மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 7

0

 

இன்னம்பூரான்

04 04 2018

“My feets are tired, but my soul is rested.”

நடை தளர்ந்தாலும், மனம் அமைதியில் உலவுகிறது.

இன்று மார்ட்டீன் லூதர் கிங் என்ற கிருத்துவ மத போதகர் மெம்பிஸ் என்ற அமெரிக்க நகரில் இனவெறியர்களால் சுடப்பட்டு அமரரான தினம். அந்த மாமனிதர் சுயமரியாதையை முன்னிறுத்தி மதாபிமானத்தையும் வாழ்வியலையும் விளக்கியதை இன்று நாம் திரும்பிப்பார்ப்போம்.

“…நாட்டின் பலபகுதிகளிலிருந்து சஹுருதயர்களாகிய நாம் ( ஜெயகாந்தனுக்கு பிடித்த சொல் இது.), விடுதலை விரும்பிகளாகிய நாம், நண்பர்களும், சக ஊழியர்களுமாகிய நாம் கூடியிருக்கிறோம். கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் செல்மா: அலபாமாவிலிருந்து நடந்தே வந்திருக்கிறோம். கடுமையான பாலைத்திணையை கடந்து வந்தோம். மலைகள் ஏறி பள்ளத்தாக்குகளில் இறங்கி நடந்தோம். சுற்றி வளைந்த பாதைகளில் நடந்து வந்தோம். பாறைகளில் சாய்ந்து இளைப்பாறினோம். ஆதவனின் வெப்பம் வீசும் கதிர்களால் அயர்ந்து போனோம். கொட்டும் மழையில் நனைந்தோம். சகதியில் உழன்று முன்னேறினோம். களைப்பினால் உடல் வாடியது; நமது பாதங்களில் ஏகப்பட்ட வலி உபாதை. எனினும், நான் உங்கள் கூட்டத்தின் முன் நின்று நாம் நடந்த பெரிய அணிவகுப்பை கண்டு மனமுவந்து பேசுகிறேன். உங்களுக்கு போலார்ட் என்ற சஹோதரியை தெரியுமோ? அவர் வெகு தூரம் நடந்து வந்த போது, பஸ் சவாரி செய்திருக்கக்கூடாதா என்று சிலர் கனிவுடன் கேட்டார்கள். இலக்கணம் அறியாத அந்த மாதரசி கூறிய பொன்வாக்கைக் கேளுங்கள்:

“என்னுடைய பாதங்கள் (feets) களைத்துப்போய்விட்டன. ஆனால் என் நடை தளர்ந்தாலும், மனம் அமைதியில் உலவுகிறது.” அந்த வசனத்தில் உறையும் வாய்மையை நீங்கள் மெச்சவேண்டும். நாம் இங்கு வந்து சேரமுடியாது என்று அச்சுறுத்தினார்கள். ஆனால், நடந்தது என்ன? உலகமே நாம் இங்கு வந்து குழுமியதை கண்டு வியந்து போனது. யாரும் நம்மை அசைக்க முடியாது (கைத்தட்டல்). செல்மா என்ற இடத்திலிருந்து மாண்ட்கோமரி என்ற இந்த இடத்துக்கு நாம் வந்து சேர்ந்தது நமது சுயமரியாதை வரலாற்றில் ஒரு திருப்பு முனை. பத்து வருடங்கள் முன்னால் இங்கு தான் நீக்ரோ என்ற நசுக்கப்பட்ட இனத்தின் நவீன சுயமரியாதை இயக்கத்துக்கு வித்து இடப்பட்டது.

இவ்வாறு நீண்ட சொற்பொழிவு நிகழ்த்திய மார்ட்டின் லூதர் கிங் என்ற நீக்ரோ காந்தியின் சுயமரியாதை இலக்கணத்தின் சிறிய முன் பகுதி இது. அவசியம் ஏற்படும் போது மற்றதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவு செய்வேன். இந்த தொடரில் அவரது சுயமரியாதை இலக்கை தன்மானம் என்று அழைப்பது தான் சரி. அத்தகைய சீரிய போக்கை புறக்கணித்து தமிழ் நாட்டில் உலவி வந்த காழ்ப்புணர்ச்சி சுயமரியாதை இயக்கத்தினால் நாம் தன்மானம் இழந்தோம். அறுபது வருடங்களாக நசுக்கப்பட்ட மக்களை அவர்களில் அரசு ஆணை மூலமாக முன்னேறிய பசை படைத்தவர்களே சாதி, இனம், மதம் ஆகியவற்றை பகடையாக வைத்து, மேலும் நசுக்குவதை காண்கிறோம். நல்ல காரியங்கள் செய்ய சுபமுஹூர்த்தம் பார்க்கத் தேவையில்லை. நமது மக்கள் மஹாத்மா காந்தியின் தண்டி யாத்திரை போன்ற செல்மா – மாண்ட்கோமரி யாத்திரை நடத்தி தன்மானம் காப்பாற்றிய மத போதகர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நினைவை முன்னிறுத்தி நல்வழி செல்வோம் என்று கனவாவது காண்கிறேன். அத்தருணம் அவரது ‘நான் ஒரு கனா கண்டேன்’ என்ற சொற்பொழிவையும் படிக்குமாறு உங்கள் யாவரையும் கேட்டுக்கொள்கிறேன். நல்லதே நடக்கட்டும்.

(தொடரும்)

இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *