் வழங்கலாம் எனத் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி, 17.9.2010 அன்று ஆணையிட்டுள்ளார்.

பெருமழைப் புலவரின் குடும்பத்தினர் வறுமையில் வாடுவதைப் புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் மு.இளங்கோவன் வெளிப்படுத்தினார். தினமணி உள்ளிட்ட இதழ்களில் அச்செய்தி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

===========================

படத்திற்கு நன்றி – மு.இளங்கோவன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *