தொல்தமிழரின் உழவும் கலைச்சொற்களும்
-முனைவர் ம. தமிழ்வாணன்
இறைவனை வணங்கி வழிபடுவதை மரபாக கொண்டிருந்ததைப் போல, தங்கள் வாழ்வுக்கு அடிப்படையாக விளங்கும் இயற்கைப் பொருட்களைப் போற்றி வழிபடுகின்ற மனப்பாங்கும் தமிழர்க்குத் தொன்றுதொட்டு வந்த நற்பண்பாகும். பண்டைத் தமிழ்ச் சமுதாயத்தினரும் இன்றைக்கு இருப்பது போலவே உழவுத் தொழிலையே தங்கள் வாழ்க்கையின் உயிர் நாடியாகக் கொண்டிருந்தனர் என்பதனை ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ எனப் புறநானூறு விளக்குகின்றது. அவ்வகையில் வேளாண்மைச் செயல்முறைக்கு அடிப்படையாக விளங்கும் நிலம், நீர் இவற்றின் மேலாண்மையை அறிதல், வேளாண்மைக்குக் களம் அமைத்துப் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டதாக அமையும். நாடு உய்வதும், உயர்வதும் பொருளாதாரம் உறுதிநிலை பெறுதலையும் வேளாண்மையின் வளர்ச்சியையும் பொறுத்து அமைவது. வேளாண்மையில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்? விரைந்து முன்னேறிவரும் வேளாண் நுணுக்கங்களைத் தெரிந்து பரிந்துரைகளைச் செயலாற்றிச் செம்மைப்படுத்துவது வேளாண்மையில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு உழவனின் முக்கியக் கடமையாகும். இதற்குத் துணைநிற்பது வேளாண் செயல்முறைகளைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்லக் கை கொடுப்பது நல்ல கலைச்சொற்கள் தான்.
பண்டைய விவசாயம் கடுமையான உழைப்பிலும் அனுபவ இயற்சியிலும் அமைந்தது. ஆனால், இத்தகைய உழைப்புடன் வேளாண்மை விஞ்ஞான முறைகளைப் புள்ளி விவரங்களுடன் இணைக்கும்போது ஒரு பெரும் சக்தியாக மாறிப் புரட்சிகரமாகவும் காலச் சூழ்நிலைக்கேற்பவும் மாறுபாடடைந்து மக்களுக்குப் பயன்படுகிறது. பழையன கழிந்து புதியன புகுந்ததால்தானே இன்று நாம் பசுமையில் புரட்சி செய்து, உணவு உற்பத்தியில் தன்னிறைவினையும் காண நேர்ந்துள்ளது?
நாடும் மொழியும் வளர்ந்தால்தான் வாழும் மக்களும் வளமான வாழ்வு பெறுவர். இதற்கேற்ப நமது இந்திய வேளாண்மையுடன் விஞ்ஞான அடிப்படையில் அமைந்த உண்மைக் கூறுகளை இணைந்த யாவரும் அறிந்துகொள்ளும் வகையில், தொழில்நுட்பங்களை எளிதில் புரிந்து செயல்படுத்திடும் வகையில் தாய்மொழியில் உணர்த்துதல் மிகவும் அவசியம், அறிவியல், கலைச்சொற்களைப் பொருள் சிதையாமல் பெயர்த்துத் தமிழில் வழங்க வேண்டும் என்ற வேட்கை நாளும் வளர்ந்து வருகின்றது. தமிழில், புதிய கலைச்சொல்லாக்கங்களைச் செய்தற்கு முன்னர், இலக்கியப்பழமை சார்ந்த அறிவியல் கலைச்சொற்களைப் பேணிக்காக்க வேண்டிய கடமையும் தமிழுக்கு உரியது.
மொழிபெயர்க்கும்போது பிறமொழி சொற்களுக்கு இணையான பொருத்தமுடைய சொற்களை ஆய்ந்து காட்டி நல்ல சொற்களைக் கண்டெடுத்து உறுதிப்படுத்துவது சிறந்தது. பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது சொல்லுக்குச் சொல் நேரிடையாகவே மொழி பெயர்க்காமல் பொருளுக்குப் பொருள் பொருந்தி வரும் வகையில் மொழி பெயர்ப்பது சிறந்தது. மொழிபெயர்ப்பு என்பது ஒரு கலை, ‘கலை’ யாவும் வெறும் சொல்லால் மட்டும் சிறப்பதல்ல. சொல்லிய பொருளும், வழங்கும் மரபும் பயன்பட்டு வந்த வகையில் அறிந்தோராலேயே இக்கலை ஒளிர்வதாகும். சொற்பொருளை வழுவற உணர்ந்தோரே, புதிய சொற்களைத் தகுதியுடையாத ஆக்கவல்லவர். நாம் கடமையாற்றும் வகையில் எவரையும் சிந்திக்க வைக்கும் நிறந்த கருவூலமாக அமைதல் அவசியம். நம் பழைய இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் கணக்கற்ற சொற்கள் காணக்கிடக்கின்றன. அவற்றை எடுத்துப் பயன்படுத்திட, இல்லாத இடங்களில் புதிய சொற்களை உருவாக்கிடத் தளராத தமிழார்வமும் அயராத தமிழ்ப்பணித் திறனும் வேண்டும். கணக்கற்ற வேர்ச்சொற்களைப் பெற்றிருக்கும் தமிழ்மொழியில் புதிய சொற்கள் புனைவதில் தொல்லை இருக்காது. எனவே முனைப்புடன் செயல்படுவது சிறந்ததாக அமையும்.
வேளாண்வளத்தில் கலைச்சொற்கள்
வேளாண்மை இன்று நாடெங்கும் சிறப்புற்று வளர்ந்துவரும் ஓர் அறிவியல் துறை. வளமான மண்ணும் அளவான நீரும் உழவியலுக்கு இன்றியமையாத இரு கண்கள். உணவென்று சிறப்பித்துச் சொல்வது நிலத்தையும், நீரையும். மண்ணியல், உழவியல், நீர்வள இயல், வித்தியல், தாவரவியல், தாவர வினையியல், பயிர் நோயியல், நுண்ணுயிரியல், பூச்சியியல், உயிர் வேதியியல், மீன்வள இயல், வானவியல் என்றின்னோரன்ன முறைகள் பலவற்றையும் உள்ளடக்கிய அறிவியல் கலையாக வேளாண்துறை இன்று வீறுபெற்று நாளும் வளர்ந்து வருகின்றது.
நிலவளத்தில் கலைச்சொற்கள்
நிலப்பகுதிகள் மக்கள் வாழ்விற்கும் இயக்கத்திற்கும் பயிர் விளைச்சலுக்கும் உரியவை. எனினும் நிலப்பகுதிகள் அனைத்தும் ஒரே இயல்பும் தன்மையும் வாய்ந்தவை இல்லை. சில பகுதிகள் பண்படுத்தப்பட்டுப் பயிர் விளைவுக்கும் மக்கள் வாழ்க்கைக்கும் உரியவையாக, உகந்தவையாக இருக்கும். மேலும் இந்நிலப் பகுதிகள் சமமட்டமாக இல்லாமல் மேடு பள்ளம் நிரம்பியவையாகவும் இருக்கக்கூடும். நிலப்பகுதியில் அமைந்த இவ்வேறுபாடுகளைச் சுட்டும் கவிஞர் அந்த இடத்தில் வாழும் மக்களின் இயல்புக்கும், பண்பாட்டிற்கும் ஏற்ப நல்ல நிலம், தீய நிலம் என்று நிலப்பகுதி பெயர் பெறுகின்றது. இக்கருத்தை எடுத்துக்கூறுவதாக,
“நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ” (புறம்187)
என்ற புறநானூற்றுப் பாடலில். பள்ளத்தை வழங்க அவல் என்ற சொல்லும், மேட்டைக்குறிக்க மிசை என்ற சொல்லும் பழங்காலம் முதற்கொண்டு வழங்கிய கலைச்சொற்கள் என்ற குறிப்பை அறியமுடிகிறது.
நிலம் என்பது அனைத்துவகை நிலப்பகுதிகளையும் குறிக்கும் பொதுச்சொல். மாநிலம், நிலவரை என முன்னும் பின்னும் ஒட்டுச் சேர்த்தும் இப்பெயர் வழங்கப்பெறும். ஞாலம், உலகம், வையம் என்பனவும் நிலத்தைக் குறிக்கும் பிறசொற்களாக உள்ளன.
நிலத்தை வன்புலம் மென்புலம், விடுநிலம் என்று பிரித்தரிந்து விவசாயம் செய்துள்ளனர். மேலும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் என்ற நானிலத்தின் விளைநிலங்களையும் பிரித்தறிந்து பார்த்துள்ளனர். நிலங்களைக் குறிக்கும் சொற்கள் பல நிலைப்பெற்ற கலைச்சொற்களாக உள்ளன. விவசாயத்தில் தமிழர்கள் தலைசிறந்தவர்கள் என்பதனையும், தமிழனால் எதையும் செய்யமுடியும் என்பதனையும் இது எடுத்துரைக்கின்றன.
1.குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த நிலப்பகுதியுமாகும். இந்நிலத்தில் புன்செய் பயிரிடும் நிலத்தைத் துடவை (பெரும்.201) என அழைத்துள்ளனர். மரங்களை அழித்து விளைநிலமாக்கப்படும் புதிய புனத்தை ‘இதை’ என்றும் பழமையான விளைநிலத்தை ‘முதைபுனம்’ என்றும் அழைத்துள்ளனர்.
2.முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த நிலப்பகுதியாகும். இங்குள்ள நிலத்தைக் கொல்லை எனவும், மரங்கள் நிறைந்த பகுதியைப் புறவு, கானம், பாட்டம், தோட்டம் எனவும் பெயரிட்டு அழைத்துள்ளனர். மேலும் முல்லை நிலத்தைக் குறிக்கச் “சங்க இலக்கியங்களில் காடு, கானம், குறும்பொறை, கொல்லை, செந்நிலம், செஞ்சுவம், புறவு, புனம், புன்புலம், மென்புலம், முரம்பு, வன்புலம்” போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. (வி.சி. சசிவல்லி, பண்டைத்தமிழர் தொழில்கள்) இச்சொற்களில் பல இன்றும் வழக்கில் இருந்து வருகின்றன.
3.மருதம் வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதியுமாகும். கழனி, வயல், பழனம், செறு ஆகிய சொற்கள் மருத நிலத்தைக் குறிக்கும் சொற்களாகும். கழனி என்பது சேற்றுவயலையும், பழனம் என்பது நெல்வயலையும் குறிக்கும் சொற்களாகும். வயல் என்பது விளைநிலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கழனி என்ற சொல் 67 இடங்களிலும், பழனம் என்பது 16 இடங்களிலும், வயல் என்பது 52 இடங்களிலும் வந்துள்ளது. இச்சொற்கள் பரவலாக தமிழகத்தில் இன்றளவும் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
- நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் நிலமாகும். இந்நிலத்தில் மழைபெய்தால் நெல்விளையும், மழை பெய்யாவிட்டால் உப்பு விளையும். இந்நிலத்தில் உள்ள நிலப்பகுதிகளை அடைகரை, எக்கர், பரப்பு, கழி, கழனி, கானம் என்றெல்லாம் அழைத்துள்ளனர். எக்கர் என்ற சொல் 54 இடங்களிலும், பரப்பு என்பது 62 இடங்களிலும், கழனி என்பது 171 இடங்களிலும், கானம் என்பது 130 இடங்களிலும் வந்துள்ளது.
மேற்கண்ட சொற்கள் நானிலங்களிலும் பயன்பாட்டின் அடைப்படையில் குறிக்கப்பட்டுள்ளன. இவை விவசாயத்தில் தமிழர் ஆழங்கால் பட்டுள்ளதைக் காட்டுவதாக உள்ளது.
தமிழகத்து நிலப்பகுதிகளை மண்ணியல் அடிப்படையில் இன்றைய அறிவியலார் ஐந்து கூறுகளாக வகுத்துரைக்கின்றனர்.
செம்மண் – Red Soil
கரிசல் மண் – Black Soil
வண்டல் அல்லது அடை மண் – Alluvial Soil
செம்புறை மண் – Laterite Soil
மணற்பாங்கான மண் – Sandy Soil
இங்கு குறிக்கப்பெற்ற வண்டல் மண் மருத நிலத்தில் ஆற்றுப்படுகைகளில் மிகுதியாக உள்ளது. செம்புறை மண் மலைப்பாங்கான நிலப்பகுதிகளில் அதாவது குறிஞ்சி நிலத்தில் அமையும். மணற்பாங்கான மண் கடற்கரைப் பகுதிகளாகிய நெய்தல் நிலத்துக்குரியது. முல்லை நிலப்பகுதிக்குச் செம்மண் அமைப்பு உரியது. எஞ்சிய கரிசல் மண் மிகுதியான அளவு நன்புலத்துக்கும் சிறுபான்மை புன்புலத்துக்கும் உரியதாகக் கொள்ளலாம். நன்புலம் இயற்கை நீர்வளம் உடைய நிலப்பகுதிகள், புன்புலம் செயற்கை நீர்வளம் உடைய நிலப்பகுதிகள். இன்றைய அறிவியல் செய்தியை அறிவியல் என்று அறியாமல் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெளிவான உண்மையாகும்.
நீர் மேலாண்மையில் கலைச்சொற்கள்
நாட்டு வளத்திற்கு அடிப்படைக் காரணியாக விளங்குவது நீர்வளம், நீர் வளத்தைத் தரும் வற்றாத பேராறுகள் நாட்டின் செல்வமாகத் திகழ்பவை. உயிர்களுக்கு அமுதாய்த் தாய்ப்பால் விளங்குவதுபோல் பயிர்களுக்கு நீர்வளம் இன்றியமையாதது. பிள்ளையின் வளர்ச்சிக்கு உரிய பாலாக விளங்குவது தாய்ப்பாலே. ஆவின் பாலும் பிறவகைப் பாலும் உயிர் வளர்க்கும் ஆற்றல் உடையவை எனினும், தாய்ப்பாலை நோக்க அவற்றிற்கு அடுத்த இடமே பொருந்தும். அதுபோல் பயிரின் வளர்ச்சிக்கும் பிறவகை நீர்ப்பாசன முறைகள் இருப்பினும் ஆற்றுப் பாசனமே சாலச்சிறந்தது. ஆற்று வெள்ளத்தில் பலவிடங்களில் அமைந்த வளங்கள் ஒருசேர அடித்து வரப்பட்டுச் சேர்க்கப்படுவதால் பயிரின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்து வளமனைத்தும் கொண்டுள்ளன. எனவே ஆற்றுப் பாசன முறையே உயர்ந்தது என்று வேளாண்மை அறிவியல் நுட்பத்தைச் சங்க இலக்கியங்கள் விளக்குகின்றன. தமிழ்நாட்டின் எல்லைக்குள் மொத்தம் 33 ஆற்றுப் படுகைகளும், அந்த ஆறுகளுக்கு எண்ணற்ற துணையாறுகளும் உள்ளன. காவிரியும் வைகையும் சங்க இலக்கியத்தில் பெரிதும் இடம்பெற்றுள்ளன. அடுத்து ஆன்பொருநையும், பொருநையும், பெரியாறும் இடம் பெறுகின்றன. அரிசிலாறு, காஞ்சி, குமரி, சிலம்பாறு, சுள்ளியம், பேரியாறு, சேயாறு, பஃறுளி, பெண்ணை, வாணி என்ற ஆறுகளும் இடம்பெற்றுள்ளன. கங்கை, நர்மதா போன்ற வட இந்திய ஆறுகளுடன் ஒப்பிடும்போது நமது ஆறுகளின் நீர்வளம் மிகக்குறைவு. எனவே நீர்வளத்தைக் கருத்திற்கொண்டு கிடைக்கிற நீரை விரயமின்றிச் சிக்கனமாகப் பயன்படுத்துதல் நீர் மேலாண்மையில் ஒரு சிறந்த தொழில்நுட்பம். இலக்கியச் சிறப்புப்பெற்றிருந்தாலும் நீர் மேலாண்மை ஆய்வுக்கு ஆறுகள் பற்றிய விவரம் இன்றியமையாதது. மருத நிலம் ‘விழைவுஅறா வியன் கழனிகளை’ பெற்றிருந்ததற்கு இந்த ஆறுகளே காரணமாகும். நிலத்தில் நீர் அதிகமாகத் தேங்கி இருந்தாலும் அல்லது நிலத்தில் நீர் இல்லாமல் இருந்தாலும், பயிர்கள் நன்றாக வளர்ந்து அதிக மகசூலைத் தருவதில்லை. இவை இரண்டுக்கும் இடையே, பயிர்களின் இக்கட்டு நிலையறிந்து, நீர்த்தேவையைக் கருத்திற்கொண்டு பாசனம் செய்வது நல்லது.
ஒரு நாட்டின் வளமும் நலமும் நீர்வளத்தைப் பொருத்தே அமையும் என்பது பண்டைத் தமிழர் கொண்ட கொள்கையாகும். விதைத்துவிட்டு வானத்து மழையை நோக்கும் புன்செய் நிலம் மிகப்பெரிய அளவினதாயினும் ஓர் அரசனது வெற்றிக்கு அது பயன்படாது. அதனால் பள்ளமான பகுதிகளில் நீர் நிலைகளை உருவாக்கியோரே இவ்வுலகில் தம் புகழை நிலைநிறுத்தியோராவர்.
“வித்தின் வான்நோக்கும் புன்புலம் கண்ணகல்
வைப்பிற்று ஆயினும் நண்ணி யாளும்
இறைவன் தாட்கு உதவாதே” (புறம்.18;24-26)
என்று புலவர்கள் மன்னர்கட்கு நீர்நிலைகளை அமைக்க வேண்டியதன் இன்றியமையாமையை எடுத்துரைத்தனர். ஆதலால் நிலையான வேளாண்மைக்குக் குறைவில்லா நீர்வளம் தேவை என்பதைப் பண்டைநாள் தொட்டே மக்கள் உணர்ந்து வந்துள்ளனர். இத்தகைய நீர்நிலைகளை உருவாக்கிக் கொடுப்பது மன்னர்கள் கடமையாகும். அத்தகையவனே உடம்பையும் உயிரையும் படைத்தவனாகவும் கருதப்பட்டான் என்பதனை
“உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்தசி னோரே” (குடபுலவியனார்)
என எடுத்துரைத்துள்ளனர். நீர் நிலைகள் மன்னர்கள் அமைக்கவேண்டும் என்பது தலையாயக் கடமையாக இருந்துள்ளது. புலவர்கள் அரசர்களை வாழ்த்தும்போதும் நாட்டின் நீர்வளம் பெருக்கவேண்டியதன் இன்றியமையாமையை உணர்த்தும் வகையில் ‘சோறும் நீரும் ஆகிய இருமருந்து விளைக்கும் நன்னாட்டுப் பொருந’ என்றும் ‘நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென ஆளும் வேந்தே’ என்றும் விளித்துப் பாடியது குறிப்பிடத்தக்கது. ‘தீம்புனல் உலகம்’என்று போற்றப்படும் சிறப்பு வாய்ந்த மருத நிலத்தில் வளம்சான்ற ஆறுகள் பாய்ந்து வேளாண்மைக்கு வளம் சேர்த்தன.
நீர்ப்பாசனத்தைப் பொறுத்தவரை, நிலத்தின் மேல்மட்ட நீரேயன்றி, நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் முறை பற்றிய ஆராய்ச்சியும் கிடைக்கும் நீரைச் சேதமின்றிப் பயன்படுத்தப் பல்வேறு நீர்ப் பாதுகாப்பு முறைகளும் அறிவியல் நோக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் தட்பவெப்பநிலை, பயிர்வகை, நில இயல்பு ஆகியவற்றைப் பொறுத்து நீர்ச் சேதத்தைத் தவிர்க்க மேற்பரப்புப் பாசன முறை (Surface irrigation), வேரின் கீழ்மட்ட நீர்ப்பாசன முறை (sub/surface irrigation), தெளிப்பு நீர்ப்பாசனம், சொட்டுநீர்ப் பாசனம், ஆடல்ஸ் ஆகிய பல்வேறு நவீன நீர்ப்பாசன முறைகள் கண்டறியப்பட்டுள்ளன.
உழவியற் கலைச்சொற்கள்
உழவியல் செயல் முறைகளில், உழுதல், உரமிடுதல், களை மேலாண்மை, நீர்ப்பாய்ச்சுதல், பயிர்ப்பாதுகாப்பு என்ற ஐந்து கோணங்கள் இன்றியமையாதவை. இந்த ஐவகைக் கோணங்களையும் விளக்கும் வகையில்,
“ஏரினும் நன்றாம் எருவிடுதல் கட்டபின்
நீரிலும் நன்றதன் காப்பு” (குறள்.1038)
என்ற திருக்குறள் அமைந்துள்ளது. உழுவதைக் காட்டிலும் உரமிடுதல் சிறந்தது. களை நீக்கியபின் நீர்ப்பாய்ச்சுவதைக் கட்டிலும் பயிர்ப் பாதுகாப்பு முக்கியமானது என்பது இக்குறள் காட்டும் கருத்து.
இலக்கியங்களில் உள்ள உழவுச் சொற்கள் பாரம்பரியத்தை விளக்குகின்றன. அதேபோல் பள்ளு இலக்கியங்களில் உள்ள உழவுச்சார்ந்த சொற்கள் வட்டார மணம் கொண்டதாக உள்ளதையும் காணமுடிகிறது. பண்டைத் தமிழர்களிடம் வழக்கிலிருந்த உழவுத் தொழில் சார்ந்த சொற்கள் கலைச்சொல்லாக்கத்திற்கு முதல் படியாக அமைந்திருப்பதைக் காணலாம்.
உழவுத்தொழில் சார்ந்த சில சொற்கள்
நம் தமிழர்கள் பேச்சுவழக்கில் பயன்படுத்தும் உழவுத்தொழில் சார்ந்த சில சொற்கள் கலைச்சொற்களாக விளங்குவதைக் காணமுடிகிறது. அவ்வகையான சொற்கள் இங்கு பொருள் விளக்கத்துடன் கொடுக்கப்படுகின்றன.
- நல்லேர் கட்டுதல், பொன்னேர் கட்டுதல்- நல்லேரு கட்டுதல், பொன்னேரு கட்டுதல்- வருடத்தின் முதல் நாள் நல்லநாள் பார்த்து கட்டும் ஏர்.
- சேடை வைத்தல்- சேடெ வெக்கிறது- உழுவதற்கு முதல்முதலில் வயலுக்கு தண்ணீர் வைத்தல்.
- தொளி கலக்குதல், தொளியடித்தல்- தொளிமிதித்தல்- ஏர் பூட்டி உழுதபின்னர் விதைப்பிற்கு ஏற்ற வகையில் சரிசெய்தல்.
- விதையிடுதல்- வெதெவுடுதல்- உழுது பண்படுத்தப்பட்ட வயலில் விதையைத் தெளித்தல்.
- தெளியடித்தல்- தெளியடித்தல்- விதையிடுவதற்கு முன் கலங்கல் நீர் வடிகட்டுதல்.
- நாற்று முளைத்தல்- நாத்து மொளச்சிடுச்சி- விதைத்த விதை முளைவருதல்.
- சிலுப்பு நீர்க்கட்டுதல்- மிகக்குறைந்த அளவு மட்டுமே நீர்க்கட்டுதல்.
- கங்களவு நீர்ப்பாய்ச்சுதல்- கங்கு நீர்ப் பாச்சுதல்- நாற்று முளையின் அளவிற்கேற்பச் சீராக நீர்ப்பாய்ச்சுதல்
- வெட்டிவிட்டுச் சரித்தல்- வெட்டிவுடுதல்- நாற்றங்காலில் நீர் வடியவிடுதல்.
- நாற்றுக் குருத்தல்- நாற்று இளைத்து செறிந்து வளர்தல்
- நாற்று சமைத்தல்- நாத்துச் சமைத்தல்- நாற்றங்காலில் முளைத்த நாற்றுக்கள் பிடுங்கி நடுவதற்குரிய பருவத்தில் இருத்தல்
- தரிசடித்தல், முதல் ஓட்டு, தரிசு ஓட்டு – மொதெ ஓட்டு – நடுவதற்குரிய வயல்களை முதல்முறையாக உழுதல்.
- மறித்தடித்தல்- மரிச்சடித்தல்- இரட்டித்தல், மறுத்தடித்தல், இரண்டாவதுமுறை உழுதல்.
- இரண்டாஞ்சால் – ரெண்டாஞ்சாலு – நிலத்தை இரண்டாவது முறை உழுதல்.
- கிடை கட்டுதல்- கெடெ கட்டுதல் – உழவிற்கு முன்னை ஆடு, மாடுகளைக் கூட்டமாக இரவு முழுவதும் வயலில் அமர்த்துவது. நிலத்துக்கு வளம்சேர்க்கச் செய்யப்படும் செயல்.
- வேரூன்றல்- பயிர் புடிச்சிடுச்சி- பயிர்களை நட்ட பின்னர் மண்ணில் வேர்பிடித்து உறுதியாதல்.
- குறுத்துச் செறிதல், கிளை கொள்ளல், கணு வைத்து எழுதல், குளை இளைத்தல், தூர் கட்டுதல், தூர்வெடித்தல் – கப்பும் கிளையுமாகப் பயிர் வளர்தலைக் குறிக்கும் சொற்கள்
- மத்தாளித்தல், திமிரிப்போதல், அக்கிரோகமாக இருக்கு – மத்தலித்தல், அக்ரோமா இருக்கு – கதிர் விளைச்சல் வந்தும் மகசூல் கிடைக்காமலிருக்கும் பசுமை நீங்கிய நிலையில் காணப்படும் கதிர்.
- கருக்கொள்ளுதல், சூல் கொள்ளுதல், சூல் கட்டுதல் – கதிர் சூல் கொண்டு உருவாகுதல்.
- பொதி நீட்டுதல், பொதி கட்டுதல், பொதி பயிர், சூல் பயிர் – சூல் கொண்ட கதிர்கள் மெல்லத் தலை நீட்டுதல்.
மேற்கண்ட வேளாண்மைக் கலைச்சொற்கள் தமிழின் கலைச்சொல் வளத்திற்கு எடுத்துக்காட்டாகும். எனவே தமிழில் முடியாது எனச் சொல்ல முடியாது. தமிழிலியே முயன்றால் தமிழில் கலைச்சொற்கள் பெருகும் என்பது உண்மையாகும்.
துணைநூற்கள்
1.சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்) 1940, சு. வையாபுரிப்பிள்ளை, பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு.
2.இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு, 2-ஆம் பதிப்பு 1958, வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,.
3.சுப்பிரமணியன்.ச.வே. (ப.ஆ.), 2008, சங்க இலக்கியம், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை.
*****
கட்டுரையாளர் – முதுநிலை ஆய்வு வல்லுநர்
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
தரமணி, சென்னை – 600113.
அருமை!வாழ்த்துகள்!