இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (274)
அன்பினியவர்களே !
அன்பான வணக்கங்களுடன் மற்றொரு மடலில் உங்களுடன் இணைவதில் மனமகிழ்வடைகிறேன். எம்முள்ளத்தில் ஆசைகள் எழுவது இயற்கை. ஆசைகளில்லா மனம் மனித மனமாக இருக்க முடியாது. ஆசைகளற்ற உலகம் இயக்கமின்றி போய்விடும். ஆசைகளே மனித மனத்தின் ஆராய்ச்சிகளைத் தூண்டி பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு அத்திவாரமிடுகிறது. அதற்காக ஆசைகள் அனைத்துமே அர்த்தம் நிறைந்தவைகளாக இருக்க முடியாது. அவ்வாசைகள் நியாயம் எனும் வரம்புமுறையைக் கடந்து விடும்போது பேராசைகளாகின்றன.
இப்பேராசைகளின் வழி ஓடும் மனித மனம் அடைய முடியாதவைகளை அடைய முற்படும் பிராயத்தனத்திலும், அனைத்தையும் நினைத்த மாத்திரத்தில் அடைந்து விட வேண்டும் எனும் அவசரத்துக்குள்ளும் தம்மை நுழைத்துக் கொள்கின்றன.
நியாயமான ஆசைகள் கொண்டவர்களும், பேராசைகள் கொண்டவர்களும் இணைந்தே சமுதாயங்கள் உருவாகின்றன. இதுவே நடைமுறை யதார்த்தமானது. எங்கே பிரச்சனை உருவாகிறது என்றால் இவர்கள் இருவர்களுக்குமிடையில் இருக்கும் விகிதாசாரம் மாற்றமடையும் போதுதான். இன்றைய இங்கிலாந்து சமுதாயத்தைக் கொண்டால் இவ்விரு மனப்பான்மை கொண்ட மக்களின் விகிதாசாரம் ஒன்றோடொன்று முட்டி மோதிக்கொண்டு நிற்பது போல் தென்படுகிறது. அதன் அடிப்படையையே இன்றைய அரசியல், மற்றும் பொருளாதார நிகழ்வுகள் சுட்டிக்காட்டுவது போல இருக்கிறது. அரசியல் எனும் இரயிலின் தன்டவாளம் எப்போதும் மையத்தில் இருக்கும் போதுதான் நாட்டின் நிலை சீராக இருக்கும். அத்தண்டவாளம் ஏதாவது ஒரு திசையில் ஓரளவு தீவிரவாதத்தைத் தழுவிக் கொண்டால் அங்கே சிக்கல்கள் உருவாகின்றன.
இரண்டாவது உலக மகாயுத்தத்தின் அழிவுகள் இங்கிலாந்தை மிகவும் பாதித்திருந்தது. போரில் உயிரிழந்தோரின் தொகை பன்மடங்காகவிருந்தது. யுத்தத்தின் முடிவின் பின்னால் நாட்டை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டிய தேவை மிகுந்திருந்த வேளையில் அதனைச் செயல்படுத்தப் போதியளவு ஆள்பலம் அவர்களுக்கு இருக்கவில்லை. விளைவாக தம்முடைய பெரிய பிரித்தானிய எனும் குடையின் கீழ் தம்மால் ஆளப்பட்டு வந்த கிழக்காசிய, ஆபிரிக்க நாடுகளில் இருந்து மக்களை தம் நாட்டிற்கு குடியேற வருமாறு அறைகூவல் விடுத்தார்கள். அவ்வாறு 40,50,60 களில் இங்கிலாந்துக்கு வந்து குடியேறியவர்கள் ஏராளம். இன்றைய இங்கிலாந்துக்கான அத்திவாரம் அவர்களின் உதவியுடனேயே இடப்பட்டது என்றால் அது மிகையாகாது. ஆனால் அதே சமயம் எழுபதுகளில் அளவு கணக்கின்றி வெளிநாட்டிலிருந்து இங்கிலாந்தில் குடியேறும் மக்களின் கலாச்சார வேறுபாடுகள் இந்நாட்டில் எதிர்காலத்தில் பல எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அன்றைய முன்னணி கன்சர்வேடிவ் அரசியல்வாதிகளில் ஒருவரான “இனொக் பவல் (Enoch Powel) “ என்பவர் போன்ற சிலரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போதைய மிதவாத அரசியல்வாதிகள் நிறைந்த கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து நிறப்பாகுபாடு கொண்டவகையில் பேசினார் எனும் குற்றம் சாட்டினால் அவர் கட்சியினின்றும் நீக்கப்பட்டார். இன்று அவர் மறைந்து சில வருடங்களாகின்றன.
இங்கிலாந்தைக் கட்டியெழுப்ப தமது வாழ்நாளில் உழைத்த புலம் பெயர்ந்த மக்கள் அனைவரும் இங்கிலாந்தும் முதலாந்தரப் பிரஜைகளாக மதிக்கப்பட வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பே ! இங்கிலாந்து அரசினைப் பொறுத்தவரையிலும், அரச சட்டங்களைப் பொறுத்தவரையிலும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. ஆனால் இங்கிலாந்தினைப் பரம்பரை பரம்பரையாகக் கொண்டு வாழ்ந்து வரும் வெள்ளை இன இங்கிலாந்து தேசத்தவர் அனைவரினதும் மனதில் இத்தகைய சமத்துவம் நிலவுக்கிறதா? என்பது கேள்விக்குறியே ! அதேசமயம் அனைத்து மக்களின் மனங்களும் ஒரேமதிரியாகவோ அன்றி அனைவரும் ஒரே உணர்வினைக் கொண்டிருப்பார்கள் என்று எண்ணுவதோ யதார்த்தமன்று. ஆனால் இதுவரை அவர்களில் பெரும்பான்மையினர் புலம்பெயர்தோர் அன்றி வெளிநாட்டுக் குடியேற்றவாசிகள் என்போரின் மீது கொண்டிருக்கும் பார்வை அனுகூலமானதாகவே இருக்கிறது. அதேசமயம் வெளிநாட்டுக் குடியேற்றவாசிகளுக்கெதிரான கோஷம் முன்னையை விட வலுவடைந்திருப்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
இத்தகைய ஒரு நிலைக்கு இன்று நாம் வந்தடைந்திருப்பதன் காரணம் என்ன? இங்கிலாந்து நாட்டுக்குள் வெளிநாட்டுக்காரர் வந்து குடியேறுவதன் தாக்கத்தை விவாதிப்பதை நிறத்துவேஷம் என்று வர்ணிக்கத் தலைப்பட்டமையும் அத்தகைய விவாதத்தை முன்னெடுப்பவர்களின் குரல்கள் அதனால் மெளனிக்கப்பட்டதும் முக்கியமானதொன்றாகும். இங்கிலாந்தின் இன்றைய வீட்டு வசதியின்மை, தேசிய சுகாதார சேவையின் மீது ஜனத்தொகை அதிகரிப்பால் ஏற்படும் அழுத்தங்கள், பாடசாலைகளில் அதனைச் சுற்றி வசிப்பவர்களின் குழந்தைகளுக்கு இடப்பற்றாக்குறை எனும் பல காரணங்கள் இந்த வெளிநாட்டவரின் வருகையின் மீது தீவிரமான பார்வையை ஏற்படுத்தக் காரணிகளாகின்றன. இப்போது வெள்ளை இனத்தவர்கள் மத்தியில் அல்ல இரண்டு, மூன்று தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வரும் ஆபிரிக்க, ஆசிய மக்களின் மத்தியில் இருந்தும் இத்தகைய விவாதங்கள் கிளம்புவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
அதேசமயம் இந்த சமுதாய பேதலிப்புகளைச் சாதகமாக்கிக் கொண்டு உண்மையான இனத்துவேஷம் கொண்ட வெள்ளை இனத்தவர்கள் வெளிநாட்டவருக்கெதிரான கோஷத்தை எழுப்பிக்கொண்டு பயணிப்பதும் உண்மையே ! இத்தகைய விளைவுகளுக்கு புலம்பெயர்ந்து வாழும் எம்மைப் போன்றீரின் நடவடிக்கைகளும் காரணமாக அமைந்து விடுக்கின்றன. கலாச்சாரத்தைப் பாதுகாக்கிறோம் எனும் 4ண்ணத்தில் எமக்குக் கிடைக்கும் சலுகைகளை சலுகைகள் என்று பார்க்காமல் உரிமைகள் எனும் பெயரில் இந்நாட்டில் வாழும் மக்கள் மீது சிலசமயங்களில் திணிக்கிறோமோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது. நாம் வாழும் நாட்டில் எமது மொழியையும், கலாச்சாரத்தையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவன் நான் ஆனால் அதேசமயம் அவற்றின் எல்லைகள் எவை என்று நிர்ணயிக்க வேண்டிய காலக்கட்டாயத்தையும் உணர்ந்தவன்.
எமது எதிர்கால புலம்பெயர் தலைமுறை சமதளத்தில் இந்நாட்டு மக்களாகிய வெள்ளையர்களுடன் வாழ்வுப்போராட்டத்தில் ஜெயிக்க வேண்டுமெனில் அதற்கான சரியானதளமைப்பை நாம் முன்னெடுக்கத் தவறக்கூடாது. அனைவருடனும் இணைந்து வாழும் வாழ்வே வெற்றியளிக்கும் பிரிவு அல்ல.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்