இந்தியாவின் பொருளாதாரம்?

0

பவள சங்கரி

 

தலையங்கம்

 

இன்று உலகளவில் பொருளாதாரத்தில் ஆறாவது வல்லரசாக உயர்ந்துள்ள இந்தியப் பொருளாதாரம் விரைவில் மிகப்பெரிய சரிவைச் சந்திக்கக்கூடிய அபாயம் இருப்பதை பரவலாக இன்று வரக்கூடிய செய்திகள் மூலமாக அனுமானிக்க முடிகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது டாலரின் மதிப்பைவிட உரூபாயின் மதிப்பு அதிகமாக இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்றைய நிலையில் அமெரிக்க டாலரைவிட உரூபாயின் மதிப்பு எந்த அளவிற்கு சரிவைச் சந்தித்து வருகிறது என்பதையும் கண்கூடாகக் காண்கிறோம். பல ஆண்டுகளாக 45 முதல் 50 உரூபாயாக இருந்த டாலரின் மதிப்பு இன்று 70 உரூபாயைத் தாண்டியுள்ளதே நம் பொருளாதார வீழ்ச்சிக்கு எடுத்துக்காட்டு. இன்று 1கிலோ கத்தரிக்காய் 30 /40 உரூபாய்க்கு வாங்கினால், நாளை அதே காய் 60/70 உரூபாய் ஆகலாம். இப்படியேச் சென்றால் ஆப்பிரிக்க நாடுகள் போல ஒரு கட்டு பணம் கொடுத்து ஒரு கிலோ கத்தரிக்காய் வாங்கும் நிலையும் கூட ஏற்படலாம்.

வங்கித் துறையில் காலாண்டு அறிக்கைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பஞ்சாப் தேசிய வங்கி இந்த காலாண்டில் மட்டும் 3500 கோடியும், மாநில வங்கி 7700 கோடியும் அறிவித்துள்ளது. இது போன்று அனைத்து வங்கிகளின் அறிக்கைகளையும் ஆய்வு செய்தால் இந்த வாராக்கடன் தொகையானது பல ஆயிரம் கோடி என்ற உச்சத்தைத் தொடும் என்பதில் ஐயமில்லை. இதே காலகட்டத்தில் தனியார் வங்கிகள் மட்டும் சிறப்பாகச் செயல்படுவதன் காரணம் என்ன என்று பார்த்தால், தங்கள் வங்கியிலிருந்து 100 உரூபாய் வெளியே சென்றால் 105 உரூபாய் உள்ளே வரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதுதான். இப்படிப்பட்ட சூழலில் மக்கள் நலனுக்காக முன்பு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தற்போது அதே மக்களால் ஏமாற்றப்படும்போது தனியார் வங்கிகளாக ஏன் மாற்றப்படக்கூடாது. இப்படி மக்களால் வங்கிகள் சீரழிக்கப்படும்போது அதற்கு உடந்தையாக இருக்கும் பொறுப்பாளர்களான வங்கி மேலாளர்களையும், வங்கிகளின் தணிக்கையாளர்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது அவசியம். வாராக்கடனுக்கு ஈடாகக் கொடுக்கப்படும், கையகப்படுத்தப்படும் சொத்துக்களை நிர்வகிக்க ஒரு ஆணையத்தை ஏற்படுத்தி வங்கிகளுக்கு இழப்பில்லாமல் உபரி வருவாயை ஏற்படுத்துவது ஆக்கப்பூர்வமான தீர்வாக அமையலாம்.

நாளுக்கு நாள் விலை உயர்ந்து வரும் பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்றாக மின் சக்தியையும், எல்.என்.ஜி. என்று சொல்லக்கூடிய இயற்கை எரிவாயுவை போக்குவரத்துத் துறைக்கு உடனடியாக அமல்படுத்தினால் விலை உயர்வால் துண்டு விழும் 15 பில்லியன் டாலர்களை சேமிப்பதோடு அந்நிய செலாவணியைக் குறைப்பதால் நம்முடைய உரூபாயின் மதிப்பும் உயரக்கூடும்.

ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியை குறைப்பதற்கான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமல், மாறாக ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கக்கூடிய ஊக்கத் தொகையைக் குறைப்பதிலேயே அதிக கவனம் செலுத்தப்படுவதும் பொருளாதார சீர் குலைவிற்கு வழிவகுப்பதாக அமைந்துவிடுகிறது. இது போன்று பல்வேறு விசயங்களையும் கவனித்து நிர்வகிக்க வேண்டிய நிதியமைச்சகம் இன்று சரியாக நிர்வகிக்கப்படாமல் முடங்கும் அபாயத்தில் உள்ளதும் வேதனைக்குரியதாக உள்ளது.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *