நிர்மலா ராகவன்

 

போலிப்பணிவும் அகந்தையே

“மத்தவங்களுக்குக் கெட்டது செய்யறவங்களைத் தட்டிக்கேட்டா, நம்மை ரௌடிம்பாங்க!”

அண்மையில் வெளியான காலா படத்தில் ரஜினி இப்பொருள்பட ஒரு வசனத்தைப் பேசியிருப்பார்.

`பணிவு’ என்றால், எந்த அநியாயத்திற்கும் அடங்கிப்போவதென்பதில்லை. தலைவனுக்கு அவசியமாக இருக்கவேண்டிய குணம் இது. இப்படிப்பட்ட தலைவனுக்கு பொறுப்புணர்ச்சி அதிகம். தன் கீழிருப்பவர்களுக்கு எது நல்லது என்பதையே சொல்பவன். சொன்னபடி செய்யவும் செய்வான்.

இவ்வுலகில் அகந்தை கொண்டவர்கள்தாம் தலைமைப் பதவிக்கு ஆசைப்படுகிறார்கள். வெற்றியும் பெறுகிறார்கள். தமக்குத் தொண்டு செய்வதற்குத்தான் பிறர் இருக்கிறார்கள், `அவர்கள் எப்படிப் போனால் என்ன!’ என்பதுபோல் எண்ணம் கொண்டு நடப்பார்கள்.

இவர்கள் தம் புகழைப் பாடுவதைக் கேட்டு மயங்குபவர்கள் இவரைப் பின்பற்றினால், தாமும் முன்னேறலாம் என்று கணக்குப்போட்டு நடக்கும் சுயநலவாதிகள்.

இத்தகைய தலைவர் ஒருவரின் ஆணைப்படி நடக்கையில் எங்காவது தவறு நேர்ந்தால், பழியை வேறொரு இடத்திற்கு நகர்த்திவிடுவார். இவருடைய ஆயுதம் ஆத்திரம். சிறிய தவறு நேர்ந்தாலும், எல்லாரும் தன்னை வதைப்பதுபோல் நாடகமாடுவார். இது வீரமல்ல. கோழைத்தனம்.

ஒரு தலைவருக்கு அதிகாரம் செய்ய மட்டும் தெரிந்தால் போதுமா? பொறுப்பை ஏற்கவேண்டாம்?

கதை

எங்கள் பள்ளிக்கூடத்திற்குப் புதிதாக வந்தாள் தலைமை ஆசிரியை ஜரீனா. அவளுக்கு அப்பதவி கிடைத்தது கணவர் கல்வி இலாகாவில் அதிகாரியாக இருந்ததால்.

தன் கீழிருந்த ஆசிரியர்களையும் ஆசிரியைகளையும் ஓயாது விரட்டுவாள் ஜரீனா. தினமும் காலை பள்ளியில் நுழையும்போதே யாருக்காவது அர்ச்சனை நடக்கும். அவள் சிரித்தோ, சமாதானமாகப் பேசியோ யாரும் கேட்டதில்லை.

பள்ளியில் ஆண்டுவிழா நடந்தபோது, “ஒலிபெருக்கியில் கேட்பது யாருடைய குரல்?” என்று பக்கத்திலிருந்த என் சக ஆசிரியரிடம் கேட்டேன்.

அவர் நம்பமுடியாது என்னைப் பார்த்தார்.

நான் திரும்பக் கேட்டதும், “ஜரீனாதான் பேசுகிறாள்,” என்றார், `இதென்ன கேள்வி!’ என்ற முகபாவத்துடன்.

“அவள் ஆத்திரத்துடன் இரைந்தே கேட்டிருப்பதால், இயல்பான குரலைப் புரிந்துகொள்ள முடியவில்லை,” என்று நான் உண்மையைக் கூற, அவர் சிரித்தார்.

அவளுடைய அதிகாரப்போக்கை ஒருவராலும் சமாளிக்க முடிந்ததில்லை. குரல் மாற, அலறுவாள். ஆண்கள் கூனிக்குறுகிப் போவார்கள். (ஆத்திரத்துடன் பேசும்போது ஒருவரது குரல் மாறினால், அவருக்கு மனநிலை சரியாக இல்லை என்று அர்த்தமாம்).

அந்நிகழ்ச்சி முழுவதும் அவள் சிரித்த முகமாக இருந்தது மற்றுமொரு அதிசயமான காட்சி. அவளைவிடப் பெரிய பதவியிலிருந்தவர்கள் விருந்தினர்களாக வந்திருந்தனரே! தான் எவ்வளவு இனிமையானவள் என்று காட்டிக்கொள்ள வேண்டாமா!

ஜரீனா காட்டியது போலிப்பணிவு. அகந்தை இல்லாமலா எவரும் பொறுக்க முடியாதபடி அப்படி விரட்டினாள்!

இக்குணத்தை அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திப்பவர்களிடம் ஒரு சிறிய அளவில் காணலாம்.

கதை

மூன்று அண்ணன்களுக்குப்பின் பிறந்த கடைக்குட்டி என்பதால் மங்களம் செல்லமாக வளர்ந்தாள். அவளுடைய மூத்த அண்ணனின் கல்யாணத்தை விசாரிக்கப் போயிருந்தோம்.

“என் புடவை ரொம்ப சிம்பிள்!” என்றபடி உள்ளே போய் அதை எடுத்துவந்து காட்டினாள்.

ஒரு முழ சரிகை!

“இது சிம்பிளாம், பாரேன்!” என்று என் தாய் அப்பாவித்தனமாக வியக்க, எனக்கு எரிச்சலாக இருந்தது. எதுவும் சொல்லாமல் அப்புடவையைக் காட்டியிருந்தால், நான் வியந்திருப்பேன். இப்போது பிரமிக்கத் தோன்றவில்லை.

அடக்கமாவது! தன் தற்பெருமையை வெளிக்காட்டிக்கொண்டாள் அந்த நடத்தையால். பணிவைக் காட்டுவதுபோல் நடப்பதும் ஒருவித கர்வம்தான்.

அரசியலும் சமூக சேவையும்

அரசியலில் அப்போதுதான் நுழைந்திருந்த ஒரு பெண்மணி சமூக சேவை ஆற்றிக்கொண்டிருந்தவள். இன்னும் நிறைய பேருக்கு உதவ முடியுமே என்று அரசியலுக்கு வந்திருந்ததாகக் கூறினாள். விரைவிலேயே அவளுக்கு இரண்டு துறைகளுக்குமிடையே இருந்த வித்தியாசம் புலப்படாமல் போகவில்லை.

“சமூக சேவையில் பிறருக்காக உழைப்போம். அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும்போது திருப்தி கிடைக்கும். உயர்வு தாழ்வின்றி எல்லாரையும் மதிப்போம். அரசியலிலோ தலைகீழாக இருக்கிறது!” என்று அதிசயப்பட்டாள்.

“அரசியலில் எங்களுக்கு ஒரே எண்ணம்தான் எப்போதும். வோட்டு, வோட்டு!” இதை என்னிடம் பகிர்ந்துகொண்டவள் ஆளுங்கட்சியில் ஒரு பகுதியின் தலைவியாக இருந்தவள்.

இப்படிப்பட்டவர்கள் எத்தனை காலம்தான் பெரிய பதவியில் நிலைக்க முடியும்? பதவி பறிபோனதும், இப்படிப்பட்டவர்களின் உலகமே இருண்டுபோகிறது. முகத்தில் சிரிப்பு மறைந்துவிடுகிறது.

மீண்டும் என் தலைமை ஆசிரியை ஜரீனாவின் கதைக்கு வருவோம்.

நான் மேற்பயிற்சிக்காக ஓராண்டு வேறிடத்திற்குச் சென்றபோது, தலைமை ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டிய முறைகளைப்பற்றிக் கற்றேன். அப்போதுதான் ஜரீனாவின் நடத்தை எவ்வளவு தவறானது என்று புரிந்தது.

`அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் பலருக்கு மன நிலை சரியாக இல்லை!’ என்று ஒரு தகவல் அச்சமயத்தில் வெளியாகியது. ஜரீனா செய்ததையெல்லாம் நான் நீண்ட ஒரு கடிதத்தில் எழுதியது ஆங்கில தினசரியில் வெளியாகி, பரபரப்பை உண்டாக்கியது.

மேலிடத்தில் அவளை வறுத்தெடுத்திருக்க வேண்டும். மீண்டும் நான் பள்ளிக்கு வந்தபோது, என்னைப் பார்த்து நடுங்கினாள். எனக்கு அவள்மேல் கோபம் வரவில்லை. பரிதாபம்தான் எழுந்தது.

இறுதியில் அவள் சிறியதொரு பள்ளிக்கு அனுப்பப்பட்டாள். அங்கு அவள் தன் அறையைவிட்டே வெளிவருவதில்லை என்று கேள்வி. தகுதி இல்லாதவர்களுக்கு உயர்பதவி கிடைத்தால் இந்த கதிதான்.

பணிவது இழிவில்லையா?

`பணிவு’ என்றால் நம்மை நாமே இழிவாக நினைப்பதில்லை. இதைத் தவறாகப் புரிந்துகொண்டு, நம்மை மட்டமாக நடத்த முனைபவர்கள் முட்டாள்கள்.

நம்மைப்பற்றிய சிந்தனையோடு நின்றுவிடாது, அத்துடன், பிறரைப்பற்றியும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளையும், அவர்களுக்கு எந்தவிதமாகவாவது உதவ முடியுமா என்றெல்லாம் யோசிக்க வேண்டும்.

எந்த வேலை செய்தாலும், பிறரும் மனிதர்கள்தாம் என்ற எண்ணம் பலரையும் ஈர்க்கும் சக்தி உடையது.

இக்குணத்தைச் சிறுபிராயத்திலிருந்தே பழக்கலாம். ஒரு குழந்தை கடைக்காரரிடமிருந்து மிட்டாய் பெற்றுக்கொண்டால், `நன்றி சொல்லும்மா!’ என்று கனிவுடன் பழக்குவது அம்மாவின் கடமை. அதைவிட்டு, `அம்மாதான் காசு கொடுக்கிறாளே! இதற்கு எதற்காக நன்றி சொல்ல வேண்டும்?’ என்ற குழந்தையின் இயல்பான அலட்சியப்போக்கு மமதையில் கொண்டுவிடும்.

பெரியவளானபின்பும், `ஏய்! அதைக் காட்டு!’ என்று ஒரு பொருளைச் சுட்டி, மிரட்டுவதுபோல் அதிகாரம் செய்தால், சொல்பவர் வேண்டுமானால் பெருமையாக உணரலாம். கடைக்காரர் அக்குரலைக் காதில் வாங்காததுபோல் இருப்பார், இல்லையேல், விலையை உயர்த்துவார். `குறைந்த சம்பளத்தில் வேலை செய்யும்படி ஆகிவிட்டதே!’ என்று அவர்களே நொந்திருப்பார்கள். அவர்கள் மனம் நோகும்படி வாடிக்கையாளர்களும் அவமரியாதையாகப் பேசினால்?

“பணிவு நல்லொழுக்கத்தின் அடித்தளம்!” (சீன தத்துவ ஞானி கன்ஃபூஷியஸ், CONFUCIUS).

கதை

நாட்டிய நிகழ்ச்சிக்குப் பாட ஒரு பாடகரை ஏற்பாடு செய்து, பயிற்சி நடந்துகொண்டிருந்தது.

ஆசிரியையின் மகள், அரைகுறையாக இசை பயின்றிருந்தாள். தாளம்கூட சரியாக நிற்காது. தன்னைவிட்டு, வேறொருவரைப் பாட தாய் ஏற்பாடு செய்துவிட்டார்களே என்ற ஆத்திரம் அவளுக்கு.

பாடகரைக் கண்டபடி ஏசுவாள். அவருக்கோ இசைதான் ஜீவனம். எல்லா அவமரியாதையையும் பொறுத்துப்போனார்.

“அவர் வயசிலே பெரியவர். இப்படியெல்லாம் நீ திட்டக்கூடாது,” என்று அம்மா அதிருப்தி தெரிவித்தாள்.

“நாம்தான் காசு கொடுக்கிறோமே!” என்று திமிராகப் பதில் வந்ததாம். (அந்தத் தாயே என்னிடம் சொல்லிக் குறைப்பட்டுக்கொண்ட சமாசாரம்.

நம் கை உயர்ந்திருக்கும்போது அகம்பாவம். பிறரிடமிருந்து எதையாவது பெறுகையில் கை தாழ்ந்திருக்கும். இதுவா பணிவு?

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *