வை.கோபாலகிருஷ்ணன்

இவரே கூறுவதான இவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு: நான் எழுதி வெளியிட்ட முதல் சிறுகதைத் தொகுப்பு நூல் “தாயுமானவள்”( வானதி பதிப்பக வெளியீடு- 2009)பாரதியார் தமிழ்ச்சங்கம் மற்றும் திருக்குறள் பேரவையினால் முதல் பரிசுக்குத் தேர்வாகி 28.02.2010 அன்று நடந்த விழாவில் கெளரவிக்கப் பட்டது.

நான் எழுதி வெளியிட்ட இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு நூல் “வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள்” திருவரசு புத்தக நிலையம் வெளியீடு – 2009 திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் [District Collector] திரு. தா.சவுண்டையா I.A.S. அவர்களால் 17.01.2010 அன்று பாராட்டி, மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு வழங்கப்பட்டது. பொற்கிழியுடன் “சிந்தனைப்பேரொளி” என்ற விருதும் வழங்கப்பட்டது. “நம் உரத்த சிந்தனை” என்ற தன்னம்பிக்கையூட்டும் தமிழ் மாத இதழ் நடத்திய போட்டியொன்றில்,கலந்து கொண்ட என் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூலான ”எங்கெங்கும்…. எப்போதும்…. என்னோடு….” (மணிமேகலைப் பிரசுர வெளியீடு – 2010) முதல் பரிசுக்குத் தேர்வாகி, 15.05.2011 அன்று சென்னையில் நடந்த விழாவில் கலைமாமணி டெல்லி கணேஷ் அவர்களால் பரிசளித்துப் பாராட்டப்பட்டது.

ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நடத்திய சிறுகதைப் போட்டியில் என் மனைவி பெயரில் கலந்து கொண்ட என் கட்டுரை, அகில இந்திய அளவில் முதல் பரிசான –  தங்க நெக்லஸை வென்றது. 2004-லிலும், 2007-லிலும் [INSSAN] நடத்திய வாக்கிய அமைப்புப் போட்டிகளுக்காக அனுப்பப்பட்ட எனது பங்களிப்புகள் தேசிய அளவில் முதல் பரிசும் தங்கப்பதக்கமும் வென்று முறையே மும்பையிலும், ஜாம்ஷெட்பூரிலும் நடத்தப்பட்ட விழாக்களில் திரு. எஸ்.டி. தேஷ்பாண்டே(துணைத் தலைவர்), திரு.என்.கே.புன்வானி அவர்களின் திருக்கரங்களால் பரிசளிக்கப் பட்டது.

என்னால் முதன் முதலாக எழுதப்பட்ட “தாயுமானவள்” சிறுகதை, தினமலர் நிறுவனர் அமரர் டி.வி.ஆர். நினைவுப் பரிசினை வென்றது. தொழிலகப் பாதுகாப்பு விழிப்புணர்வு விழாவில் தமிழ்ச் சிறப்பு வாக்கியத்திற்கு (SLOGAN) முதல் பரிசும், தமிழ் கவிதைக்கு இரண்டாம் பரிசும் 26.05.2008 அன்று திரு.எஸ். ரத்தினம் அவர்களால் வழங்கப்பட்டது. சென்னையைச் சார்ந்த ”ஸ்ரீ சங்கர பக்தஜன ஸபா” 2007 ஆம் ஆண்டு ”ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” என்ற தலைப்பில் நடத்திய நாடகப் போட்டியில் என்னுடைய படைப்பு அகில இந்திய அளவில் மூன்றாம் பரிசுக்குத் தேர்வாகி, வாணி மஹாலில் 03.10.2007 அன்று நடைபெற்ற மிகப்பெரிய விழாவில் ரூபாய் 5000 ரொக்கப் பரிசளிக்கப்பட்டது.

38 ஆண்டுகளுக்கு மேல் நான் பணியாற்றிய BHEL ஐப்பற்றி அடியேன் எழுதிய கவிதை, 2009 ஆம் ஆண்டு என் பணி ஓய்வுக்குப்பிறகு, BHEL நிர்வாகத்தால் இசை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு குறுந்தட்டாக, தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளிலும், அது தவிர தனியாக புல்லாங்குழல் இசையிலும் வெளியிடப்பட்டு, இந்தியாவில் உள்ள அனைத்து BHEL யூனிட்களுக்கும்,  வழங்கப் பட்டுள்ளது.

அன்புடன்,
வை.கோபாலகிருஷ்ணன்( gopu1949.blogspot.com)

***********

பூக்களை விட அந்தப் பூக்காரி நல்ல அழகு. பதினாறுக்கு மேல் பதினெட்டு தாண்டாத பருவப்பெண். முன்புறம் ஒன்றும் பின்புறம் ஒன்றுமாகப் போட்ட இரட்டைப் பின்னலுடன், டாக்டர் அகர்வால் கண் ஆஸ்பத்திரி விளம்பரப் பலகையிலிருக்கும் பெண் இறங்கி வந்து பாவாடை சட்டை தாவணி அணிந்து வந்தது போலத் தோன்றினாள்.

அந்தக் கோவில் வாசலில் ஏற்கனவே பூ விற்று வந்த கிழவியின் வியாபாரம் கடந்த ஒரு வாரமாக, இந்தப் பெண்ணின் வருகையால் படுத்துப் போனது. இந்தப் பெண்ணின் புதிய பூ வியாபாரத்தால் கோவிலுக்கு வரும் இளம் வயது பக்தர்களின் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்து விட்டது. பலாப் பழத்தை ஈ மொய்ப்பது போல, பூ வாங்கும் சாக்கில் பல இளைஞர்கள் அவளை வட்டமிட ஆரம்பித்தனர். சிலர் தங்கள் நெற்றியில் பட்டையிட்டு வந்து, அவளை பக்திப் பரவசத்தால் ஆட்கொள்ளப் பார்த்தனர்.

இது போல எவ்வளவு பேர்கள் வந்தாலும், அவளிடம் வழிந்தாலும், தன்னுடைய சாமர்த்தியமான பேச்சால் ஜொள்ளர்களைச் சமாளித்து, பூ வியாபாரத்திலேயே முழுக் கவனத்தையும் செலுத்தி, மிகக் குறுகிய நேரத்திற்குள், கூடை முழுவதும் காலி செய்து விட்டு, கை நிறையக் காசுகளுடன், கிழவியைப் பார்த்து கண் சிமிட்டியவாறே, “வரட்டுமா பாட்டி” எப்படி என் சாமர்த்தியமான வியாபாரம் என்பது போல சிரித்துக் கொண்டே சென்று விடுவாள். ”ஜாக்கிரதையாகப் பார்த்துப் போம்மா கண்ணு” என்பாள், அந்தக் கிழவியும் எந்த விதமான போட்டியோ பொறாமையோ இல்லாமல். ஆனால், அந்தப் பெண் சென்ற பிறகே கிழவிக்கு வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும்.

அந்தப் பெண்ணைப் பற்றி பலர் இந்தக் கிழவியிடம் விசாரிப்பார்கள். அவள் யார்? அவள் பெயர் என்ன? எந்த ஊர்? இங்கே இங்கே தங்கியிருக்கிறாள்? என்பதைத் தெரிந்து கொள்வதில் ஒரு ஆவல்.  ”அந்தப் பாப்பா யாரோ, எனக்குத் தெரியாதுப்பா. மொத்தத்தில் அது என் பிழைப்பைக்  கெடுக்கத்தான் வந்து போயிட்டு இருக்கு. இனிமேல் அது செவ்வாய், வெள்ளி மட்டும்தான் வருமாம். சொல்லிட்டுப் போயிடுச்சு” என்று கிழவி பலரிடமும் சொல்லிக் கொண்டு இருந்தாள்.

இதைக் கவனித்த ஒரு இளைஞன் மட்டும் பாட்டியின் காதருகில் சென்று, “பாட்டி அந்தப் பெண்ணை செவ்வாய் வெள்ளியும் கூட இங்கு வர வேண்டாம்ன்னு சொல்லிடுங்க” என்றான் சற்றுத் தயங்கியவாறே.

இதைச் சொன்ன அந்த இளைஞனை பூக்காரக் கிழவிக்கு, அவனுடைய சிறு வயதிலிருந்தே பழக்கம் உண்டு. தினமும் தவறாமல் இந்தக் கோவிலுக்கு வருபவன். உண்மையிலேயே கடவுள் பக்தி உடையவன். ஒரு நாள் பலத்த மழையில் நனைய வேண்டிய இந்தக் கிழவியைப் பாசத்தோடு குடை பிடித்து அவள் பூக்கூடையுடன், அவள் வீட்டில் பத்திரமாகக் கொண்டு சேர்த்தவன். இந்தத் தள்ளாத வயதிலும் பூ வியாபாரம் செய்து உழைத்துச் சாப்பிடும் கிழவி மேல் அவனுக்கு ஒரு தனிப் பிரியம் உண்டு.

மேலும் கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டுத் திரும்பிப் போகும்போது, தினமும் இந்தக் கிழவியிடம் ஒரு பத்து நிமிடங்களாவது பேசி விட்டுத் தான் போவான். சிறுவயதில் ஒவ்வொரு பூக்களின் பெயர்களையும் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்வான். “இது மல்லிகைப்பூ, இது ஜாதிப்பூ, இது மரிக்கொழுந்து, இது கனகாம்பரம், இது ஜவந்திப்பூ, இது தாமரைப்பூ, இது ரோஜாப்பூ, இது பட்டு ரோஜாப்பூ” எனப் பொறுமையாக விளக்குவாள், அந்தக் கிழவி. “மனுஷங்க கிட்டத்தான் ஜாதி வெறி இருக்குன்னு பார்த்தா, பூவிலும் கூட ஜாதிப்பூன்னு ஒரு ஜாதி இருக்கா பாட்டி” என்று புரட்சிகரமாக சிறுவயதிலேயே அவன் கேட்டதை நினைத்து கிழவி பலமுறை தனக்குள் வியந்திருக்கிறாள்.

தான் பள்ளியில் படித்து முதல் ரேங்க் வாங்குவது முதல், காலேஜில் சேர்ந்தது, காலேஜ் படிப்பு முடிந்த கையோடு பேங்க் ஒன்றில் உள்ளூரிலேயே நல்லதொரு வேலையில் சேர்ந்தது, கை நிறைய இப்போது சம்பளம் வாங்குவது வரை, அவ்வப்போது அனைத்து விஷயங்களையும் பாட்டியிடம் பகிர்ந்து கொண்டு, அவள் அவனை மனதார அவ்வப்போது வாழ்த்துவதில் பேரின்பம் கொள்பவன் அவன்.
பெண் வீட்டுக்கு எந்த ஒரு செலவும் வைக்காமல், தான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் அந்த இளம் பூக்காரப் பெண்ணைப் பொது இடத்தில் பலரும் மொய்ப்பதில் அவனுக்குத் துளியும் இஷ்டம் இல்லை.

வழக்கம்போலப் பூக்காரக் கிழவியிடம், தன் மனதில் உள்ள விருப்பத்தைத் தெரிவித்து, அது நல்லபடியாக நடக்க வேண்டி, ஆசீர்வதிக்கும்படி வேண்டினான். அப்போது கோவிலில் மணியடித்தது நல்ல சகுனமாகத் தோன்றியது.

உயர் நிலைப் பள்ளிப் படிப்புத் தேர்வு முடிந்து லீவுக்கு வந்த தன் பேத்தி, தான் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல், தனக்குப் போட்டியாக ஒரு வாரம் மட்டும் பூ வியாபாரம் செய்யப் போவதாகவும், ‘நான் உன் பேத்தி என்பதை யாரிடமும் சொல்லக்கூடாது’ என்றும் சொல்லி, விளையாட்டாக வந்து போனதும் அதுவே அவளுக்கு பூச்சூடி மணமகளாக மாறும் பாக்கியத்தைத் தந்துள்ளதும், எல்லாம் வல்ல அந்தக் கோவில் அம்பாளின் அனுக்கிரஹம் என்று வியந்து சந்தோஷத்தில் பூத்துக் குலுங்கினாள், அந்தப் பூக்காரக் கிழவி.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஜாதிப்பூ

  1. பூவாய் மலர்ந்து மணம் வீசும் அருமையான கதைக்குப் பராட்டுக்கள்..

  2. தங்களின் முதல் பாராட்டினால், ஜாதிப்பூவின் மணம் மிகவும் ஜாஸ்தியாகி,
    என் மனதை மயக்கிவிட்டது. நன்றி நன்றி நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *