நிர்மலா ராகவன்

 

எல்லைகள்

இரண்டு வயதானதும் ஒரு  குழந்தை `எனக்கு நடக்கத் தெரியவில்லையா, பாட்டிலில் பால் குடிக்கிறேனா?’ என்றெல்லாம் தான் பெரியவனாக வளர்ந்துவிட்டதைப்பற்றிப் பெருமை கொண்டிருக்கும். சுயமாகச் சாப்பிடக்கூட முடியும், கீழே வாரி இறைத்தாலும்!

தன்னை ஏன் அம்மா இன்னும் குழந்தைமாதிரி நடத்துகிறாள்? வெளியில் அழைத்துப்போனால், சில சிறு குழந்தைகள்  டயாபரை அவிழ்த்துப்போடுவார்கள். ஆத்திரத்தை எப்படித்தான் காட்டுவது!

 

இரண்டு வயதில் முரண்டு

என் மகளுக்கு இரண்டு வயதானபோது, “அம்மா குளிக்கச் சொல்றா!” என்று சுயபரிதாபத்துடன் தன் பாட்டியிடம் முறையிடுவாள், என்னமோ நான் அவளைக் கொலை செய்ய ஆயத்தமாவதுபோல்.

அனேகமாக எல்லாக் குழந்தைகளும், `குளி’, `சாப்பிட வா!’ என்று என்ன ஆணை பிறப்பித்தாலும், `மாத்தேன், போ!’ என்று முரண்டு பிடிக்கும்.

`இவன் என்னை இப்படி எதிர்க்கிறானே!’ என்று தாய் அயர்ந்து, `ஏன் இப்படிப் படுத்தறே!’ என்று திட்டுவாள். இம்முறை பயனில்லாவிட்டால், கெஞ்சலிலும் இறங்குவாள். ஆனால், தனக்கு யார் மிக நெருக்கம் என்று குழந்தை கருதுகிறானோ, அவர்களிடம்தானே தன் `கைவரிசை’யைக் காட்ட முடியும்?

தாயின் அதிகாரத்தை எதிர்ப்பதில்லை குழந்தையின் நோக்கம். தன்னுடைய சுதந்திர உணர்வை வெளிப்படுத்தும் முயற்சி அது. தான் இன்னும் அம்மாவின் இன்னொரு அங்கம் இல்லை என்று உணர்த்தும் செய்கை.

இது புரிந்து, தாய் சில விஷயங்களில் குழந்தையே தனக்கு எது வேண்டுமென்று நிச்சயிக்கும் வாய்ப்பை அளிக்கிறாள். `உனக்கு இன்னிக்கு சிவப்பு சட்டை வேணுமா, இல்லை, சூபர்மேன் சட்டை போட்டுக்கறியா?’ என்று கேட்டால் போதும், அவனுக்குப் பெருமையாகிவிடும், தன்னையும் மதிக்கிறார்களே என்று.

வெளியில் அழைத்துப் போனாலோ, சிறு குழந்தையாகிவிடுவான். அம்மாவின் இடுப்பிலிருந்து இறங்க மறுத்துவிடுவான். இந்த சமயங்களில், `நான் இறக்கிவிடறபோது, நீ நடக்கப்போறியா, ஓடப்போறியா?’ என்று முடிவை அவனுக்கே விட்டால், அந்த தாய்க்கு வெற்றி கிடைக்கும். இரண்டில் ஒன்றைத் தானே தேர்ந்தெடுப்பான்.  

 “இது என் சட்டை! நானேதான் ம(டி)ச்சு வெப்பேன்!” என்னும் மூன்று வயதுக் குழந்தையை அதன் போக்கில் விடுங்கள். கையில் துணியைச் சுற்றிச் சுற்றி, சும்மாடுபோல் ஆக்கிவிட்டு, பெருமையாகச் சிரிக்கும். அப்போது புகழ வேண்டியதுதான்.

`ஐயோ! கசக்கறியே!’ என்று பதறுவது அவன் பெருமுயற்சியெடுத்து செய்த காரியத்தைச் சிறுமைப்படுத்துவதுபோல் ஆகிவிடாதா!

 

கோபத்தின் வெளிப்பாடு

நம்மைப்போல்தான் குழந்தைகளுக்கும் அவ்வப்போது கோபம் எழும். அதை எதன்மேலாவது காட்டுவார்கள்.

`இந்த துப்பாக்கி அசடு. தூக்கிப் போடு!’ என்று தன் விளையாட்டுச் சாமானை குப்பையில் போடும் குழந்தை அறியாது அதை ஒளித்துவைத்தால், `அம்மா! என் துப்பாக்கி இங்க ஒளிஞ்சுண்டு இருக்கு!’ என்று சில நாட்கள் கழித்து பெருமகிழ்ச்சியுடன் கொண்டுவந்து காட்டுவான்!

சுதந்திரத்தை நாடும் குழந்தை, `அம்மா! மழையிலே விளையாடப் போகட்டா?’ என்று கேட்பான். அனுமதி கிடைக்காது என்று தெரியும். இருந்தாலும், அம்முயற்சி எந்தவரை வெற்றி அளிக்கும் என்று ஆராயும் ஆவலால் எழும் கேள்வி அது.

`போ. ஜூரம் வரும். டாக்டர்கிட்ட அழைச்சுண்டு போய், பெரிய ஊசியா குத்தச் சொல்றேன்!’ என்று தாய் சிரித்தால், அதன்பின் அந்த முயற்சி கைவிடப்படும்.

இதெல்லாம் குழந்தையின் மூளை வளர்ச்சி அடைகிறது என்பதற்கான அறிகுறிகள். தன்னால் எவ்வளவு தூரம் போகமுடியும் என்று தன் எல்லையைப் பரிசோதித்துப் பார்க்கும் முயற்சிகள். நமக்கு அயர்ச்சியாக இருந்தாலும், மகிழ வேண்டியதுதான். எப்போதுமே கைக்குழந்தைபோல் இருந்தால் எப்படி இருக்கும்?

சிறு குழந்தைகள் நாம் சொல்வதற்கு எதிரான பொருளைப் புரிந்துகொள்வார்கள். உதாரணத்திற்கு, “மெத்தைமேல் ஏறிக் குதிக்காதே!” என்று எச்சரித்தால், முதலில் அந்த எண்ணமே எழாவிட்டாலும், ஏறிக் குதிப்பார்கள்.

“சொல்லிக்கொண்டே இருக்கிறேனே!” என்று வைதால், அவர்களுக்கு குழப்பம்தான் விளையும்.

இதைத் தவிர்க்க, அவ்வப்போது அணைத்து, குழந்தையால் செய்ய முடிந்த (அல்லது முடியாத) சிறு வேலைகளைக் கொடுக்கலாம். ஐந்து வயதுக்குழந்தையால் கீரை நறுக்க முடியும். பெரிதும் சிறிதுமாக இருந்தாலும் வேகாதா, என்ன!

 

எல்லையைக் கற்பிக்க

மெல்ல மெல்ல எல்லையைக் கடக்க கற்றுக்கொடுத்தால், அதை மீறமாட்டான். நாம் செய்யும் சில வேலைகளில் குழந்தையையும் `உதவி’ செய்ய அழைத்தால், அவனுடைய சுயமதிப்பு பெருகும்.

நான் தெரியாத்தனமாக, என் மூன்று வயதுப்பிள்ளையிடம் “பூரி இட்டுக் கொடுக்கிறாயா?” என்று சொல்லப்போக, அவன் பெருமையுடன் அப்பளக்குழவியைப் பலகையில்  அழுத்தித் தேய்த்தபடி இருந்தான். `போதும், போதும்,’ என்று கெஞ்சியபோதும், `இன்னும் கொஞ்சம் பண்ணணும்!’ என்று உற்சாகமாக, நிறுத்தாது வேலை செய்தான். அவற்றை சுத்தப்படுத்துவது பெரும்பாடாகிவிட, அடுத்த முறை ரகசியமாகச் செய்தேன்!

வயதுக்கேற்ற காரியம் கொடுத்தால் இத்தகைய தொல்லையெல்லாம் வராது.

அதைவிட்டு, `இதைச் செய்யாதே! இதை இப்படிப் பண்ணு,’ என்று ஓயாமல் தொணதொணத்தால், அடுத்த முறை எதுவும் செய்ய முன்வர மாட்டார்கள். இல்லையேல், வேண்டுமென்றே ஒன்று கிடக்க ஒன்று செய்வார்கள். இது பொதுவான மனித குணம்.

புக்ககம் செல்லும் சில பெண்கள் அவர்களுக்குப் பழக்கமான விதத்தில் ஒவ்வொரு காரியத்தையும் செய்யும்போது, மாமியாரோ, நாத்தனாரோ பழிக்கும்போது எரிச்சல்தான் உண்டாகும்.

நன்றாக வேலை செய்யும் மருமகளைப்பார்த்து, `உனக்கு ஒரு வேலையும் தெரியவில்லையே!’ என்று பழிப்பார்கள், தம் மேலான நிலையை நாட்டிக்கொள்ள. இவளோ, அதன்பின் எதுவும் முனைந்து செய்யமாட்டாள், எப்படியும் கண்டனம்தானே கிடைக்கப்போகிறது என்ற எரிச்சலில்!

 

எல்லை ஏன்?

`இது என் எல்லை!’ என்று புரிந்துகொண்டால்தான் தன்னம்பிக்கை வளரும். ஆறு வயதுக்குமேல் எல்லா வயதினருக்கும் இது பொருந்தும். பிறர் ஒருவரது எல்லையை தம் விருப்பத்திற்கேற்ப மாற்ற முயலும்போதுதான் தகராறு வருகிறது. 

 

கதை

மலேசியாவில் மிகப் பிரபலமான கார்ட்டூன் வரைபவர் ஒருவரை `சிடுமூஞ்சி’ என்று பலரும் பழித்தார்கள். (இவரது சித்திரங்கள் விமானங்களைக்கூட அலங்கரிக்கின்றன).

அவருடைய வாதம்: “சிரிக்க வைக்கும் படங்களை வரைவதால்,  என்னைச் சந்திக்க வருகிறவர்களையெல்லாம்    நான் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்க முடியுமா?” பலரது எதிர்பார்ப்பும் இப்படியே இருக்க, அவருக்குக் கோபம் எழுந்திருக்கிறது.

தன் எல்லையைக் கடக்காது, அல்லது கடக்கவைக்கும் பிறரது முயற்சிகளுக்கு இடங்கொடுக்காது அவர் இருந்திருக்கிறார். இது அவருடைய துணிச்சலைக் காட்டுகிறது. இம்மாதிரி நிலையில், கோபத்தை வெளிக்காட்டாது, அல்லது பிறர்மேல் பழி சுமத்தாது மெல்ல விலகிவிடலாம்.

பிறர் நம்மை மதிக்க வேண்டுமேயென்று நம் எல்லைகளிலிருந்து விலகினால், நம்மையே நாம் மதித்துக்கொள்ளத் தவறுகிறோம்.

ஒரு குடும்ப நிகழ்ச்சியில், நான் கலகலப்பாக எல்லாரிடமும் பேசினேன். (எப்போதாவதுதான் இந்த `மூட்’ வரும்). `நன்னாப் பேசுவா!’ `நன்னாப் பழகறா!’ என்று முணுமுணுத்தபடி, எல்லாரும் ரசித்தபடி இருந்தார்கள்.

அதன்பின் ஒவ்வொரு முறையும் அதேபோல் இருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தார்கள். எனக்கு ஓய்ந்துவிட்டது. நான் வாயே திறக்கவில்லை.  “மாறிட்டா!” என்ற விமர்சனம் வந்தது, ஏமாற்றத்துடன்.

என் சக்தியின் எல்லையை, என்னால் எது முடியும், முடியாது என்பதை  நான் உணர்ந்திருக்கிறேன். பிறரை மகிழவைக்க அதை மீறுவதில் எனக்கு உடன்பாடில்லை. 

(பாடகிகள் கச்சேரிக்குமுன் அதிகம் பேசாது இருந்தால்தான் குரல் ஒத்துழைக்கும். இனிமையாக இருக்கும். இது புரியாது, அவர்களுடன் பேச்சுக்கொடுத்து, அவர்கள் மௌனம் சாதித்தாலோ, இல்லை, ஓரிரு வார்த்தைகளில் பதிலளித்தாலோ, `கர்வி’ என்று நிச்சயிக்க முடியாது. இது அவர்களின் எல்லை).

 

குட்டிக்கதை

ஒரு சாயந்திர வேளையில், “பாட்டு கத்துக்க வா,” என்று எங்கள் வீட்டிலிருந்த என் பேத்தியை அழைத்தேன்.

இருமணி நேரம் தாமதமாக வந்தாள்.

“உன் நேரம் முடிந்துவிட்டது. நான் காத்திருந்தேன். அவ்வளவுதான்!” என்றதும், அதிர்ச்சியுடன் தன் தாயைப் பார்த்தாள் சிறுமி.

பெரியவள் தலையை அசைத்தாள், என்னை ஆமோதிப்பதுபோல்.

இளம் வயதிலேயே பிறருடைய எல்லையை மதிக்கக் கற்றுக்கொடுத்தால், தானே தன் எல்லையையும் புரிந்து, நிர்ணயிக்கும் குணம் வரும். தன்னம்பிக்கையும் வளரும்.

`பிறருக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விடுமோ?’ என்று பயந்து, விட்டுக்கொடுத்துக்கொண்டே இருப்பவர்களுக்குத் தம் எல்லை எது என்பதே தெரிய வாய்ப்பில்லை.

நமக்குப் பிடிக்காததை, நம்மால் முடியாததை,  செய்தாவது பிறரது பாராட்டைப் பெறவேண்டுமா?

எது முக்கியம்? தன்னம்பிக்கையா, பிறரது ஆமோதிப்பா?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.