இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . ( 271 )

0

அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்களுடன் இதோ அடுத்தவார மடல் வரையும் பொழுது இது. அரசியல்களத்திலே ஒருவாரம் என்பதே மிகப்பெரும் காலமாகும் என்று காலஞ்சென்ற முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் ஹெரால்ட் வில்ஸன் அவர்கள் ஒரு சமயம் கூறியிருந்தார். நாட்டில் ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப அரசியல் நிலவரங்களும் மாறிக்கொண்டேயிருக்கும். அனைத்தும் அமைதியாக தம்சார்பில் ஓடிக் கொண்டிருக்கிறது என்று அரசாங்கக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் எண்ணிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத திசையில் இருந்து ஒரு சூறாவளி அடிக்கிறது. இச்சூறாவளியில் சிக்குண்டு யார் தமக்கு எதுவும் நடக்காது என்று எண்ணியிருக்கிறார்களோ அவர்களே இலக்குகளாக அடித்துச் செல்லப்படும் நிலைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்.

இதே அரசியல் சூறாவளி சுமார் ஒருவாரகாலத்தின் முன்னர் இங்கிலாந்து அரசியல்களத்திலும் அடித்தது. அதிலே அகப்பட்டு இங்கிலாந்து அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்த உள்துறை அமைச்சர் அம்பர் ரட் அவர்கள் அடித்துச் செல்லப்பட்டார். இருவார காலத்தின் முன்னால் தனக்கு இப்படி ஒரு நிலை ஏற்படும் என்று அவர் கனவில் கூட எண்ணியிருக்க மாட்டார். இதுவரை காலமும் அமைச்சரவையில் பிரதமருக்குப் பக்கபலமாக, மிகவும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு திறமை மிக்க அமைச்சராகப் பணியாற்றிய இவர் இன்று தனது பதவியை இழந்த நிலையில் இருப்பதே அரசியல் களத்தின் நிலையற்ற தன்மையைக் காட்டுகிறது.

அப்படி அவர் பதவி விலகக் காரணமாக இருந்த சூறாவளிதான் என்ன?

ஆம், அந்தச் சூறாவளி ” Wind Rush (வின்ட் ரஷ் – அதாவது வேகக் காற்று)” எனும் வடிவில் தாக்கியது. சுமார் 70, 80 ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டாவது உலகப் போரின் அழிவுகளுக்குப் பின்னால். பிரித்தானிய நாடு பல சீரழிவுகளைச் சந்தித்த நிலையில் நாட்டைத் திரும்பக் கட்டியெழுப்ப வேண்டிய நிலையிலிருந்தது. அத்தேவைகளுக்கான வேலையாட்கள் பற்றாக்குறையை பிரித்தானியா எதிர்கொண்டது. அதனால் பல காமன்வெல்த் – பொதுநலவாய நாடுகளில் இருந்து மக்கள் இங்கிலாந்துக்குக் குடியேற வருமாறு அழைக்கப்பட்டனர். அப்படி அழைக்கப்பட்டவர்களில் மேற்கிந்திய தீவைச் சேர்ந்த பலர் இங்கிலாந்துக்கு வருகை தந்தனர். இவர்களை இங்கிலாந்துக்கு அழைத்து வந்த கப்பல் ” Wind Rush Empire (வின்ட் ரஷ் எம்பயர்) “ என்று அழைக்கப்பட்டது.

இந்தக் கப்பலில் வந்த பலர் தமது குடும்பத்துடன், கைக்குழந்தைகளுடன் வந்திறங்கினார்கள். இவர்கள் வந்திறங்கியபோது இவர்கள் இங்கு வந்ததன் அத்தாட்சியாக ” Landing Card எனும் குடிவரவு அட்டை ” அப்போதைய உள்துறை அமைச்சினால் பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் இங்கிலாந்துப் பிரஜைகளாகக் கருதப்பட்டு அவர்கள் வரி செலுத்தவும், பணிகளில் அமர்த்தப்படுவதகும் முக்கியமான தேசிய காப்புறுதி இலக்கம் வழங்கப்பட்டு அவர்கள் சாதாரணமாக பணியாற்றி, வரி செலுத்தி இங்கிலாந்துப் பிரஜைகளாக வாழ்ந்தார்கள். அத்தோடு 1970களின் முற்பகுதியில் கொண்டுவரப்பட்ட இங்கிலாந்துக் குடியேற்றச் சட்டம் 1973 ஜனவரி மாதத்துக்கு முன்னர் இங்கிலாந்துக்குள் வந்த வாழ்ந்து கொண்டிருக்கும் வெளிநாட்டவர் அனைவரும் இங்கிலாந்துப் பிரஜைகளுக்கான தகுதியுடையவர்கள் என்று வரையப்பட்டது.

இவர்களில் பலர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளாததினால் இங்கிலாந்து பாஸ்போட் எடுக்காமலே இருந்து வந்தனர். சமீபகாலமாக இங்கிலாந்தில் வெளிநாட்டவரின் குடியேற்றம் ஓர் அரசியல் பிரச்சனையாக உருவெடுத்தது. 2010ஆம் ஆண்டு வரை சுமார் பத்துவருடங்களுக்கு மேலாக பதவியிலிருந்த லேபர் அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கையின் தவறு காரணமாகவே வெளிநாட்டவரின் குடியேற்ற எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரித்தது எனும் குற்றச்சாட்டு பலமாக வைக்கப்பட்டதினால் 2010ஆம் ஆண்டு பதவிக்கு வந்த கன்சர்வேடிவ் கட்சி தனது வெளிநாட்டவர் குடியேற்றச் சட்டத்தை இறுக்கியது. இங்கிலாந்தில் சட்டத்துக்குப் புறம்பாக சரியான அனுமதி இல்லாமல் வாழும் வெளிநாட்டவரை வெளியேற்றுவதில் தாம் கடுமையான போக்கைக் கையாளப்போகிறோம் என்றார்கள் கன்சர்வேடிவ் கட்சியினர். இன்றைய பிரதமர் திரேசா மே அவர்களே அன்றைய குடியேற்ற இலாகாவுக்கு பொறுப்பாக இருக்கும் உள்துறை அமைச்சராக இருந்தார். அவரது காலத்தில் 2014ஆம் ஆண்டு இங்கிலாந்து குடியேற்றச் சட்டம் மிகவும் இறுக்கப்பட்டது. அதன் பிரகாரம்தாம் இந்த நாட்டில் வசிப்பதற்கு உரிய முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் வைத்தியசாலைகளில் வைத்தியம் பெறுவதோ, அன்றி அரசாங்க வீட்டு வசதி பெறுவதோ, கல்வி பெறுவதோ, பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவதோ தடை செய்யப்பட்டது.

இத்தகைய கடுமையான சட்டங்களினால் அன்று இங்கிலாந்தின் அழைப்பின் பெயரில் குடியேறி இங்கு 60 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வரும் “வின்ட் ரஷ்”எனும் கப்பலில் வந்தவர்களும் பாதிக்கப்படலாம் என்ற எதிர்க்கட்சியினரதும், பல சமூக அமைப்புகளினதும் எச்சரிக்கையை அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை. பின்னால் நடந்த பல அரசியல் அதிர்வுகளின் விளைவாக திரேசா மே அவர்கள் பிரதமரானர் அவரது அமைச்சரவையில் அவர் வகித்து வந்த உள்துறை அமைச்சர் பதவியை “அம்பர் ரட் (Amber Rudd) “ அவர்கள் எடுத்துக் கொண்டார். அந்தோ பரிதாபம்! வின்ட் ரஷ் பிரச்சனை அவரை நோக்கிய சூறாவளியாகத் தாக்கியது. இங்கிலாந்துப் பிரஜைகளாக இங்கிலாந்து நாட்டைக் கட்டியெழுப்பிய மக்கள் பலர் உரிய ஆவணங்கள் இல்லை எனும் பெயரில் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டனர், பலர் தமது வேலைகளை இழந்தனர், பலருக்கு வைத்தியசாலைகளில் மருத்துவ வசதி மறுக்கப்பட்டது. வெகுண்டெழுந்தது சமூகம்!  நாம் இங்கிலாந்து மக்கள் என்று சொல்லவே வெட்கப்படுகிறோம் என்று சமுதாயத் தலைவர்கள் கடிந்துரைத்தனர். அரசாங்கம் தனது தவற்றினைக் காலந்தாழ்த்தி உணர்ந்து கொண்டது. பிரதமர் தொடங்கி, உள்துறை அமைச்சர் வரை பாராளுமன்றத்திலே மன்னிப்புக் கோரினார்கள். உள்துறை அமைச்சர் மட்டுமல்ல, பிரதமரும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஆரவாரித்தன.பதவி விலகுவதால் பிரயோஜனமில்லை. அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை உடனடியாகச் சரிபடுத்துவதே எமது கடமை என பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஒருவாறு தமது பதவிகளில் தொங்கிக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில் தான் மற்றொரு இடி விழுந்தது. பாராளுமன்றத்தில் குடியேற்றம் பற்றிக் கண்காணிக்கும் தெரிவுக்குழுவின் முன் சாட்சியளித்த உள்துறை அமைச்சர், சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டவரை வெளியேற்றுவதில் எண்ணிக்கை இலக்கு வைத்திருந்தீர்களா எனும் கேள்விக்கு இல்லை என்று பதிலளித்தார். வந்ததே பிரச்சனை! அவரது இலாகாவினுள் இருந்தே அனாமதேயமாக அப்படி ஓர் இலக்கு இருந்ததற்கு அத்தாட்சி வெளிவிடப்பட்டது. ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் தனது தவற்றை ஏற்று உள்துறை அமைச்சர் இராஜினாமா செய்தார். இந்தக் குற்றச்சாட்டு உள்துறை அமைச்சருடன் மட்டுமல்ல பிரதமரையும் சாரும் எனும் குரல்கள் சில கோணங்களில் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பிரதமரைக் காப்பதற்காக தன்னைப் பலிகடாவாக்கிக் கொண்டார் உள்துறை அமைச்சர் எனும் கோஷமும் கேட்காமல் இல்லை.

“நிலை மாறும் உலகில், நிலைக்கும் எனும் நினைப்பில்” எனும் பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகின்றன. எது எப்படி இருப்பினும் இங்கிலாந்து நாட்டின் நியாகக் கோட்பாடுகளைப் பார்த்துச் சற்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *