நிர்மலா ராகவன்

 

ஒரு வட்டத்துக்குள்

சின்னஞ்சிறு குழந்தைகள் சிரித்த முகத்துடன் தென்படுவார்கள். அவர்களைப் பார்த்தாலே நமக்கும் மகிழ்ச்சி பெருகும். அந்த வயதில் மகிழ்ச்சியடைய உணவு, உறக்கம், அன்பு எல்லாமே போதுமானதாக இருக்கிறது. அவர்களுடைய உலகமே அந்தச் சிறிய வட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது.

பெரியவர்களானதும் அந்தச் சிரிப்பு மறைந்துவிடுகிறது. நீண்ட காலம் ஒரே நிலையில் இருப்பது ஒருவித பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கலாம். ஆனாலும், அந்த வட்டத்திலிருந்து வெளியே வந்தால், என்னென்ன சவால்களைச் சந்திக்க நேரிடுமோ என்று பயந்து, பலரும் மாற்றமில்லாத வாழ்க்கையில் காலத்தைக் கழிக்கிறார்கள்.

`செக்குமாடு!’ என்று தம்மையே குறைகூறிக்கொண்டாலும், அதை மாற்றி அமைத்துக்கொள்ள இவர்கள் எந்தவித முயற்சியும் எடுப்பதில்லை. அதைவிட்டு வெளியே வரும்போதுதான் தெரியும், அது அப்படி ஒன்றும் நிம்மதியைத் தரவில்லை என்று.

இவர்களுக்குத் தம்மால் பிறரைப்போல் இருக்க முடியவில்லையே என்ற தாபம் ஏற்படக்கூடும். அதை மறைத்துக்கொண்டு, `எனக்கென்ன! சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்!’ என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். தம்மைவிட உயர்ந்த நிலையில் இருப்பவர்களிடம் ஏதாவது குறை தென்பட்டால், அதைப்பற்றிப் பேசிப் பேசியே தாம் அவர்களைவிட சிறந்துவிட்டதாக நினைப்பதும் உண்டு.

பொருட்களினால் மகிழ்ச்சியா?

மகிழ்ச்சி என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும்.

எப்போதோ ஒரு கதையில் படித்தேன், `அவளுக்குத் திருமணமானதும் சோபா, பாங்கில் பணம், வீட்டில் பளிங்கினால் ஆன தரை எல்லாம் இருந்தன. ஆனால் மகிழ்ச்சி இருக்கவில்லை,’ என்று. இவை மட்டும் போதுமா மனமகிழ?

வெகு சிலர்தான் உயிரற்ற பொருட்களால் மகிழ்ச்சி அடைவார்கள். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எத்தனை கிடைத்தாலும், நிறைவடைவதில்லை. இதுவும் ஒருவித மனநோய்தான். (மலேசியாவின் முன்னாள் பிரதமரின் இல்லங்களில் 12,000 வகையான விலையுயர்ந்த நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன!).

நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இன்னொரு தடை போட்டி மனப்பான்மை. பிறருடன் தங்களை ஒப்பிட்டுக்கொண்டே இருப்பவர் உயர்வாகவோ, அல்லது தாழ்வாகவோ உணர்வார்.

கதை

என் உறவினர் ஒருவர் சில காலம் துபாயில் உத்தியோகம் பார்த்தார். நான் நிரந்தரமாக மலேசியாவில் இருப்பது அவர் கண்களை உறுத்தியது.

“ஐயே! நீ மலேசியாவில் இருக்கிறாய். அங்கு இந்தியர்கள் வசதி குறைந்தவர்கள். நாங்கள் தினமும் சாயந்திர வேளைகளில் கிளப்பில் கழிப்போம்!” என்றார்.

“அதனால் என்ன? அங்குள்ளவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்வதற்காகத்தான் நான் இருக்கிறேன்,” என்று அலட்சியமாகப் பதிலளித்தபோது எனக்கு அவர் உள்நோக்கு புரியவில்லை.

பிறருடன் கலந்து பேசியபோது, ஒரு வார்த்தை அடிபட்டது: `போட்டி!’

அவர் என்னைவிட செல்வந்தராக இருக்கலாம். ஆனால், தான் தான் சந்திக்கும் பலரையும்விட ஏதோ வகையில் உயர்ந்தவன் என்று தனக்குத்தானே உறுதிப்படுத்திக்கொள்ளும் தேவை அவருக்கிருக்கிறது.

இம்மாதிரி எப்போதும் பலருடனும் போட்டி போட்டுக்கொண்டு, தாம் அமைத்துக்கொண்ட வட்டத்திலேயே சுழலுபவர்களுக்கு மகிழ்ச்சி என்பது அவர்களைப் பார்த்துப் பிறர் பொறாமைப்பட்டால்தான்!

`உயர் பதவியில் இருக்கிறேன். எல்லாரும் என்னை மதிக்கிறார்கள்!’ என்று பெருமிதம் கொள்பவர்கள் பதவி போனதும், அத்துடன் தம் பெருமையையும் மகிழ்ச்சியையும் இழக்கும் அபாயம் இருக்கிறதே!

புதிதாக ஆரம்பி

`இது என்ன வாழ்க்கை! தினமும் காலையில் எழுந்து, சமைத்து, சாப்பிட்டு, தூங்கி என்று ஒரேமாதிரியாக இருக்கிறது!’ என்று சிலர் சலிப்புடன் பேசுவார்கள்.

செய்த காரியத்தையே செய்துகொண்டு, அதில் வெற்றி கண்டாலும்கூட, புதிதாக எதையாவது புதிதாகக் கற்பது மனத்திற்கு உற்சாகமூட்டும்.

இலக்கு எதுவுமில்லாது, ஒரு குறுகிய வட்டத்துள் சுழலும் வாழ்க்கையால் அலுப்பு ஏற்பட்டுவிடுகிறது. அதை மாற்றி, மறைந்த உற்சாகத்தை மீண்டும் பெற புதிதாக ஏதாவது செய்ய ஆரம்பிக்க வேண்டியதுதான்.

`புதிதாக ஆரம்பிப்பதா! அதில் வெற்றி கிடைக்கும் என்பது என்ன நிச்சயம்?’ என்ற அயர்ச்சியை முதலில் வெல்ல வேண்டுவது அவசியம்.

`என்னால் முடியுமோ?’ என்ற சந்தேகம் எழுந்தால், நம் திறமையை நாமே சந்தேகிப்பது போல் ஆகிவிடும். பலவற்றிலும் துணிந்து ஈடுபட்டால், நமக்கேற்ற ஏதாவது ஒன்று தட்டுப்படாதா! பயந்துகொண்டே இருந்தால், `சமயம் கிடைத்தபோது, அதைச் செய்யாமல் விட்டுவிட்டோமே!’ என்ற குறை எதற்கு?

சவாலே, சமாளி

சவால்கள்தாம் நம்மை நல்லவிதமாக மாற்றக்கூடியவை. ஆனால் யார் சவால் விடுகிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

(இளவயதினர் மகிழ்ச்சியைத் தேடி, மது, போதை என்று நாடுவது அவர்களுக்குத் தக்க இலக்கு இல்லாத காரணத்தால்தான். கூடாத சேர்க்கையால், `உனக்குத் தைரியம் இல்லையே!’ என்று அவர்கள் செய்யும் கேலியைச் சவாலாக எடுத்துக்கொள்வது முட்டாள்தனம். அது அழிவுப் பாதைக்குத்தான் வழி).

உடற்பயிற்சி, நீச்சல், கடுமையான விளையாட்டு என்று எதை எடுத்துக்கொண்டாலும், உடல்வலியைத் தவிர்க்க முடியாது. ஆரம்பத்தில் மனம் தளர்ந்தாலும், அதையே சவாலாக ஏற்றால், சிறிது நாட்களுக்குப்பின் நல்ல பலன் கிடைக்கும். `நானா சாதித்தேன்!’ என்று பெருமகிழ்வு உண்டாகும்.

கதை

பள்ளிக்கூடம் ஏற்பாடு செய்திருந்த நாட்டியப் பட்டறை, அதைத் தொடர்ந்து நாட்டிய வகுப்பு, இரவில் ஒரு சிறந்த நாட்டிய நிகழ்ச்சி என்று ஓய்வில்லாமல் ஒரு நாள் முழுவதும் அலைந்திருந்தாள் அப்பெண். இரவு வெகுநேரம் கழித்துத்தான் வீடு திரும்ப முடிந்தது. `உடலெல்லாம் ஒரே வலி!‘ என்று மறுநாள் காலை படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே முடியாது முனகினாள்

`நேற்று ஆடியவர்களுக்குப் பயிற்சி காலத்தில் உடல் வலி இல்லாமல் இருந்திருக்குமா?’ என்று தாய் கேட்டபோது, மேலே எதுவும் பேசாது, நமட்டுச்சிரிப்புடன் எழுந்தாள்.

கற்பனையும் சிறு வட்டமும்

கற்பனைத்திறனுக்கு முட்டுக்கட்டையாக இருப்பது இந்த பாதுகாப்பு உணர்வு.

ஒரு வரி எழுதுவதற்குள், `இப்படி எழுதினால், அம்மா கோபிப்பார்களோ, படிப்பவர்கள் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள்?’ என்றெல்லாம் எழுத்தாளர்களுக்கு யோசனை எழுந்தால், எழுத்தில் என்ன சுவை இருக்கும்?

நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும், நம்மைப்பற்றி அவதூறாகப் பேச நான்குபேர் இருக்கத்தான் போகிறார்கள். அவர்கள் வாயை மெல்லவும் ஏதாவது வேண்டாமா, பாவம்! பாதுகாப்பான வட்டத்திலிருந்து வெளியே வந்து, சும்மா எழுதிப்பாருங்கள்!

ஒரு நாள் காலை கண்விழித்ததும், `இன்று என்ன செய்ய வேண்டும்?’ என்று நிர்ணயித்துக்கொண்டு, இரவு தூங்குமுன் நினைத்ததை ஓரளவாவது நிறைவேற்றிவிட்ட திருப்தி எழுந்தால், மகிழ்ச்சி அடையலாம். சிறுகச் சிறுக நம் வட்டம் பெரிதாக, வெற்றியும் உறுதி.

வெற்றி என்பது இறுதிக்கட்டம் இல்லை. நம் குறுகிய வட்டத்திலிருந்து வெளியே வரும் முயற்சிதான். அது தொடர்ந்துகொண்டே இருக்க, வட்டமும் பெரிதாகும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *